குமுதினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமுதினி
Kumuthini.jpg
இயற்பெயர் குமுதினி
புனைபெயர் குமுதினி
பணி எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
வகை கட்டுரைகள், கடிதங்கள், நாடகங்கள், புதினங்கள், மொழிபெயர்ப்புகள்

குமுதினி (1905-1986) சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரைகள் எழுதிய படைப்பாளியாகவும் மொழிப்பெயர்ப்பாளராகவும் விளங்கியவர். 1930-40 ஆம் ஆண்டுகளில் ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், மங்கை போன்ற இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். தமிழ், சமசுக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். இவையன்றி வங்காளம், குசராத்தி, இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். காந்தியக் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். பெண்களின் அவலநிலைகளைத் தம் படைப்புகளில் காட்டியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. தந்தை சீனிவாச ஆச்சாரியார்; தாய் இலக்குமி அம்மாள். பெற்றோர்கள் இருவரும் கல்வியில் சிறந்தவர்களாக இருந்ததால் குமுதினி வீட்டில் இருந்தவாறு தமிழும் சமசுக்கிருதமும் கற்றார். இலக்கிய ஆர்வமும் இளமையிலேயே ஏற்பட்டது.

எழுத்துச் சாதனைகள்

கட்டுரைகள்

1930 களில் குமுதினி ஆனந்த விகடனில் ’பொழுது போக்கு’ என்னும் தலைப்பில் பல கட்டுரைகள் எழுதினார். பல்வேறுத் தலைப்புகளில் இதழ்களில் இவர் எழுதிய சில கட்டுரைகள் 'சில்லறை சங்கதிகள்' என்னும் தொகுப்பாக 1948 இல் வெளியிடப்பட்டன. குமுதினியின் பல கட்டுரைகள் பயணங்கள் குறித்தவையாகவும் இருந்தன. ராசசுத்தான் குசராத்து போன்ற மாநிலங்களுக்கும் துவாரகை, ஆக்ரா, இமாலயம், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்த அனுபவங்களைத் தம் கட்டுரைகளில் எழுதினார். மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுதினார்.

மொழிபெயர்ப்புகள்

சமய, ஆன்மீக நூல்களை மொழி பெயர்ப்பதில் ஆர்வம் கொண்டார். நம்மாழ்வாரின் நூறு பாசுரங்கள் இவரால் மொழியாக்கம் செய்யப்பட்டு நூலாக வெளிவந்தது. ஜே. சி. குமரப்பாவின் ஒரு ஆங்கில நூலை 'ஏசுநாதர் போதனை' என்னும் பெயரில் தமிழாக்கம் செய்தார். ’கிராம இயக்கம்’ என்னும் நூலையும் மொழி பெயர்த்தார். இரவீந்திர தாகூரின் 'யோகாயோக்' எனும் புதினத்தை மொழிபெயர்த்தார். பெண்களின் அவலநிலைகளைச் சுட்டிக் காட்டும் புதினம் இது.

நாடகங்கள்

1939 இல் ’குடும்பக் காதல்’ என்னும் ஓரங்க நாடகத்தை குமுதினி எழுதினார். இந்நாடகம் பொருளார்ந்த நகைச்சுவையுடன் எழுதப்பட்டது. 'விசுவாமித்திரர்', 'டில்லி சென்ற நம்பெருமாள்' என்னும் நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. திருவரங்கம் கோவிலில் உள்ள துலுக்க நாச்சியார் சந்நிதி உள்ளதை எண்ணிப் பெருமிதம் கொண்டு இந்து-முசுலிம் ஒற்றுமைக்கு வழிகோலும் துலுக்க நாச்சியார் பற்றி ஒரு நாடகம் எழுதினார். இந்நாடகம் திருவரங்கத்தில் 1975 ஆம் ஆண்டில் அரங்கேறியது. 'புத்திமதிகள் பலவிதம்' என்னும் நாடகம் 1981 இல் எழுதப்பட்டு அரங்கேறியது.

புதினங்கள்

குமுதினியின் சிறுகதைகளில் நகைச்சுவையும் அங்கதமும் பரவலாகக் காணலாம். இந்தி மொழி, கதர் தேசியம், விடுதலைப் போராட்டம், குழந்தை வளர்ப்பு எனப் பல விடயங்களைப் பற்றி குமுதினி எழுதினார். 'மக்கள் மலர்ச்சி' என்னும் இவரது நூல் 1944 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. ’திவான் மகள்’ என்னும் புதினம் சாதி மறுப்புத் திருமணத்தின் தேவையைச் சித்தரிக்கிறது. குடும்ப வாழ்க்கை, கணவன்-மனைவி உறவுகள் ஆகியனவும் பெண்களின் கல்வி, துணிவு, தொழில் போன்றனவும் குமுதினியின் படைப்புகளில் இடம்பெறுகின்றன. காவிரிக் கரையருகில் உள்ள திருவரங்கத்தின் வரலாறு அந்நகராட்சியின் செயல்பாடு கல்வி ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டுகிறார். நாட்டு மருத்துவம், சமையல் குறிப்புகள், யாத்திரை செய்யக் கூடிய புனிதத் தலங்கள் போன்ற பல செய்திகளைச் சேகரித்து 'சதாங்கம்: ஆயிரம் விஷயம்' என்று ஒரு பெரிய நூலை எழுதி வெளியிட்டார்.

பிற பணிகள்

காந்தியக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு குமுதினி கதராடை உடுத்திக் கொண்டார். கைக்குத்தல் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டார். வார்தா ஆசிரமத்தில் தங்கியிருந்தார். காந்தியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். திருவரங்கத்தில் வாழ்விழந்த பெண்களுக்காக ஒரு சங்கமும் பள்ளியும் தோற்றுவித்தார். காந்தியடிகளின் நினைவாகத் திருச்சியில் சேவா சங்கத்தைத் தோற்றுவித்தார்.

உசாத்துணை

குமுதினி, ஆசிரியர்:பிரேமா நந்தகுமார், சாகித்திய அகாதமி வெளியீடு

வெளியிணைப்புகள்

  • சென்ற நூற்றாண்டின் இணையற்ற பெண் எழுத்தாளர் குமுதினி பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
  • "Literary Review: Letters from the palace". தி இந்து. 3 ஏப்ரல் 2005. Archived from the original on 2013-07-17. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2014.
"https://tamilar.wiki/index.php?title=குமுதினி&oldid=23965" இருந்து மீள்விக்கப்பட்டது