கண்ணா (திரைப்படம்)
கண்ணா | |
---|---|
இயக்கம் | ஆனந்த் |
இசை | இரஞ்சித் பரோட் |
நடிப்பு | இராஜா ஷீலா பிரகாஷ் ராஜ் லிவிங்ஸ்டன் சீதா |
கலையகம் | காஸ்மிக் பிலிம் புரடக்சன்ஸ் |
வெளியீடு | திசம்பர் 21, 2007 |
ஓட்டம் | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணா (Kanna) என்பது ராஜா மற்றும் சீலா நடித்து ஆனந்த் இயக்கி 2007இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜா,சீலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சீதா மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் உடன் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இரஞ்சித் பரோட் இசையமைத்துள்ளார்.
கதை
கோவையில் நடப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரகுநாத் (பிரகாஷ்ராஜ்) மற்றும் சீதா (சீதா) என்பாரின் மகள் அன்னபூரணி (சீலா). அவளது வாழ்க்கையில் அன்பான குடும்பம், நண்பர்கள் மற்றும் ஒரு தனியார் பள்ளியில் படிப்பு என எல்லாவற்றையும் கொண்டிருக்கிறாள். பள்ளியில் அவள் 10 ஆம் வகுப்பு மாணவியாக படித்து கொண்டிருக்கிறாள். பள்ளி மூலம் ஊட்டிக்கு கல்விச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. அன்னபூரணி தனது வகுப்பு ஆசிரியர்களான ஆசீர்வாதம் (லிவிங்ஸ்டன்), சோனா நாயர் மற்றும் தனது நண்பர்கள் ஆகியோருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்.
ஊட்டியில், அவர்கள் அரண்மனை போன்ற விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். குழுவின் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கண்ணாவை ( ராஜா ) அன்னபூரணி சந்திக்கிறாள். அவர்களுக்கிடையே வலுவான கருத்து வேறுபாடு ஏற்பட்டு இறுதியில் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகுவதோடு, அவர்களிடையே காதல் மலருகிறது. இது கதையில் ஒரு திருப்பத்திற்கு வழிவகுக்கிறது.
அன்னபூரணி கோயம்புத்தூருக்குத் திரும்புகிறாள், அவளால் கண்ணாவை மறக்க முடியவில்லை. ஒரு நாள் அவள் தன் காதலனை சந்திக்கத் திட்டமிட தன் நண்பனிடம் யோசனை கேட்கிறாள். அவளுக்கு அவன் ஒரு யோசனையை வழ்ங்குகிறான். அதன்படி, அவள் ஒரு அன்பளிப்புடன் தனது காதலனை சந்திக்க முடிவு செய்கிறாள். அவள் இரு சக்கர வாகனம் ஒன்றினை கடன் வாங்கி ஊட்டிக்குச் செல்கிறாள். வழியில், வாகனம் பழுதடைகிறது. அதனால் நடந்து பயணத்தை தொடர்கிறாள். இதற்கிடையில், அவள் பள்ளியிலிருந்து திரும்பி வரவில்லை என்பதைக் கண்டு அவளுடைய பெற்றோர் பீதியடைந்து அவளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இதன் பின்னர் அவள் தனது காதலன் கண்ணாவைச் சந்தித்தாளா என்பதும் அவளது பெற்றோர்கள அவளை கண்டுபிடிப்பதும் எனக் கதை செல்கிறது
நடிகர்கள்
கண்ணாவாக ராஜா
அன்னபூர்ணியாக சீலா
பிரகாஷ் ராஜ்
சீதா
லிவிங்ஸ்டன்
ஒலிப்பதிவு
ரஞ்சித் பரோட் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.[1]
- குயில் பாடும் - சிரேயா கோசல்
- ரகசிய கண்ணா - சுஜாதா
- துள்ளும் - பலராமன், மகாலட்சுமி ஐயர்
- செம்பருத்தி - மாணிக்க விநாயகம், முகேஷ், வினயா
- ஆயிரம் கேள்விகள் - ஹரிஹரன்
- அழகிய பெண்ணே- கார்த்திக்
வரவேற்பு
இந்தியா கிளிட்ஸ் வலைத்தளத்தில் "அறிமுக இயக்குனர் ஆனந்த் வித்தைகளை மீட்டெடுக்காமல் ஒரு தெளிவான கதையைத் தேர்ந்தெடுத்ததற்காக பாராட்டப்பட வேண்டும்" என எழுதினர்.[2] பிஹின்ட்வுட்ஸ் வலைத்தளத்தில் "ஒட்டுமொத்தமாக கண்ணா, நன்கு தயாரிக்கப்பட்ட தயாரிப்பு. இயக்குனர் அதனை திரையில் கொண்டு வந்ததைப் பாராட்ட வேண்டும்" என எழுதினர்.[3] சிஃபி வலைத்தளத்தில் "இயக்குனர் ஆனந்த் ஒரு நல்ல செய்தியுடன் ஒரு இனிமையான திரைப்படத்துடன் வெளிவந்துள்ளார். இது முதிர்ச்சியற்ற தன்மையால் ஒரு இளம் பருவ மனம் எவ்வாறு மயக்கத்திற்கு விழுகிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும் படத்தின் சிக்கல் என்னவென்றால், அது நத்தை வேகத்தில் நகர்கிறது. மேலும் இது ஒரு மென்மையான தொலைக்காட்சி தொடர் போல தயாரிக்கப்பட்டிருக்கிறது" என எழுதினர்.[4] ரெடிப் வலைத்தளத்தில் "நுட்பமான மற்றும் புத்திசாலித்தனமாக இருக்க மிகவும் கடினமாக முயற்சிக்கும் திரைப்படம், காதல் கலையை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதற்கு பதிலாக சங்கடமான வழியில் தோல்வியடைகிறது" என எழுதினர்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Kanna Tamil movie songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Kanna review, Kanna Tamil movie review, story, rating - Indiaglitz.com". Indiaglitz. 22 December 2007. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Kanna Movie Review". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Review: Kanna (2007)". சிஃபி movies. 22 December 2007. Archived from the original on 17 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.
- ↑ "Kanna: A wasted effort". ரெடிப்.காம். 22 December 2007. பார்க்கப்பட்ட நாள் 17 April 2019.