எம். என். ராய்
எம். என். ராய் M. N. Roy | |
---|---|
மனபேந்திர நாத் ராய் | |
பிறப்பு | நரேந்திர நாத் பட்டாச்சாரியா 21 மார்ச்சு 1887 சாங்கிரிபோட்டா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 26 சனவரி 1954 | (அகவை 66)
தேசியம் | இந்தியர் |
இனம் | வங்காள பிராமணர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வங்காளத் தொழிநுட்பக் கழகம், Communist University of the Toilers of the East |
அமைப்பு(கள்) | யுகாந்தர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி, மெக்சிகோ கம்யூனிஸ்டுக் கட்சி |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம், இந்து-ஜெர்மானிய சதி, கம்யூனிசம், புதிய கம்யூனிசம் |
மனபேந்திர நாத் ராய் அல்லது எம். என். ராய் (M. N. Roy, 21 மார்ச்சு 1887 - 26 ஜனவரி 1954) இந்தியா விடுதலை அடைய புரட்சிச் செயல்களில் ஈடுபட்டவர். ஒரு கம்யூனிஸ்ட்டு, போராளி, சிந்தனையாளர், நாத்திகர் என்று இவர் போற்றப்படுகிறார்.
பிறப்பும் படிப்பும்
இவரது இயற்பெயர் நரேந்திர நாத் பட்டாச்சாரியா. தந்தை ஒரு புரோகிதர்.[1] ராய் மேற்கு வங்கத்தில் ஆர்பிலியா என்னும் ஊரில் பிறந்தார். அவருடைய பள்ளிப்படிப்பு ஆர்பிலியாவில் தொடங்கியது. வங்கத்தொழில்க் கழகத்தில் பொறியியலும் வேதியியலும் கற்றார். சொந்த முயற்சியில் தொடர்ந்து படித்து தம் அறிவைப் பெருக்கிக்கொண்டார்.
தேசிய உணர்ச்சி
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தேசிய உணர்ச்சி எங்கும் பரவத்தொடங்கியது. பங்கிம் சந்திர சட்டர்ஜி, விவேகானந்தர் ஆகியோரின் எழுத்துகளைப் படித்து உணர்வு பெற்றார். பிரித்தானிய அரசுக்கு எதிராகப் போராடி இந்தியா விடுதலை பெறவேண்டும் என்று விரும்பினார். ஆயுதப்புரட்சி மூலம் மாற்றம் காணலாம் என்று நம்பினார். இந்தியர்களுக்கு தனி அரசியல் அமைப்பு சட்டம் வேண்டும் என்பதை முதன்முதலாக, 1927 ல் வலியுறுத்தி பேசினார்.
பொதுவுடைமைக் கட்சி
மெக்சிக்கோவிலும் இந்தியாவிலும் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கினார். தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்து அவற்றில் ஆழ்ந்த அறிவு பெற்றார். மெக்சிக்கோவிலிருந்து உருசியாவுக்குச் சென்றார். அங்கு லெனின், டிராட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோரின் நட்பைப் பெற்றார். 1923இல் கம்யூனிஸ்டுக் கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டது. இக்கொள்கைத் திட்டத்தில் எம். என். ராயின் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டன. பின்னர் உஸ்பெகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்று பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்பினார்.
இந்தியாவுக்குத் திரும்பல்
1930 டிசம்பரில் இந்தியாவுக்குத் திரும்பினார். ஜவகர்லால் நேரு, சுபாஸ் சந்திர போஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்பினார். இருப்பினும் காந்தியடிகளின் தலைமையை அவர் விரும்பவில்லை. பம்பாயில் கைதாகி சிறைக்குச் சென்றார். இன்டிபெண்டென்ட் இந்தியா என்னும் இதழை நடத்தினார். ஏஐடியூசி என்னும் தொழிற்சங்கத்திற்குப் புத்துயிர் கொடுத்துத் தொடங்கி வைத்தார்.
ஆனால் பிற்காலத்தில் முதலாளிய சனநாயகத்தையும் கம்யூனீசத்தையும் வெறுத்து ஒதுங்கினார். புரட்சிகர மனிதநேயம் என்ற கொள்கைக்காக தம் இறுதிக் காலத்தில் பாடுபட்டார். 1954இல் டேராடூனில் இறந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Ray, In Freedom's Quest, vol. 1, p. 14.
வெளி இணைப்புகள்
- Manabendra Nath Roy Internet Archive, Marxists Internet Archive, www.marxists.org/
- "Manabendra Nath Roy," பரணிடப்பட்டது 2011-04-17 at the வந்தவழி இயந்திரம் Banglapedia, www.banglapedia.org/
- M. N. Roy materials in the South Asian American Digital Archive (SAADA)