காசிவாசி செந்திநாதையர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காசிவாசி செந்திநாதையர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
காசிவாசி சி. செந்திநாதையர்
பிறந்ததிகதி (1848-10-02)2 அக்டோபர் 1848
பிறந்தஇடம் குப்பிளான், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு 15 மே 1924(1924-05-15) (அகவை 75)
அறியப்படுவது தமிழறிஞர்

காசிவாசி சி. செந்திநாதையர் (அக்டோபர் 2, 1848 - மே 15, 1924) ஈழத்துத் தமிழறிஞர். கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதிப் புகழ் பெற்றவர். நல்லூர் ஆறுமுக நாவலரைக் குருவாகக் கொண்டவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்தனர். தமிழ்நாட்டில் 1904 ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் நா. கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக நின்றவர். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்துக் குப்பிளான் கிராமத்தில் ஸ்ரீசிந்திய ஐயர்-கௌரியம்மாளுக்கு 1848 ஐப்பசி 2 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் செந்திநாதய்யர். இவரது இயற்பெயர் அகோரசிவம். காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழி நூல்களை ஆய்ந்தார். இதனால் இவர் காசிவாசி செந்திநாதையர் என அழைக்கப்பட்டார். காசி வாழ்க்கைக்குப் பின் தமிழகத்தில் வாழ்ந்த செந்திநாதையர், திருப்பரங்குன்றத்தில் 'வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை' என்ற பாடசாலையை நிறுவிப் பணி புரிந்தார்.

கல்வியும் ஆசிரியப்பணியும்

கதிர்காம ஐயரிடம் தமிழ், வடமொழியையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலத்தையும், நல்லூர் சம்பந்தம்பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்றார். ஆறுமுக நாவலரின் வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆறு ஆண்டுகளும், நாவலர் ஆங்கில வித்யா சாலையில் ஓராண்டும் ஆசிரியராகப் பணியாற்றினார். திருப்பரங்குன்றத்தில் வைதீக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்யாசாலையை நிறுவி அங்கு தமிழ், ஆங்கிலம், வடமொழி நூல்களைப் போதித்தார். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த, கஜனமனோ ரஞ்சனி எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

எழுத்துப் பணி

வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர் செந்திநாதையர். அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணினார். இதன் விளைவாக மூல நூல்களை ஆராய்ந்து, அதன் விளக்கமாக அமைந்த சில கருத்துக்கள் மூல நூலிலுள்ளவற்றை மாற்றியும் திரித்தும் வெளிவந்தவை எனக் கண்டார். இவற்றை விளக்குவதாக இவர் எழுதிய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் என்ற நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆராய்ச்சி முகவுரையாக இரு நீண்ட உபக்கிரக மணிகைகள் எழுதியுள்ளார். ஒன்று உபநிடத உபக்கிரக மணிகை. மற்றையது பிரம சூத்திர உபக்கிரக மணிகை. தர்க்க முறையிலும் கதைகள் மூலமும் பிரம சூத்திரத்தில் காணும் கருத்து வேறுபாடுகளையும், மயக்கங்களையும் செந்திநாதையர் விளக்குவது அன்றிருந்த வழியிலிருந்து வேறுபட்டிருந்தது.

பின்வந்த உபநிடதங்களே வேதாந்தம் என்று பலர் கூறுவர். இது காரணப் பெயராக வந்தது. வேதம் காட்டும் ஆத்மானந்த அனுபவமே வேதாந்தம் என்பதன் பொருள், அது காரண இடுகுறிப் பெயராக வந்தது, என்பது செந்திநாதையரின் கருத்து. அவரின் 'சைவ வேதாந்தம்' என்னும் நூல் இதனை விளக்குகிறது. வேதங்களிலுள்ள கருத்துக்களையும் தேவாரத்திலுள்ள கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு எழுதப்பட்ட நூல் 'தேவாரம் வேதசாரம்'.

கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற நூல்களை, மக்கள் தேவை கருதி, எளிமையான வசனநடையில் எழுதியவர் ஆறுமுக நாவலர். அவற்றின் உள்ளார்ந்த சித்தாந்தக் கருத்துக்களையும் கொள்கைகளையும் விளக்கும் நோக்குடன் செந்திநாதையர் எழுதினார். இந்த வகையில் எழுதப்பட்ட ஒரு நூல் 'கந்தபுராண நவநீதம்'.

சிவஞானபோதத்துக்கு உரையாக அமைந்தவை சிவஞானமுனிவரின் சிற்றுரையும் பேருரையாகிய பாடியமும். இவை எல்லோராலும் எளிதில் விளங்க இயலாதவை. சிவஞானபோதத்தை எளிதில் விளக்கும் நோக்கில் செந்திநாதையர் எழுதிய உரைநூல் 'சிவஞானபோத வசனாலங்கார தீபம்'. 1917-ல் வெளிவந்த இந்நூலின் முன்னுரையில், 'யாம் பெரும்பான்மையும் மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தருளிய உரையைத் தொடர்ந்தே இதனை எழுதினோம்' என்று செந்திநாதையர் குறிப்பிடுகிறார்.[1]

எழுதிய நூல்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு)
  • கந்தபுராணம் நவநீதம்
  • ஞான இரத்தினாவளி
  • சைவ வேதாந்தம்
  • தேவாரம் வேதசாரம்
  • சிவஞான போத வசனாலங்கார தீபம்
  • வஜ்ரடங்கம்
  • வைதீகசுத்தாத்துலித சைவசித்தாந்தத் தத்துவப்படம்
  • ஸ்ரீசீகாழிப் பெருவாழ்வின் சீவகாருண்யமாட்சி

முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் படைத்துள்ளார்.

நீலகண்ட பாடியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சிறப்புகள்

திருவனந்தபுரம் பல்கலைக்கழகம் இவரது மும்மொழிப் புலமையைப் பாராட்டியுள்ளது. ஆறுமுக நாவலர் இவர் திறனைப் பாராட்டி, நன்னடத்தைப் பத்திரிக்கை எனும் சான்றிதழ் அளித்துள்ளார். செந்திநாத சுவாமி எந்திர சாலை எனும் பெயரில் அச்சகம் நிறுவிப் பதிப்புப் பணிகள் பல புரிந்துள்ளார்.

பட்டங்கள்

செந்திநாதையருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.

மறைவு

இவர் 1924 மே 15 அன்று மறைந்தார்.[2]

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-05-03.
  2. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், சி. கணேசையர், 1939
  • மெய்கண்டார் (திருவாவடுதுறை ஆதீனத் திங்களிதழ்) இதழ்-5; மலர்-26, ஏப்ரல் 2008.

வெளி இணைப்புகள்

Vaidika Saiva Siddhanta (ஆங்கிலம்)

"https://tamilar.wiki/index.php?title=காசிவாசி_செந்திநாதையர்&oldid=15009" இருந்து மீள்விக்கப்பட்டது