காதம்பரி
காதம்பரி என்னும் தமிழ் இலக்கியம் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
ஹர்ஷர்
அர்சவர்த்தனர் (ஹர்சவர்த்தனர்) அவைக்களப் புலவர் பாணபட்டர் இதனை வடமொழியில், உரைநடையில் எழுதினார். அது 12000 கிரந்தங்களைக் (எழுத்துக்களைக்) கொண்டது. பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பகுதிகளைக் கொண்டது.
ஹர்ஷர் 606-647-ஆம் ஆண்டுகளில் ஹரியானா மாநித்திலுள்ள தானேஸ்வரத்தைத் தலைநகராகக் கொண்டு சற்றேறக்குறைய இன்றுள்ள வட இந்தியா முழுவதையும் ஆண்ட பேரரசர். நாகானந்தா, ரத்னாவளி, பிரியதர்சினி என்னும் நூல்களை வடமொழியில் இயற்றியவர். ஹர்ஷ-சரிதம் என்னும் பெயரில் தன்-வரலாற்றையும் எழுதிவர்.
கந்தருவப்பெண் காதம்பரி
உஜ்ஜயினி நகரத்து அரசன் சந்திரபீடன். இவன் கந்தருவப் பெண் காதம்பரியைக் காதல் திருமணம் செய்துகொள்கிறான். இந்த வரலாற்றைக் கூறும் நூல் காதம்பரி. காதம்பரி நூலின் சுவை அறிந்தவர்களுக்கு உணவுகூடச் சுவைப்பதிலை என்னும் பொருள்படும் வடமொழிப் பழமொழி ஒன்று உண்டு. [1]
ஆதிவராக கவி
தமிழ்க் காப்பியமான காதம்பரி இரண்டு பகுதிகளாக உள்ளது. முதல் பகுதிக்குப் ‘பூர்வ காதம்பரி’ என்பது பெயர். இதனைப் ‘பட்டபாண கவி’ என்பவர் இயற்றினார். இவரை ‘ஆதிவராக கவி’ என நூலின் பாயிரப்பகுதியிலுள்ள பாடல் குறிப்பிடுகிறது. இரண்டாம் பாகத்தின் பெயர் ‘உத்தர காதம்பரி’. இதனை அவரது மகன் இயற்றினார்.
ஆதிவராக கவியின் தந்தை அருளாளர் என்னும் அந்தணர். பொருளாகரன் என்பவரின் தம்பி. இவர்கள் சோழநாட்டில் வாழ்ந்தவர்கள்.
நூல் செய்த காலம் கி.பி. 1411 [2] திருமால், சிவன், கலைமகள், வேழமுகவன், முருகன் ஆகிய வழிபாட்டுப் பாடல்களுக்குப் பின் நூல் விரிகிறது.
இவர் காதம்பரி வரலாற்றைச் சுருக்கமாகத் தந்துள்ளதை அவரே குறிப்பிடுகிறார்.
- பாற்கடல் சென்ற பூசை பாலின்மேல் ஆசை வைத்து
- மேற்கொள வரினுப் எல்லா வெள்ளமும் கொள்ள வற்றோ
- பாற்கடல் அன்ன காதம் பரிக்கடல் பரப்பில் ஆசை
- மேற்கொளும் என்றன் நெஞ்சம் வேண்டுவ கொள்ளும் அன்றே.
தமிழ்க்காப்பியம்
தமிழ்க்காப்பியம் காதம்பரி பாயிரப்பாடல் 14, நூல்பாடல் 1218, ஆகமொத்தம் 1232 பாடல்களைக் கொண்டது. [3]
அடிக்குறிப்பு
- ↑ பாணோச்சிஷ்டம் ஜகத் ஸர்வம்
- ↑ கலி ஆண்டு 4512.
- ↑ பாலசரஸ்வதி என்னும் பட்டம் பெற்ற பி.ஆர். கிருஷ்ணமாச்சாரியார் இதனைப் பற்றிச் ‘செந்தமிழ்’ என்னும் மாத இதழில் தொகுதி 5, பகுதி 10, ஆண்டு 1912 ஒரு கட்டுரை எழுதினார். பின்னர் நூலை முழுமையாகவும் தொகுத்து வெளியிட்டார். வெளியிட்டவர் ஸ்ரீரங்கம் வக்கீல் ஜே. கிருஷ்ணய்யங்கார். இந்த நூலில் மூலமும், கிருஷ்ணமாச்சாரியார், தமிழ்ப்பண்டிதர் குரு சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் செய்த 188 பக்கம் கொண்ட விரிவான வசனமும், 17 பக்கம் கொண்ட அரும்பதவுரையும் இருந்தன. ஆனால் பின்னர் ஏற்பட்ட ஒரு பூசல் காரணமாக அச்சிட்ட புத்தகங்கள் அனைத்தையும் கொளுத்திவிட்டார்களாம்.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005