குதம்பைச்சித்தர்
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர்.
குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால் குதப்பும் (சொதப்பும்) மனத்தைத்தான் குதம்பை என்கிறார். இவரது பாடல்கள் 33 உள்ளன.
பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.
வெட்டவெளிதான் மெய்மைநிலை[1]
ஞானி மெயப்பொருளைக் காணவேண்டும்[2]
ஞானி முத்தமிழைக் கற்று அதனைத் தழுவ வேண்டும்[3]
ஆனந்தம் பொங்கி அளவோடு இருக்கவேண்டும்[4] என்பன போன்ற கருத்துக்களை இவர் வாரி வழங்கியுள்ளார்.
இவரது பாடல்களில் சில இரட்டுற மொழிதலாக அமைந்துள்ளன.[5]
அடிக்குறிப்பு
- ↑
- வெட்ட வெளிதன்னை மெய்யென்(று) இருப்போர்க்குப்
- பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
- பட்டயம் ஏதுக்கடி
- ↑
- மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
- கப்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
- கப்பங்கள் ஏதுக்கடி
- ↑
- முத்தமிழ் கற்று குயங்கும்மெய்ஞ் ஞானிக்குச்
- சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
- சத்தங்கள் ஏதுக்கடி
- ↑
- ஆனந்தம் பொங்கி அளவோ டிருப்பார்க்கு
- ஞானந்தான் ஏதுகடி குதம்பாய்
- ஞானந்தான் ஏதுக்கடி
- ↑
- மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத்
- தேங்காய்ப்பால் ஏதுக்கடி
மா = இருள், காய் = காயம், பால் = ஊழின் ஊறல்,
மாங்காய்ப்பால் = இருண்டு கிடக்கும் உடலில் எண்ணமாய்க் ஊறும் பால்.
தன் எண்ணத்தைத் தானே உண்டுகொண்டு தன் உச்சிமலையில் வாழ்பவர்களுக்கு நாக்குக்கு இன்பம் தரும் தேங்காய்ப்பால் எதற்காக? – என்பது இவர் கேள்வி.
உசாத்துணை
- சித்தர்கள் வாழ்க்கை, பி.என்.பரசுராமன், விகடன் பிரசுரம்.
- சித்தர்கள் வாழ்க்கை வரலாறு.