உருவம்
உருவம் | |
---|---|
இயக்கம் | ஜி. எம். குமார் |
தயாரிப்பு | டி. பி. சிங் தருண் ஜலான் |
கதை | ஜி. எம். குமார் ஆர். பி. விஸ்வம்(வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | வேலு பிரபாகரன் |
படத்தொகுப்பு | ஏ. பி. மணிவண்ணன் |
கலையகம் | பிரதிக் பிக்சர்ஸ் |
விநியோகம் | பிரதிக் பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 15, 1991 |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உருவம் (Uruvam) ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது வயது வந்தோருக்கான திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் 1991 இல் வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஜி. எம். குமார் இயக்கினார். இத்திரைப்படத்தில் மோகன், பல்லவி, ஆர். பி. விஸ்வம், அறிமுக நடிகர் வீர பாண்டியன், ஜெய்மாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை டி. பி. சிங் மற்றும் தருண் ஜலான் ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 15 மார்ச் 1991 இல் வெளிவந்தது.[1][2][3]
கதைக்களம்
ஒரு பணக்காருக்கு முறைப்படியல்லாத திருமணத்தின் பேரில் பிறந்த மகன், அவர் வசித்து வந்த அரண்மனை மீது நீதிமன்ற வழக்கில் தோற்கிறார். எனவே அவர் பங்காரு முனி (சத்யஜித்) என்பவரிடம் சென்று முறைப்படியான மகனான மோகன் மற்றும் குடும்பத்தார் மீது அழிவினை ஏற்படுத்தக்கூடிய மந்திர தந்திர சூனியங்களை ஏவி விடுகிறார். மோகன் தன்னுடைய மனைவி ஜெய்மாலா, அவரது இரண்டு குழந்தைகள், அவரது தங்கை ராசி (பல்லவி) மைத்துனர் அசோக் (வீரபாண்டியன்), அவரது மனைவியின் தங்கை மீனா (ரோஷினி) ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவர்கள் அனைவரும் வழக்கில் வெல்லப்பட்ட அரண்மனை போன்ற அந்த வீட்டிற்குக் குடி போகின்றனர். மோகன் ஒரு இறைமறுப்பாளரும், இயற்கைக்கு மீறிய சக்திகளை நம்பாதவரும் ஆவார். விரைவில், இந்தக் குடும்பமானது சில பங்காரு முனியால் ஏவிவிடப்பட்ட இயற்கைக்கு மீறிய சக்திகளால் துயரத்திற்கு ஆளாகிறது. அந்தச் சக்தியே திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் காட்டப்பட்ட இறந்த பணக்கார நபராவார். இந்த தீய சக்தியானது மோகனின் உடலில் இருந்து கொண்டு மோகனின் மனைவி, அவரது குழந்தைகள், மைத்துனர் மற்றும் கடவுளிடம் சரணடைய வற்புறுத்திய பங்காரு முனி ஆகியோரைக் கொல்கிறது. இறுதியாக ஜோல்னா சாமி (ஆர். பி. விஸ்வம்) மோகனையும், குடும்பத்தில் எஞ்சியுள்ளோரையும் காப்பாற்ற வருகிறார். அவர் தீய சக்தியுடன் போராடி வெல்கிறார். ஆனால், மோகன் ஒரு மனநோயாளிகளுக்கான காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் சர்வ வல்லமை படைத்த கடவுளை நம்பாமல் இருந்தமைக்காக வருந்துகிறார்.
நடிப்பு
- மோகனாக மோகன்
- ராசியாக பல்லவி
- ஜோல்னா சாமியாக ஆர். பி. விஸ்வம்
- அசோக்காக வீர பாண்டியன்
- மோகனின் மனைவியாக ஜமைலா
- பங்காரு முனியாக சத்யஜித்
- மூர்த்தி
- மீனாவாக ரோசினி
- மோகனின் மகனாக கிருஷ்ணபிரசாத்
- மோகனின் மகளாக பேபி சுவர்ணலதா
- வெங்கடேசாக கிரேசி வெங்கடேஷ்
- வைத்தியநாதன்
- ஆர். டி. மதுரை மணி
- சொட்டை மணி
- பாண்டியன்
தயாரிப்பு
திரைப்படத்தின் வளர்ச்சி
பாக்யராஜின் முன்னாள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அறுவடை நாள் திரபை்படத்தை இயக்கிய ஜி. எம். குமார் இத்திரைப்படத்தை இயக்கினார். அவர் இயக்கி சத்யராஜ் மற்றும் ராதா நடித்துத் தோல்வியடைந்த பிக் பாக்கெட் மற்றும் கார்த்திக், பல்லவி ஆகியோர் நடித்த இரும்பு பூக்கள் ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார். உருவம் திரைப்படம் அவரது முதல் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் நடிகை பல்லவியின் சகோதரர் மற்றும் அவரது பங்குதாரரால் தயாரிக்கப்பட்டது.[3][4]
நடிப்பு
மோகன் தனக்கு நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் வந்த கதாநாயகனுக்கான வாய்ப்பை தனக்கான புதிய அத்தியாயத்திற்கான நம்பிக்கையாகக் கருதி ஏற்றுக்கொண்டார். ஜி. எம். குமாருடன் முன்னதாக இரு திரைப்படங்களில் பணியாற்றிய நடிகை பல்லவி ஜி. எம். குமாரின் தற்போதைய படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். கதையின் மிக முக்கிய கதாபாத்திரமான ஜோல்னா சாமியாக நடித்த ஆர். பி. விஸ்வம் படத்தின் வசனங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். அறிமுக நடிகரான அரசவர்தன் வீர பாண்டியன் பல்லவியின் கணவராகவும், ஜெய்மாலா மோகனின் மனைவியாகவும் நடித்தனர். மூன்று வேறுவேறு ஒளிப்பதிவாளர்களான கே. ராஜ்ப்ரீத், இளவரசன் மற்றும் தயாள் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். கே. ஏ. பாலன் படத்தின் கலை இயக்குநர் பணியை மேற்கொண்டார். படத்தொகுப்பினை ஏ. பி. மணிவண்ணன் மேற்கொண்டார்.[3]
படப்பிடிப்பு
இத்திரைப்படம் ஒரு குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜி. எம். குமார் மூன்று வெவ்வேறு குழுக்களை வைத்து படமாக்கியுள்ளார். ஒவ்வொரு குழுவிலும் ஒரு உதவி இயக்குநரும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். எஸ். கோவிந்தராஜ் உடன் கே. ராஜ்ப்ரீத், எஸ். செல்வக்குமார் உடன் இளவரசன், டி. நாராயணமூர்த்தி உடன் தயாள் என மூன்று குழுக்கள் தனித்தனியாகப் பணிபுரிந்தனர். இத்திரைப்படத்தை முடிக்க 12 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. இத்திரைப்படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை. இசையமைப்பாளர் இளையராஜா இத்திரைப்படத்தில் பிண்ணனி இசைக்கே அதிக முக்கியத்துவம் அளித்திருந்தார். அத்தோடு ஒரு பாடலையும் உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் காமமும், அதிக திகில் காட்சிகளும் கொண்டிருந்ததால் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவால் நிறைய வெட்டுகளுக்குப் பிறகு "வயது வந்தோருக்கு மட்டும்" என்ற சான்றிதழுடன் வெளிவந்தது[3]
வரவேற்பு
இத்திரைப்படம் வசூல்ரீதியிலான வெற்றியைப் பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ "Filmography of uruvam". cinesouth.com. Archived from the original on 2006-10-29. பார்க்கப்பட்ட நாள் 2013-06-11.
- ↑ "Ooruvam (1991) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Uruvam", இந்தியன் எக்சுபிரசு, p. 7, 1991-02-22, பார்க்கப்பட்ட நாள் 2013-06-22
- ↑ "GM Kumar – Director Bala's Pick". 2011-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.