கராத்தே மணி
கராத்தே மணி (Karate Mani, 1944 -1993 ) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட நடிகர், தற்காப்புக் கலைஞர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும், எதிர்மறைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
முன் வாழ்க்கை
கராத்தே மணி 1944 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின், சென்னையில் பிறந்தார். இவருக்கு சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலையான கராத்தேயில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதனால் இவர் ஜப்பானின் முன்னணி கராத்தே ஆசிரியர்களிடம் முறையாக கராத்தே கற்றார். கராத்தேயில் கறுப்புப் பட்டை பெற்ற முதல் தமிழர் இவராவார். கராத்தேவின் உயர்ந்த பட்டமான ‘ரென்ஷி’ பட்டத்தையும் இவர் பெற்றார். பின் இவர் 1965ம் ஆண்டு சென்னையில் முதல் கராத்தே பயிற்சி பள்ளியை துவக்கினார். மேலும் கராத்தே மணி டோக்கியோ கராத்தே பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[1]
திரைப்பட வாழ்க்கை
கராத்தேவால் பெற்ற புகழ்வழியாக இவர் தமிழ் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1980இல் அன்புக்கு நான் அடிமை படத்தின் வழியாக திரைப்படங்களில் அறிமுகமானார். தமிழ்த் திரைப்படத் துறையில் இரசினிகாந்தின் நெருங்கிய நண்பராகவும், திரைப்பட சண்டை பயிற்சியாளராகவும் ஆனார். ஆனால் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து திடீரென்று விலகி, தன் கரேத்தே பள்ளியில் கவனம் செலுத்தினார்.
குடும்பம்
கராத்தே மணிக்கு இருமகன்கள் உள்ளனர் ஒரு மகன் திரிசூல் பிரமுகர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.[2] இவரது இன்னொரு மகன் திரைப்படங்களில் எதிர்மறை பாத்திரங்களில் நடிப்பதாகவும் அறியப்படுகிறது. கராத்தே மணி தன் 50வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
நடித்த திரைப்படங்கள்
(இது முழுமையான பட்டியல் அல்ல)
- அன்புக்கு நான் அடிமை (1980)
- அஞ்சாத நெஞ்சங்கள் (1981)
- விடியும் வரை காத்திரு (1981)
- ரங்கா (1982)
- அதிசய பிறவிகள் (1982)
- வளர்த்த கடா (1983)
- தங்கக்கோப்பை (1984)
- நீதிக்கு ஒரு பெண் (1984)
புற இணைப்புகள்
குறிப்புகள்
- ↑ Ajju (2022-05-02). "50 வயதில் திடீர் மரணம், கராத்தே மணியின் 28 ஆம் ஆண்டு நினைவு நாள் - ஒரு சிறப்பு பார்வை." (in ta-IN). https://tamil.behindtalkies.com/karate-mani-death-anniversary-special/.
- ↑ "Karate Mani’s son debuts as hero". https://www.newindianexpress.com/entertainment/review/2012/nov/22/karate-manis-son-debuts-as-hero-427078.html.