எங்கள் குடும்பம் பெரிசு
எங்கள் குடும்பம் பெரிசு | |
---|---|
பாட்டுப் புத்தக அட்டை | |
இயக்கம் | பி. ஆர். பந்துலு |
தயாரிப்பு | பி. ஆர். பந்துலு |
மூலக்கதை | குசுமக்ராஜ் எழுதிய வைஷ்ணவி |
திரைக்கதை | பி. ஏ. குமார் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | பி. ஆர். பந்துலு எம். வி. ராஜம்மா ஜி. முத்துக்கிருஷ்ணன் சௌகார் ஜானகி குலதெய்வம் ராஜகோபால் பி. சரோஜாதேவி சிவாஜி கணேசன் மற்றும் பலர் |
ஒளிப்பதிவு | சுப்பாராவ், கர்ணன் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | பத்மினி பிக்சர்ஸ் |
விநியோகம் | ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் |
வெளியீடு | சனவரி 31, 1958(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்கள் குடும்பம் பெரிசு 1958 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, எம். வி. ராஜம்மா, ஜி. முத்துக்கிருஷ்ணன், சௌகார் ஜானகி, குலதெய்வம் ராஜகோபால், பி. சரோஜாதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் தோன்றி நடித்தார்.
திரைக்கதை சுருக்கம்
ஒரு நேர்மையான ஆசிரியரின் வாழ்க்கைத் துன்பங்களை எடுத்துக் கூறுவதே இத்திரைப்படக் கதையாகும்.[1]
மாவூர் என்ற கிராமத்தில் ஒரு ஆரம்பப்பள்ளி. அதில் கோலப்பன் ஆசிரியராக இருக்கிறார். நாகப்பன் அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவர். அவர் உபாத்தியாயர் கோலப்பனுக்குச் சம்பளம் கொடுப்பதில்லை. இதனால் பள்ளி ஒழுங்காக நடப்பது கிடையாது. மாணவர்களுக்கும் படிப்பில்லை.[1]
இந்நிலையில் ரங்கண்ணா என்ற ஆசிரியர் அந்த ஊருக்கு மாற்றலாகி வருகிறார். அவர் பள்ளிக்குழந்தைகளைத் தன் குழந்தைகள் போலப் பாவித்து நன்றாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதுடன் நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொடுக்கிறார். ஒரு நாள் வாசு என்ற பையன் ரங்கண்ணாவின் பேனாவைத் திருடுகிறான். அவனுக்கு நல்ல புத்தி சொல்லி பேனாவை அவனுக்கே கொடுத்துவிடுகிறார் ரங்கண்ணா. பிரெசிடென்ட் நாகப்பனின் தவறான நடவடிக்கைகளைக்கண்டு அவரை ரங்கண்ணா கண்டிக்கிறார். இதனால் ஆத்திரமுற்ற நாகப்பன் ரங்கண்ணாவின் வீட்டை தீ வைத்து எரித்து விடுகிறான். பள்ளி மாணவர்கள் சேர்ந்து ரங்கண்ணாவுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார்கள்.[1]
ஆரம்பப் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக்க, குழந்தைகளை நடிக்க வைத்து ஒரு நாடகம் போட்டு பணம் திரட்டுகிறார் ரங்கண்ணா. அதை நாகப்பன் திருடி, தன் வீட்டில் வைக்க, அவனது மகள் ராதா அதனைக் கண்டு பணத்தை மீண்டும் ரங்கண்ணாவிடம் கொடுத்து விடுகிறாள். நாகப்பன் ராதாவின் மேல் கோபப்பட அங்கு வந்த கோலப்பன் சமாதானப்படுத்துகிறான். நாகப்பன் கோலப்பனைக் கத்தியால் குத்தி விடுகிறான். இதன் காரணமாக நாகப்பனுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கிறது.[1]
ரங்கண்ணாவின் மகன் ரவி, சீதா என்ற பெண்ணையும் மற்றொரு மகன் கோபி, நாகப்பனின் மகள் ராதாவையும் திருமணம் செய்கின்றனர். மகள் கௌரியை திருமணம் செய்து கொடுத்த இடத்தில் வரதட்சணை பாக்கி, வீடு அடமானத்தில் இருக்கிறது.
மகன்கள் வீட்டை மீட்க முன்வரவில்லை. முன்பு பேனா திருடிய வாசு இப்போது இன்ஸ்பெக்டர் உத்தியோகம் வகிக்கிறான். அவன் ரங்கண்ணாவின் வீட்டை மீட்டுக் கொடுக்கிறான்.[1]
25 வருடம் வேலை பார்த்தபின் ஓய்வு பெறுகிறார் ரங்கண்ணா. வறுமையில் வாடுகிறார். அவர் ஒரு மகன் வீட்டிலும், அவர் மனைவி சீதாம்மா இன்னொரு மகன் வீட்டிலும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ரங்கண்ணா மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப் படுகிறார். சீதாம்மா மருமகளால் தூற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறாள்.[1]
நடிகர்கள்
பி. ஆர். பந்துலு
ஜி. முத்துக்கிருஷ்ணன்
குலதெய்வம் ராஜகோபால்
கே. டி. சந்தானம்
டிக்கி மாதவராவ்
உதயகுமார்
சூரியகுமார்
சிவாஜி கணேசன் (கௌரவ தோற்றம்)
எம். வி. ராஜம்மா
சௌகார் ஜானகி
பி. சரோஜாதேவி
எஸ். விமலா
டி. கே. புஷ்பவல்லி
அன்னபூரணம்மா
பேபி லட்சுமி
பேபி கற்பகம்
தயாரிப்பு விபரம்
இத்திரைப்படம் ஒரே சமயத்தில் கன்னடத்தில் ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் தயாரானது. பின்னர் பத்மினி பிக்சர்ஸ் தெலுங்கில் பதி பந்துலு என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 1959 ஆம் ஆண்டு ஏ. எல். எஸ். புரொடக்சன்ஸ் ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் இந்தியில் தயாரித்து வெளியிட்டனர். அதன் பின்னர் 1964 ஆம் ஆண்டு ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டது. இதிலும் சிவாஜி கணேசன் கௌரவ நடிகராகத் தோன்றி நடித்தார். அவர் நடித்த முதலாவது மலையாளப் படம் இதுவே.[2]
1973 ஆம் ஆண்டு பி. ஆர். பந்துலு ஸ்கூல் மாஸ்டர் என்ற பெயரில் ஒரு தமிழ்ப் படம் தயாரித்து வெளியிட்டார்.[2]
பாடல்கள்
டி. ஜி. லிங்கப்பா இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர்கள்: கே. டி. சந்தானம், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர். பாடியவர்கள்: டி. ஜி. லிங்கப்பா, ஏ. எம். ராஜா, டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், ஏ. பி. கோமளா, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஜமுனாராணி, பி. சுசீலா, ராணி ஆகியோர்.[1]
எங்கள் குடும்பம் பெரிசு | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | Singer(s) | நீளம் | ||||||
1. | "சோம சேகர யோக பாலனே" | கே. டி. சந்தானம் | டி. ஜி. லிங்கப்பா, ஏ. பி. கோமளா, ராணி, குழுவினர் | 02:39 | ||||||
2. | "வருகவே, வருகவே, வருகவே" | கே. டி. சந்தானம் | ஏ. பி. கோமளா, ராணி, குழுவினர் | 02:58 | ||||||
3. | "ராதா மாதவ வினோத ராஜா" | கு. சா. கிருஷ்ணமூர்த்தி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:12 | ||||||
4. | "சுகமான அந்தி வேளை" | கு. சா. கிருஷ்ணமூர்த்தி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 02:42 | ||||||
5. | "அதி மதுரா அனு ராதா" | கே. டி. சந்தானம் | ஏ. எம். ராஜா, ஜமுனாராணி | 03:27 | ||||||
6. | "நானும் நீயும் ஜோடி" | கே. டி. சந்தானம் | எஸ். சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:23 | ||||||
7. | "எந்நாளும் காணாத ஆனந்தமே" | கு. மா. பாலசுப்பிரமணியம் | சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:02 | ||||||
8. | "எல்லோரும் நம்மவரே" | கு. சா. கிருஷ்ணமூர்த்தி | ஏ. பி. கோமளா | 03:06 | ||||||
9. | "குழந்தைகள் இராமாயணம் நாடகம்" | கே. டி. சந்தானம் | ஏ. பி. கோமளா, ராணி, குழுவினர் | 06:48 | ||||||
மொத்த நீளம்: |
31:17 |