கலைமகள் ஹிதாயா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி |
---|---|
பிறந்ததிகதி | 1 ஏப்ரல் 1966 |
பிறந்தஇடம் | சாய்ந்தமருது , கல்முனை |
இறப்பு | நவம்பர் 23, 2020 | (அகவை 54)
தேசியம் | இலங்கை |
அறியப்படுவது | கலைமகள் ஹிதாயா |
பெற்றோர் | யூ. எல். ஏ. மஜீத், செய்னா |
கலைமகள் ஹிதாயா (ஏப்ரல் 1, 1966 – நவம்பர் 23, 2020) ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா ஆகிய பெயர்களில் இலக்கியம் படைத்து வந்த இலங்கை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
அம்பாறை மாவட்டம், கல்முனை தேர்தல் தொகுதியில் சாய்ந்தமருது கிராமசேகவர் பிரிவில் யூ. எல். ஏ. மஜீத், ஸைனப் தம்பதிகளின் புதல்வியாக பிறந்த இவர் கல்முனை மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரி, கல்எளிய அரபுக்கலாபீடம் ஆகியவற்றில் கல்வி பெற்றவர். இவரின் கணவர் பொல்காவலையைச் சேர்ந்த எம். ஆர். எம். ரிஸ்வி. இவர்களுக்கு ரிஸ்னா, ரிஸ்லா, ரிஸ்கா, ரிஸ்லான் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
இலக்கிய ஈடுபாடு
தான் கற்கும் காலத்திலிருந்தே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவரின் கன்னிக் கவிதை (புதுக்கவிதை) ஏப்ரல் 1. 1982ம் திகதி 'மீண்டும்` எனும் தலைப்பிலும், அதேதினம் சிந்தாமணி பத்திரிகையில் அன்னை எனும் தலைப்பில் மரபுக்கவிதையும் பிரசுரமானது. அன்றிலிருந்து மூன்று தசாப்தங்காலமாக மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை,மெல்லிசைப்பாடல்,விமர்சனம் என எழுதிவரும் இவர் 1000க்கு மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். அத்துடன் 30 சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
பிரசுரமான ஊடகங்கள்
இவரின் ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, தினபதி, வீரகேசரி, தினக்குரல், மித்திரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும், மற்றும் மல்லிகை, ஞானம், பாசமலர், தூது, அல்ஹஸனாத், கலைச்சுடர், இனிமை, கொழுந்து, சிரித்திரன், புதிய உலகம், சுவர், பூ, தூரிகை, யாத்ரா, விடிவு, நயனம், காற்று, கலை ஒளி, நவரசம், புதுயுகம், தினமுரசு, பார்வை, அழகு, இளநிலா, கண்ணாடி, மருதாணி, உண்மைஉதயம், நிதாஉல் இஸ்லாம் ஆகிய இதழ்களிலும், இந்தியாவிலிருந்து வெளிவரும் 'சமரசம்', அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் `தூண்டில்' ஆகிய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளிள் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.
வெளிவந்த நூல்கள்
- நாளையும் வரும் (புதுக்கவிதைத் தொகுதி).
- தேன் மலர்கள்-மரவுக் கவிதைத் தொகுதி. (இது இலங்கை முஸ்லிம் பெண் கவிஞரின் முதலாவது தொகுதி).
- இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை -புதுக்கவிதைத் தொகுதி (கவிஞர் மஸீதா புன்னியாமினுடன் இணைந்து 2000 ம் ஆண்டில் வெளியீட்டுள்ளார்.)
இவற்றுடன் கண்டி சிந்தனைவட்டத்தின் கவிதைத் தொகுதிகளான புதிய மொட்டுகள், அரும்புகள் ஆகியவற்றிலும், காத்தான்குடி கலை இலக்கிய வட்ட வெளியீடான மணிமலர்கள் மரபுக்கவிதைத் தொகுதியிலும், சாய்ந்தமருது நூல்வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான "எழுவான் கதிர்களிலும்" இன்னும் பல தொகுதிகளிலும் இவரது கவிதைகள் இடம்பெற்றன.
தடாகம் (சிற்றிதழ்)
இவரது இலக்கியப் பணியின் முக்கிய கட்டமாக தடாகம் கலை இலக்கியச் சஞ்சிகையைக் குறிப்பிடலாம். தடாகம் 12 இதழ்கள் வெளிவந்தன.
தடாகம் கலை இலக்கிய வட்டம்
இவரது தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கௌரவித்துள்ளார். சில நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்தாலும் கொழும்பு வெள்ளவத்தை உணவகம் சபயாரில் நாகபூசணி கருப்பையா எழுதிய "நெற்றிக்கண்" கவி நூலை வெளியிட்டு வைத்தார். தாரிக்கா மர்சூக் எழுதிய "மனங்களின் ஊசல்கள்" எனும் கட்டுரை தொகுதியின் வெளியிட்டு விழாவை குருநாகல் நகர மண்டபத்திலும், "இரட்டை தாயின் ஒற்றைக்குழந்தை" கவி நூல் வெளியிட்டு விழாவை கண்டி 'சிட்டி மிசன் ' மண்டபத்திலும், பெண்களுக்கான மையத்து குளிப்பாட்டல், கபனிடல் நிகழ்வினை குருநாகல் (தெளியாகொன்ன ராயல் ரிசப்சென்ட் மண்டபத்திலும். பொல்காவெலை நகர சபை மண்டபத்திலும் நடத்தியுள்ளார்.
பெற்ற கௌரவங்கள்
- கலைமகள் விருது 1985, சாய்ந்தமருது இஸ்லாமிய கலை இலக்கிய ஒன்றியம்
- 1988ல் இளைஞர் சேவைகள் மன்றமும், இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது.
- 1999 ஆம் ஆண்டு "ரத்ன தீப"சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்.
- 2002 இல் முஸ்லிம் கலாசார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமிய மா நாட்டில் வைத்து இளம் படைப்பாளிக்கான விருது.
- 2007 ம் ஆண்டு உயன்வத்தையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் "கலையரசு" விருது.
- 2009 இல் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீனால் நிந்தவூர், ஆர். கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில் (இலங்கை வானொலி அறிவிப்பாளர்) சார்பில் "கவித்தாரகை" பட்டம் பெற்று கெளரவிக்கப்பட்டார்.