உரிச்சொல் நிகண்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழில் உள்ள சொற்களுக்கு நிகரான அண்டி நிற்கும் சொற்களைத் தொகுத்துக் கூறுவது நிகண்டு.
நிகர்+அண்டு = நிகரண்டு > நிகண்டு.

உரிச்சொல் நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூலைக் கி.பி.14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காங்கேயர் என்னும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் இயற்றினார். வெண்பாவால் இயற்றப்பட்ட இந் நிகண்டு 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 287 சூத்திரங்களினால் 3200 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.

நிகண்டுகள் சிறு கண்ணோட்டம்

சங்க காலத்தில் சோழநாட்டு அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல் ‘அம்பர் கிழான் அருவந்தை’. இவன் மகன் சேந்தன்.

  • 10-ஆம் நூற்றாண்டு வாக்கில் இவர்கள் வழியில் வந்த சேந்தன் போற்றிய தமிழ்ப்புலவர் திவாகர முனிவர்.இவர் செய்த நிகண்டு நூல் சேந்தன் திவாகரம்.
  • திவாகர முனிவர் மகன் பிங்கல முனிவர். பிங்கல முனிவர் செய்த நூல் பிங்கல நிகண்டு.
  • பின்னர் 14-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த காங்கேயர் என்பவர் செய்த நூல் உரிச்சொல் நிகண்டு.
  • பின்னர் 14 அல்லது 15-ஆம் நூற்றாண்டு வாக்கில் கயாதரர் என்பவர் செய்த நூல் கயாதரம்.
  • பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் மண்டல புருடர் என்பவர் செய்த நூல் சூடாமணி நிகண்டு.
  • பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் ஆண்டியப்பப் புலவர் செய்த ஆசிரிய நிகண்டு

ஆசிரிய நிகண்டு - காலம், குறிப்பு

  • மதுரைச் சிவப்பிரகாசர் [1] என்பவர் சிவப்பிரகாசம் [2] என்னும் நூலுக்கு எழுதிய உரையில் இந்த நிகண்டின் பாடல் ஒன்றை [3] மேற்கோளாகத் தந்துள்ளார். எனவே உரிச்சொல் நிகண்டின் காலம் 14-ஆம் நூற்றாண்டு எனலாம்.
  • உரிச்சொல் நிகண்டு காட்டும் வணக்கத்தைக் குறிக்கும் சொற்கள்
காணல்
சலாம் செய்தல்
தண்டன் (இடுதல்)
தலை தாழ்தல்
தழுவல்
தொழுதல்
பணிதல்
முயங்கல்
வணங்கல்
வந்தனை
விள்ளல் [4]
இவற்றில் ‘சலாம்’ என்னும் சொல் முகமதியர் வரவால் புகுந்தது.
  • கொங்குநாட்டு நூல் ஒன்று இதன் ஆசிரியர் காங்கேயரைத் தன் நாட்டு மோரூரில் வாழ்ந்தவன் எனக் குறிப்பிடுகிறது. [5]
காங்கேயன் நாலாயிரக்கோவை என்னும் நூல் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது.
காங்கேயர் செங்கற்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்தவர் என்னும் கருத்தும் உண்டு.
திருக்கானை என்னும் ஊரில் வாழ்ந்த வணிகன் ‘பராக்கிரம தேவ பாண்டியன்’ என்பவன் இந்த நிகண்டை 10 தொகுதியில் சேர்த்தான் என்னும் குறிப்பு இந் நூலின் ஏட்டுப் பிரதி ஒன்றில் உள்ளது.
  • காங்கேயர் சைவர் என்பதை இந்நூலிலுள்ள கடவுள் வணக்கப் பாடல்களால் உணரமுடிகிறது.
  • நூலில் உள்ளவை
12 தொகுதி
3200 சொற்களுக்குப் பொருள்
  • பதிப்பு
  1. 1840 புதுச்சேரி பதிப்பு
  2. 1858 யாழ்ப்பாணம் சதாசிவப்பிள்ளை பதிப்பு
  3. 1905 சுன்னாகம் குமாரசாமிப்பிள்ளை பதிப்பு

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
  • சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

அடிக்குறிப்புகள்

  1. 1488
  2. மொத்த பாடல் 38
  3. 35 ஆம் பாடல்
  4. வந்தனை காணல் வணங்கல் பணிதலே
    தந்தலை தாழ்தல் சலாம்செய்தல் – முந்தித்
    தொழுதலே தண்டன் துடர்ந்து முயங்கல்
    தழுவலே விள்ளல்எனச் சாற்று
  5. கொங்குமண்டல சதகம் 91
"https://tamilar.wiki/index.php?title=உரிச்சொல்_நிகண்டு&oldid=17163" இருந்து மீள்விக்கப்பட்டது