குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ்
Jump to navigation
Jump to search
குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டில் பாடிய நூல்களில் ஒன்று. இது முழுமையாகக் கிடைக்கவில்லை. சிதைந்து கிடந்த பாடல்களைச் செப்பம் செய்து பண்டிதர் உலகநாத பிள்ளை 1933இல் வெளியிட்டார். அந்தப் பதிப்பில் 103 பாடல்கள் உள்ளன. இவற்றில் இடையிடையே சில பாடல்களில் சில அடிகள் இல்லை. இந்த நூல் பாட்டியல் இலக்கண நூல்கள் கூறும் பிள்ளைத்தமிழ் இலக்கண நெறியில் 10 பருவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பருவங்களும் பாடல்களும்:
- காப்பு 11
- செங்கீரை 11
- தால் 11
- சப்பாணி 11
- முத்தம் 11
- வாராணை 11
- அம்புலி 12
- சிறுபறை 7
- சிற்றில் 11
- சிறுதேர் 7
இந்தப் பாடல்கள் சந்தக்கவி விருத்தங்களாக உள்ளன.
- குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் முதலில் உலா பாடினார். பின்னர் பிள்ளைத்தமிழ் பாடினார் என்று இந்த நூலைப்பற்றிப் பிற்காலச் சங்கரசோழன் உலா குறிப்பிடுகிறது. [1]
- பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ் இதற்கு முன்னோடி. அதற்குப் பின்னர் முதன்முதலாகத் தோன்றிய பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியம் இது.
- குலோத்துங்கனை இந்த நூல் ‘எதிலாப் பெருமாள்’, ‘அபயன்’ எனப் பலமுறை குறிப்பிடுகிறது. இவன் தில்லையில் செய்த திருப்பணியை ‘வேகம் நிரம்பு திருவீதி புலியூரில் செய்த பெருமாள்’ என்று இந் நூல் குறிப்பிடுகிறது. ஓரிடத்தில் மட்டும் இவனை இந் நூல் ‘இராசேந்திர சோழன்’ எனக் குறிப்பிடுகிறது.
- இந்தக் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்திகள் ‘பூ மன்னு’ என்னும் தொடரில் தொடங்குகின்றன. அதுபோலவே இந்த நூலும் ‘பூமன்னு பொழில் ஏழும்’ என்று தொடங்குகிறது.
- நூலில் வரும் பாடலடிக்கு எடுத்துக்காட்டு.
மல்லையில் வழங்குமிள வேறுமுது கஞ்சன்
- வஞ்சவய வேறுபடி யத்தழுவு மல்லா
முல்லையில் வெறுஞ்சில துழாய்கமழ் முகுந்தா
- முன்பொருவ லம்புரி முழங்குமுகில் வண்ணா
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑
கூடிய சீர்தந்த கூத்தனார் என்றெடுத்துச்
சூடிய விக்கிரம சோழனும் - பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும்