ஒடியா மொழி
ஒடியா மொழி | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | or |
ISO 639-2 | ori |
ISO 639-3 | ori |
ஒடியா மொழி (பழைய பெயர் ஒரியா மொழி) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது[1][2] . இம்மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான மேற்கு வங்காள மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், சார்க்கண்ட் மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒடிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான குசராத்திலும் ஒடியர்கள் வாழுகிறார்கள். இம்மாநிலத்தில் உள்ள சூரத் நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒடியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒடியா, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று ஆதி என்னும் பிராகிருத மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. இம்மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்திய-ஈரானிய மொழிகள் பிரிவின், இந்திய-ஆரிய மொழிகள் குழுவைச் சேர்ந்தது.
இம்மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ மொழிகளான வங்காள மொழி, மைதிலி மொழி, அசாமிய மொழி ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம். இத்தகைய வளமான இலக்கிய நடைகளைக் கொண்டிருப்பதால் ஒடியா மொழி செம்மொழி என இந்திய அரசால் 2014 ஆவது ஆண்டில் அறிவிக்கப்பட்டது.[3]
ஒடிய இலக்கியம்
ஒரியா மொழிக்கு சுமார் 13 ஆம் நூற்றாண்டில் தொடங்கிய நல்ல வளமான இலக்கிய வரலாறு உண்டு. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சரள தாசர் மகாபாரதத்தை ஒரியாவில் மொழி பெயர்த்தார். இதனால் இவர் ஒடிசாவின் வியாசர் என்று போற்றப்படுகிறார். உண்மையில், சமஸ்கிருத நூல்களான மகாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் போன்றவற்றை மொழிபெயர்த்ததின் மூலமே ஒரிய மொழி பொதுமைப்படுத்தப்பட்டது. ஜகனாத தாஸ் என்பவர் பாகவதத்தை ஒரியாவில் மொழிபெயர்த்தார். இதுவே ஒரியாவின் எழுத்து மொழியைப் பொதுமைப்படுத்த உதவியது. ஒரியாவுக்கு சிறப்பாகப் பக்தி அடிப்படையிலான வலுவான கவிதை மரபும் உண்டு.
இம்மொழியில் உரைநடை ஒரு பிற்கால வளர்ச்சியாகும். பக்கீர் மோகன் சேனாபதி, மனோஜ் தாஸ், பிபுத்தி பட்நாயக், பிரதிபா ராய், சுரேந்திர மொகந்தி, மதுசூதன் தாஸ், கிஷோரி சரண் தாஸ், காலினி சரண் பாணிக்கிரகி, ஹரி ஹர தாஸ், கோபிநாத் மொகந்தி என்போர் குறிப்பிடத்தக்க உரைநடை எழுத்தாளர்கள் ஆவர். எனினும் உரைநடையை விடக் கவிதையே தற்கால ஒரிய இலக்கியத்தின் பலமாக விளங்குகிறது. ஒரியக் கவிஞர்களான சச்சிதானந்த ரௌத்ரே, குருப்பிரசாத் மொகந்தி, சௌபாக்ய மிஸ்ரா, ராமகாந்த ராத், சிதாகாந்த மொகபத்ரா என்போர் இந்தியக் கவிதைத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளனர்.
இவை தவிரக் கணிதம், மருத்துவம், விவசாயம், ஆயுர்வேதம், இரத்தின பரீட்சை போன்ற பொருள்கள் பற்றிய செய்யுள் நூல்களும் பலவாகும்.
வரலாறு
ஒடியா மொழி வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாகப் பிரிப்பது வழக்கம். இவை:
- பழைய ஒடியா - (10 ஆம் நூற்றாண்டு - 1300)
- முந்திய இடைக்கால ஒடியா - (1300 - 1500)
- இடைக் கால ஒடியா - (1500 - 1700)
- பிந்திய இடைக்கால ஒடியா - (1700 -1850)
- தற்கால ஒடியா (1850 முதல் இப்பொழுது வரை)
மதம்
- பண்டைக்காலம் (12ஆம் நூற்றாண்டுக்கு முன்)
- கங்க வமிச காலம் (12-15 நூ. வரை)
- சூரிய வமிச காலம்
- இசுலாமிய - மகராஷ்டிர ஆட்சிக் காலம்
- பிரித்தானிய ஆட்சிக் காலம்.
மேற்கூறிய காலங்களில் எல்லாம் மதங்களே இலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தன.[4][5] லுயிபாதர், கான்ஹூ பாதர், பூசுகு ஆகியோர் எழுதிய பௌத்தமதப் பாடல்கள் ஆதிகாலத்தில் எழுந்தவைகள் ஆகும். அவையே பழைய ஒரியா இலக்கியங்களாகும். கங்க வமிசக் காலத்தில் சைவமதமே உச்சநிலை அடைந்தது. இக்காலத்தில் எழுந்த இலக்கியங்களுள் போற்றத்தக்கனவாகக் கருதப்படுகின்றன. 13-ஆம் நூற்றாண்டில் எழுந்தருத்திர சுதாநிதி என்னும் கதையும், களசா சவுதிஷம் என்னும் கவிதையுமேயாம். மூன்றாம் காலப் பகுதியில் சாக்த மதம் உச்சநிலை அடைந்தது. 14ஆம் நூற்றாண்டில் சரளதாசர் எழுதிய மகாபாரதமும், விலங்கா ராமாயணமும், சண்டிபுராணமும் பெயர் பெற்றன. நான்காம் காலப்பகுதியில், வைணவ மதம் உச்சநிலை அடைந்தது. தொடக்கத்தில் கிருஷ்ணன், இராமன் இருவரும் போற்றப்பட்ட போதிலும் இறுதியில் கிருஷ்ணனுடைய கீர்த்தி நிலைப்பதாயிற்று.ஐந்தாம் காலப்பகுதியில் பிரமசமாஜம் பரவிற்று. பாலா என்னும் பெயருடைய இலக்கியம் தோன்றிற்று. அது சத்தியநாராயண தோத்திரமாகும். அதை இந்துக்களும் இசுலாமியர்களும் ஒருங்கே எவ்வித வேறுபாடுமின்றிப் பயின்று வந்தனர். இராஜா ராம்மோகன் ராய் நிறுவிய பிரமசமாஜ மதம் தோற்றுவித்த இலக்கியம் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் இயற்றிய நூல்கள் பல உள்ளன.இந்த ஐந்து காலங்களிலும், எழுந்த ஒரியா இலக்கியத்தைப் பழைய வசனமும் கவிதையும் என்றும், புதிய வசனமும் கவிதையும் என்றும் இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம்.
பழைய கவிதை
ஒரியா மொழியில் இயற்றப்பட்டவைகள் பாடலாயினும், இசைப் பாடல்களாயினும், காவியமாயினும் இசை மெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. அவைக் கீர்த்தனைகளாகவும், பசனாவளி முதலியவை உட்பட்ட பாடல்களும், கீதங்களும் அடங்குகின்றன. மேலும், அவை மகிழ்ச்சியையே வெளிப்படுத்தும் காதற் பாடல்களாவே திகழ்கின்றன. இவற்றுடன் கடவுள் வாழ்த்தாக வரும் பாடல்களும் உள்ளன. இன்றும் வண்டிக்காரர் பாட்டு, குடியானவர் பாட்டு, மீன்பரவர் பாட்டு என்று பலவகையான பாட்டுக்களும் அடங்குகின்றன. ஒரியா மொழியிலுள்ள கவிதை, பொதுமக்களுக்கு மிகவும் விருப்பமான, பாலாவோலி போன்று பலவிதமானவை ஆகும்.
புதிய கவிதை
இப்போதுள்ள ஒடிசா மாநிலத்தில், 1803ஆம் ஆண்டிலேயே பிரித்தானிய ஆட்சி ஏற்பட்டபோதிலும், 1850க்குப் பின்னர் தான், மேனாட்டு கல்வி முறை பரவத் தொடங்கியது. அக்கல்விப் பரப்புரையில் வங்காளிகளே அதிகம் இருந்தபடியால், வங்க இலக்கியத்தின் தாக்கம் ஒடிய மொழியில் மேலோங்கி இருந்தது. வங்க நூல்களே மொழிபெயர்த்து பரப்பப்பட்டன. ஒடிய மொழி எழுத்தாளர்களும், வங்க நூல்களின் நடையினையும், சமற்கிருத மொழியின் நடையினையுமே பின்பற்றினர். இதனால் ஒடிய மொழியின் கவிதைத்தூய்மை கெட்டன. இருப்பினும் நாளடைவில் ஒடிய மொழியின் இலக்கணக் கவிதைகள் தலைத்தூக்கின. இராதாநாத ராய் என்பவரை, இக்கால ஒரியாக் கவிதைக்குத் தந்தை என்று கருதுகிறார்கள். இவர் தேசியக்கவிஞராகவும் போற்றப்படுகிறார். இவரது கவிதகைளில், இயற்கை மேலோங்கி இருக்கிறது.
காவியங்கள்
ஆதி காவியங்கள் இயற்கையான எளிய நடையைக் கொண்டிருக்கின்றன. அவை அழகான உவமைகள் நிரம்பியவைகளாக இருக்கின்றன.[6] 15ஆம் நூற்றாண்டிலிருந்த அர்ச்சுன தாசர் இயற்றிய இராமபிபா என்னும் காவியமே, ஆதி காவியம் ஆகும். அதை மகா காவியம் என்று அழைப்பர். 16ஆம் நூற்றாண்டில் இருந்த சிசுசங்கரருடைய உசா விலாசமும், தேவதுர்லபதாசின் இரகசிய மஞ்சரியும் தோன்றின. 17ஆம் நூற்றாண்டிலிருந்த கார்த்திகேய தாசருடைய ருக்மிணி பிபாவும், பிரதாப்ராயினுடைய சசிசேனையும் காவியங்களில் சிறப்பானவை ஆகும். இவற்றிற்கு அடுத்த படியில் இருப்பவை, இலட்சுமண மகந்துவின் உர்மிளா சாந்தமும், கபிலேசுவரதாசருடைய கபட கேளியும், அரிஅரதாசருடைய சந்திராவதி அரணமும் ஆகும். பதினெழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராமச்சந்திர பட்நாயக் ஆராவதி மகாகாவியம் எழுதினார். பொதுமக்களைச் சேர்ந்த ஒருவனையும் ஒருத்தியையும் காவியத் தலைவனாகவும், தலைவியாகவும் வைத்து, ஒடிய மொழியில், முதன்முதலாகப் பாடினார். இதனால், இவரையே காதற் கவிதையின் தந்தை என்று அழைக்கின்றனர். இவருடைய கவிதையிற் காணும் கதைகள் தவிர, ஏனைய கவிஞருடையக் கதைகள் எல்லாம், பெரும்பாலும் ஒன்றுபோலவே காணப்படுகின்றன. தேவலோக மங்கை, தேவனையோ முனிவனையோ காதலிப்பாள். இந்த காதலுக்காக, அவர்கள் பூமியில் பிறந்து, காதலித்து மணம் புரிந்து கொண்டு மகிழ்வுடன் வாழ்வர்.
ஒலியன்கள்
ஒடியா 28 மெய் ஒலியன்களையும், 6 உயிர் ஒலியன்களையும் கொண்டது.
முன் | பின் | |
---|---|---|
மேல் | i | u |
இடை | e | o |
கீழ் | a | ɔ |
இதழ் | பல் | நுனி அண்ணம் | வளைநா | இடை அண்ணம் | பின் அண்ணம் | குரல்வளை | |
---|---|---|---|---|---|---|---|
ஒலிப்பிலா வெடிப்பொலிகள் | p pʰ |
t̪ t̪ʰ |
ʈ ʈʰ |
ʧ ʧʰ |
k kʰ |
||
ஒலிப்புடை வெடிப்பொலிகள் | b bʰ |
d̪ d̪ʰ |
ɖ ɖʰ |
ʤ ʤʰ |
ɡ ɡʰ |
||
ஒலிப்பிலா உரசொலிகள் | s | h | |||||
மூக்கொலிகள் | m | n | ɳ | ||||
இடையொலிகள் | l, r | ɭ |
மேற்கோள்கள்
- ↑ "ஒரியா ஒடியாவாக மாற்றம் - ஐபிஎன் லைவ்". Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் 2011-11-05.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ ஒரியா ஒடியாவாக மாற்றம்- தட்சு தமிழ்
- ↑ "ஒடியா மொழி செம்மொழித் தகுதி பெற்றது". jugranjosh.com. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2015.
- ↑ http://nriol.com/indian-languages/oriya-page.asp
- ↑ http://odialanguage.com/page/history/
- ↑ http://www.yourarticlelibrary.com/essay/essay-on-odia-language-1161-words/24393
வெளி இணைப்புகள்
- Languages without family color codes
- Language articles without speaker estimate
- Languages with ISO 639-2 code
- Languages with ISO 639-1 code
- Languages missing Glottolog code
- Language articles with unsupported infobox fields
- இந்திய-ஆரிய மொழிகள்
- ஒரியா
- இந்தியச் செம்மொழிகள்
- தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்