கள்ளர் வெட்டுத் திருவிழா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ் பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் ஐயனார் கோவிலில் கூடுகிறார்கள்.[1] இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழியில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முப்பதாவது நாள் நடைபெற்று வருகிறது. திருவிழா கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 28ம் நாள் திருநெல்வேலி பாளையங்கோட்டை ‌இடையர் இனத்தைச் சேர்ந்த மாலையம்மன் ஐவராசா குடும்பத்தினா் நடத்தும் மாலையம்மன் ஐவராசா பூசையுடன் தொடங்கி கள்ளர் வெட்டு முடிந்த மறுநாள் திருநெல்வேலி தச்சநல்லுார் இடையர் இனத்தைச் சேர்ந்த முன்னடி பட்டறைதாரர் நடத்தும் படப்பூசையுடன் முடிவடைகிறது.[2]

வரலாறு

பாண்டிய மன்னனிடம் கைகட்டி மனித உருவில் சேவகம் பார்த்தவர்தான் இந்த கற்குவேல் ஐயனார் என்கிறது புராணம். ஐயானாரின் ஆளுகைப் பகுதிக்குள் நுழைந்து பொருட்களைத் திருடிச் சென்ற திருடனான கள்வரை ஐயனாரின் படைத்தளபதியான வன்னியராஜா வெட்டும் நிகழ்ச்சிதான் கள்ளர்வெட்டு.[3]

வருடந்தோறும் அய்யனாருக்கு அருகில் கோயில் கொண்டுள்ள பேச்சியம்மனுக்கு திருவிழா எடுப்பது பூசாரிகளின் வழக்கம். ஒருநாள் திருவிழா நடத்தி முடித்துவிட்டு இரவானதும் பூசாரிகள் ஊருக்குள் திரும்பிவிட்டனர். இரவு நேரத்தில் பேச்சியம்மன் கோயிலுக்குள் புகுந்த கள்வன் ஒருவன், அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு வெளியேறினான். கோயிலை விட்டு அவன் வெளியே வந்தவுடன் அவன் பார்வை இழந்தான். தட்டுத் தடுமாறினான்.[4]

அப்படியே மேற்கு நோக்கிச் சென்றான். அங்கே காவல் தெய்வமாக வீற்றிருந்த வன்னியராஜா கோபம் கொண்டு அவன் தலையைத் துண்டித்தார். ரத்தம் பீறிட மண்ணில் சாய்ந்தான் கள்வன். இந்தக் காட்சிகள் எல்லாம் ஊரில் தூங்கிக் கொண்டிருந்த பூசாரிகளின் கனவில் அப்படியே வந்தன. உடனே கிளம்பிச் சென்று பார்த்தனர். கள்வனின் தாயார் அய்யனிடம் முறையிட்டு அழுது கொண்டிருந்தாள். உடனே கருணை மிகுந்த அய்யன் கோயில் பூசாரியை அழைத்து, ‘தலை துண்டிக்கப்பட்ட கள்வன் மீது புனித நீரை தெளியுங்கள்... உயிர் பெறுவான்’ எனக்கூறி மறைகிறார். அதன்படியே உயிர் பெற்ற கள்வன் அய்யனின் திருவடியைச் சரணடைந்தான். அவர்கள் குடும்பத்தினரே வழிவழியாக இன்றும் கள்வன் சாமியாடியாக வருகிறார்கள்.[4]

அது முதல் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி மூன்று நாட்கள் இக்கோயிலின் விசேஷ நாட்களாக மாறின. கார்த்திகை முப்பதாம் நாள் கள்வர் வெட்டு திருவிழா விமரிசையாக நடக்கும். கார்த்திகை மாதத்தில் 29 நாட்கள் அமைந்தால், அடுத்து மார்கழி 1-ம் தேதிதான் கள்ளர் வெட்டு நடக்கும்.[4]

திருவிழா

கோயிலின் முன்னே உள்ள தேரிப்பகுதியில் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்படும். பின்பு பக்தர்கள் அங்கிருந்து புனித மண் எடுத்துச் செல்கின்றனர். இந்த புனித மணலை எடுத்து வீட்டில் பூஜை அறையில் வைத்தால் நன்மை நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.[5]

மேற்கோள்கள்

  1. "தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு திருவிழா - நாளை தொடங்குகிறது". Dailythanthi.com. 2020-11-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  2. "கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி". ta.shops-net.com. Archived from the original on 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  3. கற்குவேல் அய்யனார் கோயில்: கள்ளர் வெட்டுத் திருவிழா; பக்தர்கள் கூடி புனித மண் எடுத்தனர்!.
  4. 4.0 4.1 4.2 கனவில் வருகிறார் கற்குவேல் அய்யனார்.
  5. "Arulmigu Karkuvel Ayyanar Temple, Therikudieruppu - 628206, Thoothukudi District [TM038189].,ayyanar". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.

வெளி இணைப்புகள்