உள்ளுறை இலக்கியம்
சங்க இலக்கியத்தில் சங்ககாலப் புலவர்கள், அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். "குறிப்புப் பொருள் உத்தி" எனவும் இதனை அழைப்பர். வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது - உள்ளுறை உத்தியாகும்.
உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி. உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை "உள்ளுறை உவமை" என்றனர்.
சங்க இலக்கியத்தில் உள்ளுறை அமைந்த பாக்கள் நிறைய உள. அவற்றில் குறுந்தொகை பாடல் ஒன்று இது.
தலைவன் திருமணம் நடந்த சிலநாட்களிலே தலைவியைப்பிரிந்து பரத்தமை மேற்கொண்டு ஒழுகுகின்றான். அவன் திரும்பி வந்து வாயில் வேண்டியபோது தோழி, தலைவியின் மெலிவும், ஊரலரும் கூறி வாயில் தர மறுக்கிறாள். அப்பொழுது,
- “கரும்பின் எந்திரம் களிற்றெதிர் பிளிற்றும்
- தோ்வண் கோமான் தேனுார் அன்ன இவள்
- நல்லணி நயத்து நீ துறத்தலின்
- பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே“
என்று கூறுகின்றாள். தேனுாரின் சிறப்பைக்கூறித் தலைவியின் அழகினைப் புலப்படுத்துகின்றாள்.
கரும்புகளை அரைத்துச் சாறு பிழியும் பொறியின் ஒலியானது, யானையின் பிளிறுகின்ற ஒலிக்கு எதிராக ஒலிக்கும் தேனுார் என்தாகும். இதில் கரும்பு ஆலை ஒலிப்பது போலத் தலைவன் வந்து தோழியை வாயில் வேண்டி “யான் இவள் காதலில் உடல் மெலிந்தேன், அன்புடன் என்னைக் கலந்து இன்பமுடன் வாழுமாறு செய்“ எனப் பெருங்குரலுடன் தலைவன் புலம்புகின்றான் என்பது உள்ளுறையாகும். இதற்குத் தோழி, தலைவியோ, நின் குரலுக்கும் மேலாக என் காதலன் என்னைப் பற்றிச்சிந்திக்காது விட்டு விட்டுப்பிரிந்தான். அப்பிரிவினால் எனது நெற்றி பலரும் அறியப் பசந்தது, அதனால் அவன் இங்கு வருதல் தகாது, அவன் உறவு இனி எனக்கு வேண்டாம் என்று வெறுத்துப் புலம்புகின்றாள். ஆதலால் யான் நினக்கு எங்ஙனம் வாயிலாய்ச் சென்று தலைவியை ஆற்றி நின்னுடன் கூட்டுவேன் என்று தோழி தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.
வெளி இணைப்புகள்
- இலக்கிய நயங்கள்
- இலக்கிய உத்திகள் பரணிடப்பட்டது 2010-01-17 at the வந்தவழி இயந்திரம், இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி