கா. ம. வேங்கடராமையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கல்வெட்டறிஞர் கா. ம. வேங்கடராமையா (ஏப்ரல் 4, 1912 - ஜனவரி 31, 1994[1]) தமிழறிஞர். இவர் தமிழுக்கும், சமயத்துக்கும் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் பெற்ற பட்டங்கள்

  1. கல்வெட்டாராய்ச்சிப் புலவர்
  2. செந்தமிழ் கலாநிதி
  3. தமிழ் மாமணி என பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தமிழுக்கும் சமயத்திற்கும் ஆற்றிய பணிகள்

எழுதிய நூல்கள்

  1. ஆய்வுப் பேழை
  2. கல்வெட்டில் தேவார மூவர் (நூல்)
  3. இலக்கியக் கேணி (நூல்)
  4. கல்லெழுத்துக்களில் (நூல்)
  5. சோழர் கால அரசியல் தலைவர்கள் (நூல்)
  6. திருக்குறள் உரைக்கொத்து (நூல்)
  7. திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து (நூல்)|
  8. திருக்குறள் குறிப்புரை (நூல்)
  9. பன்னிரு திருமுறைப் பதிப்பு (நூல்)
  10. கந்தபுராணப் பதிப்பு (நூல்)
  11. திருவிளையாடற்புராணப் பதிப்பு (நூல்)
  12. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும் (நூல்)
  13. தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு (நூல்)
  14. சிவனருள் திரட்டு (நூல்) (500 பாடல்களுக்கு உரை, ஆங்கில மொழிபெயர்ப்பு)
  15. நீத்தார் வழிபாடு (நூல்)
  16. தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும் தமிழாக்கமும் (நூல்)
  17. திருக்குறள் பரிப்பெருமாள் உரையும் ஆய்வுரையும் (நூல்)
  18. திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும் (நூல்)
  19. மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு (நூல்)
  20. பெரியபுராணமும் - திருக்குறளும் (நூல்)
  21. திருக்குறள் சமணர் உரை (நூல்)

பதிப்பித்த நூல்கள்

இவர் பதிப்பித்த அனைத்து நூல்களிலும் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் கிடைப்பின் அவற்றையும் குறிப்பிடுவது வழக்கமாகும்.

1949 இல் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல்தான் இவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது.

காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார். பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகள் தரப்பட்டுள்ளன.

"தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்" என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். மெக்கன்சி சுவடி, போன்ஸ்லே வம்ச சரித்திரம் போன்றவற்றின் துணைகொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இவரது நூல்கள் தமிழ்நாட்டு அரசால் பதினைந்து இலட்சம் தொலைக் கொடுத்து நாட்டுடைமையாக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

  1. "Venkataramiah: இரங்கல் உரை". Venkataramiah. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  2. "State to purchase copyrights of Venkataramiah's works". The Hindu (in English). 2011-02-15. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கா._ம._வேங்கடராமையா&oldid=26035" இருந்து மீள்விக்கப்பட்டது