எஸ். வனஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். வனஜா
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். வனஜா
S. Vanajah
瓦纳桑
விண்வெளி ஆய்வாளர்
பிறப்புபெயர் வனஜா சிவசுப்பிரமணியம்
பிறந்ததிகதி 02 மார்ச் 1971
பிறந்தஇடம்  மலேசியா கிள்ளான்
சிலாங்கூர்
பணி மின்னியல்
பொறியியலாளர்
தேசியம் மலேசியர்
கல்வி இயற்பியல்
இளங்கலை
மலாயா பல்கலைக்கழகம்
பணியகம் Measat Satellite Systems
அறியப்படுவது விண்வெளி ஆய்வியல்
பெற்றோர் தந்தை -
சிவசுப்பிரமணியம்
துணைவர் திருமணமாகவில்லை
இணையதளம் [angkasa.gov.my ]

எஸ். வனஜா (பிறப்பு: மார்ச் 2, 1971) மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதல் பெண்.[1] சோயுஸ் வான்கலத்தின் மூலமாக, விண்வெளியில் இருக்கும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவதற்காகத் தேர்வான விண்வெளி வீரர்களில் ஒருவர்.[2]

மலேசியாவைச் சேர்ந்த 11,000 பேர் அத்திட்டத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் செய்திருந்தனர்.[3] மலேசியாவின் விண்வெளித் திட்டம் 92.9 மில்லியன் ரிங்கிட் செலவில் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2007க்குள் ஒரு மலேசியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என மலேசிய விண்வெளி ஆய்வுக் கழகம் தீர்மானித்து இருந்தது.

இறுதிச் சுற்றில் வனஜா தேர்வு செய்யப்பட்டு உருசியாவுக்கு அனுப்பப்பட்டார்.[4] அங்கே அவர் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். விண்கலம் பயணமாகும் இறுதி நாளில், உடல்நலக் காரணங்களினால் வனஜா தேர்வு பெறவில்லை.[5] ஷேயிக் முஸ்தாபா சுக்கோர் எனும் மருத்துவர் தேர்வு பெற்றார்.[6]

இருப்பினும், விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி எனும் பெருமை இவருக்கு கிடைத்தது. மலேசிய இளம் பெண்களுக்கு இவர் ஓர் உந்து சக்தியாக விளங்கி வருகிறார். மூத்த பொறியியலாளராகப் பணிபுரியும் வனஜா, மலாயா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பயின்றவர்.

வரலாறு

எஸ். வனஜா, சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கிள்ளான் நகரில் பிறந்து வளர்ந்தவர். பத்து வயதில் இருந்தே வானத்தில் மிளிரும் விண்மீன்கள், இவருக்கு வானவியல் துறையில் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தி வந்தன. விண்மீன்களைப் பற்றி நிறைய நூல்களைப் படித்தார். அவருக்கு உதவியாக அவருடைய தந்தை சிவ சுப்பிரமணியமும் வானவியல் நூல்களை வாங்கிப் படிக்கக் கொடுத்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் படிக்கும் போதுகூட, அவருடைய எண்ணங்களும் சிந்தனைகளும் விமானங்களைப் பற்றியே வலம் வந்தன. எதிர்காலத்தில் தான் ஒரு விமானியாக ஆக வேண்டும் என்றும் வனஜா ஆசைப் பட்டார். இந்தக் கட்டத்தில்தான், விண்வெளித் திட்டத்தில் மலேசியாவும் கால் பதித்தது. விண் ஆய்வுத் துறையில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை மலேசியாவும் பின்பற்றத் தொடங்கியது.

மலேசியாவும் ரஷ்யாவும் கூட்டு ஒப்பந்தம்

1984ஆம் ஆண்டில் இந்திய-ரஷ்யக் கூட்டு விண்வெளி ஆய்வுத் திட்டம் உருவானது. அதில் இந்திய விமானப் படையைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா என்பவர் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.[7] அதே போல மலேசியாவும் ரஷ்யாவும் 2003இல் ஒரு கூட்டு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டன.

மலேசியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. விண்ணுக்கு ஒருவரை அனுப்பி வைப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. அதிகம் செலவாகும் என்பதை எல்லா நாடுகளுமே தெரிந்து வைத்து இருக்கின்றன. அந்த வகையில் மலேசியா தன் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்பி வைக்க 92.9 மில்லியன் ரிங்கிட் செல்வாகும் என்பதையும் கண்டறிந்தது.

இந்தக் கட்டத்தில், ரஷ்யாவிடம் இருந்து, சுக்கோய் 30 எம்.கே.என் ரக போர் விமானங்களில் 18ஐ வாங்க மலேசியா முடிவு செய்தது.[8] அவற்றின் விலை 3.34 பில்லியன் ரிங்கிட்.[9] அந்த 2003ஆம் ஆண்டு வாங்குதல் உடன்படிக்கையின் கீழ், மலேசியர் ஒருவரை விண்ணுக்கு அனுப்பி வைக்க ரஷ்யாவும் சம்மதம் தெரிவித்தது.

அங்காசா விண்வெளித் திட்டம்

மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் என்பது 2007ஆம் ஆண்டிற்குள், மலேசியர் ஒருவரை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை 2003ஆம் ஆண்டு, பிரதமர் துன் மகாதீர் முகமது அறிவித்தார். இது உருசியாவுக்கும் மலேசியாவிற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும். மலேசியாவின் விமானப் படைக்கு சுக்கோய் SU-30MKM ரக விமானங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் அந்த ஒப்பந்தம் செய்து நிறைவேற்றப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நால்வரில் இருவருக்குப் பயிற்சிகளை வழங்குவது; அவர்களில் ஒருவரை 2007 அக்டோபர் மாதம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவது; அவற்றுக்கான செலவுகளை ரஷ்ய அரசாங்கம் ஏற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. பொருத்தமான விண்வெளி வீரரைத் தேர்வு செய்யும் பொறுப்புகள், மலேசிய தேசிய விண்வெளிக் கழகம், மலேசிய அறிவியல், தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு ஆகிய இரு அமைப்புகளிடம் வழங்கப்பட்டன.

தேர்வு செய்யப்படும் நால்வருக்கு, ரஷ்யாவில் இருக்கும் ’ஸ்டார் சிட்டி’ விண்வெளி வீரர்கள் பயிற்சி முகாமில் ஆறு மாத காலத்திற்கு அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பின்னர், அந்த நால்வரில் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 18 பயிற்சிகள் வழங்கப்படும். மலேசியாவில் இளைஞர்களிடையே அறிவியல் புத்தாக உணர்வுகளை மேலோங்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஆகும்.

மியாசாட் வான்கோள் நிலையம்

மலேசியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் 11,000 பேர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் கட்டம் கட்டமாகக் களையப்பட்டு, இறுதியில் நாலவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் எஸ். வனஜா. இவர் பல்வேறான கடினத் தேர்வுகளில் தேர்வு பெற்றார். இவரிடம் மனவலிமை, உடல் வலைமை என அனைத்துத் தகுதிகளும் தரம் பிரித்துப் பார்க்கப்பட்டன.[10]

இறுதிக் கட்டத்தில் இவர் ரஷ்யாவில் பயிற்சிகளைப் பெற்றார்.[11] இறுதித் தேர்வில் இவரால் விண்வெளிக்குச் செல்ல முடியவில்லை.[12] இந்த விண்வெளிப் போட்டியில் ஷேயிக் முஸ்தாபா சுக்கோர் எனும் மருத்துவர் வெற்றி பெற்றார்.[13] இருப்பினும், விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்ட முதல் மலேசியப் பெண்மணி எனும் பெருமை இவருக்கு கிடைத்தது. மலேசியா வாழ் இளைஞர்களுக்கு இவர் ஓர் உந்து சக்தியாக விளங்கி வருகிறார்.[14][15]

எஸ். வனஜா தற்சமயம் மியாசாட் வான்கோள் நிலையத்தில் பொறியியலாளராகப் பணிபுரிகின்றார். மியாசாட் வான்கோள் நிலையம், மலேசியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமானதாகும்.[16]

மேற்கோள்கள்

  1. The 35-year-old senior quality engineer from Klang was elated to be short-listed and to receive equal consideration from the selection panel.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Russian Government offered a place for a Malaysian astronaut to join the Russian astronauts on the expedition to the International Space Station (ISS).
  3. Selected from 11,000 applicants, a rigorous training session in Russia awaits Vanajah.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Malaysia_Names_Candidates_To_Train_In_Russia_In_Space_Bid.html Malaysia Names Candidates To Train In Russia In Space Bid.
  5. Doctors make final cut in astronaut race.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. An ethnic Indian female engineer lost her bid to become Malaysia's first astronaut Monday, as the government whittled the finalists to an army dentist and a hospital medical officer.
  7. Rakesh Sharma spent eight days journeying around the Earth's orbit in a space station called Salyut 7.
  8. In August 2003, Malaysian government signed a contract for 18 SU-30MKM with Irkut Aircraft Production worth $900 million USD.
  9. Malaysia's astronaut training programme, costing 92.9 million ringgit, is to be offset as part of the 3.34-billion ringgit defence deal to buy 18 Sukhoi 30MKN fighter jets from Russia.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Four out to prove mettle in next round of tests[தொடர்பிழந்த இணைப்பு]
  11. The four aspiring Malaysian astronauts, who are the pride of their families and country, left for Russia at 11.30pm last night.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Medical officer Dr Sheikh Muszaphar Shukor and army dental surgeon Kapt Dr Faiz Khaleed are Malaysia’s final two astronaut candidates.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Malaysia Airlines pilot Mohammed Faiz Kamaludin and senior quality engineer S. Vanajah, who did not make the final cut, congratulated Dr Sheikh Muszaphar and Kapt Dr Faiz." இம் மூலத்தில் இருந்து 2010-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100619175412/http://thestar.com.my/news/story.asp?file=%2F2006%2F9%2F5%2Fnation%2F15334999&sec=nation. 
  14. Awards night for Indian entrepreneurs.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Miss Vanajah is a certified corporate trainer, and a motivational/inspirational speaker." இம் மூலத்தில் இருந்து 2012-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117140346/http://www.themindassociation.org/niyc10/speakers.php. 
  16. "Today MEASAT operates satellites providing reach to over 145 countries, representing 80% of the world’s population." இம் மூலத்தில் இருந்து 2013-05-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130512114023/http://www.measat.com/corp_profile_history.html. 
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._வனஜா&oldid=24074" இருந்து மீள்விக்கப்பட்டது