ஊட்டியார்
ஊட்டியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்களாக இரண்டு பாடல்கள் உள்ளன. அகநானூறு 68, 388 எண்ணுள்ள பாடல்களாக இவை அமைந்துள்ளன. இரண்டும் குறிஞ்சித் திணைப் பாடல்கள்.
பெயர் விளக்கம்
இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்த ஆசிரியர் இவரது பாடலிலுள்ள அரிய சொல்லைக்கொண்டு இவருக்குப் பெயர் சூட்டியுள்ளார். மகளிர் தம் பாதத்துக்கு மேல் உள்ள விளிம்புகளில் சிவப்புச்சாயம் ஏற்றி ஒப்பனை செய்துகொள்வர். அழகணம் என்றும் மருதாணி என்றும் சொல்லப்படும் மருத்தோன்றி இலையை அரைத்துப் பூசி அப்பகுதியில் சிவப்புச்சாயம் ஏற்றுவர். உள்ளங்கைகளிலும் இந்த வகையில் சாயம் ஏற்றிக்கொள்வர். இப்படிச் சாயம் ஊட்டிக்கொள்ளும் பழக்கம் சங்ககாலத்திலும் இருந்தது. இதனை 'ஊட்டி' என்னும் சொல்லால் வழங்கினார்
இந்தப் புலவர் ஊட்டி என்னும் சொல்லைத் தன் இரண்டு பாடல்களிலும் பயன்படுத்தியுள்ளார்.
- 'ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலை' என்பது ஒரு பாடலில் உள்ள அடி. செயலை என்னும் அசோகமரத்தின் தளிர் ஊட்டி போல் நிறம் பெற்றிருந்ததாம்.
- 'ஊட்டி அன்ன ஊன்புரள் அம்பு' என்பது மற்றொரு பாடலில் உள்ள அடி. வேட்டைக்குச் செல்வோரின் அம்புநுனி ஊட்டி போல் நிறம் பெற்றிருந்ததாம்.
அகநானூறு 68 பாடல் தரும் செய்தி
இவன் வந்திருக்கிறான் என்று தோழி தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
அயத்தில் பூத்திருக்கும் கூதளம்பூ குழையும் படியாக அருவி கொட்டிக்கொண்ட பாடும் அங்குள்ள நம் படப்பையில்(குறிஞ்சி நில வயல்) இருந்த செயலை என்னும் அசோக மரத்தில் அன்னை ஊஞ்சல் கட்டித் தந்தாள். இதன் கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக்கொண்டு இடி அந்த மரத்தின்மேல் விழுந்து அழித்துவிட்டது. அன்னையும் ஊரும் உறங்குகின்றன. இப்போது இவர் வந்தால் நிந்தம் என்று எண்ணினோம். இவரும் வந்துள்ளார்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு. இதில் யானைக்கன்று நீந்தும். பெண்யானை பூசல் ஒலி எழுப்பும். ஆண்யானை விளித்துக்கொண்டு ஆழம் பார்த்து அழைத்துக்கொண்டே செல்லும். ஆற்றைத் தாண்டி வந்தால் மலைப்பாம்பு வாயைப் பிளக்கும். பகலிலும் அச்சம் தரும் இந்தப் பாதையில் பனி கொட்டும் இரவில் இவன் வந்திருக்கிறான்.
அகநானூறு 388 பாடல் தரும் செய்தி
இவன் இவளுக்காக் காத்திருக்கிறான். இவள் தோழியிடம் சொல்கிறாள்.
மணம் கமழும் சந்தன மரத்தை வெட்டிச் சாய்த்துவிட்டு உழுது விதைத்த தினையினைக் கவர வரும் குருவிகளை மூங்கிலைப் பிளந்து செய்த தட்டை என்னும் கருவியைத் தட்டி ஓசை எழுப்பி ஓட்டிக்கொண்டிருந்தோம். வேங்கைமரப் பந்தற்காலின் மேல் இருந்த இதணம் என்னும் பந்தலிலிருந்து மூங்கிலைப் பிளந்து செய்த தட்டையைத் தட்டியபோது பொன்னிறமான வேங்கைப் பூக்களில் தேனுண்ணும் தும்பியின் இன்னிசை கேட்டது. உடனே தட்டுவதை நிறுத்திவிட்டு தும்பியின் இன்னிசையைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
இப்போது அம்பு பாய்ந்த நிலையில் களிறு ஒன்று உங்கள் புனத்தின் வழியே வந்ததா என்று கேட்டுக்கொண்டே காளை ஒருவன் வந்தான். ஞமலி என்னும் வேட்டைநாய் குரைப்பதை அடக்கிக்கொண்டே வந்தான். இவன் மார்பில் அணிந்திருந்த சந்தனம் என் மனத்தில் நிலைகொண்டுவிட்டது.
என் நிலையைப் பார்த்த என் தாய் எனக்கு 'வெறி' என்கிறாள். இதனைப் போக்க வேலனை அழைத்துவந்திருக்கிறாள். இவனும் எம் இறை 'முருகு' அணங்கிற்று (வருத்துகிறது) என்கிறான். இந்த வெறியைத் தணிக்கத் தன்னிடம் மருந்து உள்ளதாகவும் கூறுகிறான்.
என் மனமானது அன்று வந்த இவன் அன்று யானையை வீழ்த்தியபோது குருதிக்கறை படிந்த அம்போடு காட்டுமான் ஓடிய காலடியைப் பார்த்துக்கொண்டு வேறொரு மான்வேட்டைக்குச் செல்வானோ என்று எண்ணிக் கலங்கிக்கொண்டிருக்கிறது.
ஒப்புமை
அன்னாய் வாழி வேண்டு அன்னை
கேட்டியோ வாழி வேண்டு
அம்ம வாழி தோழி
என்று இவர் பயன்படுத்தியுள்ள தொடர்கள் பிற பாடல்களில் பயின்றுவந்துள்ளதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நல்லது.