இரும்பல் காஞ்சி
Jump to navigation
Jump to search
இரும்பல் காஞ்சி என்னும் நூல் முழுமையானதாகக் கிடைக்கவில்லை.
இந்த நூலின் பெயரைச் சொல்லும் குறிப்புகளை இரண்டு உரைநூல்கள் தருகின்றன.
இந்த இரண்டு உரைநூல்களும் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியவை.
இந்த உரைகளில் இந்த நூலின் 5 பாடல்கள் தரப்பட்டுள்ளன.
பாடல் 1
- எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை
- மையறு கேள்வி கேளாதோர்க்கே [1]
- பாடலின் செய்தி
- நற்சொல் கேளாத செவியிலுள்ள துளை அம்பு பாய்ந்த காயம்
பாடல் 2
- பகுதிக் கருவின் முட்டைக்
- கதிர் விடும் பெருங்குறை வாங்கி வலங்கையிற்
- பூ முதல் இருந்த நான்முகத் தனிச்சுடர்
- வேதம் பாடி மேதகப் படைத்தன
- எண் பெரு வேழம் [2]
- பாடலின் செய்தி
- அண்டத்தின் முட்டை செங்கதிர் மலர் (ஞாயிறு). இதில் அமர்ந்துகொண்டு நான்முகன் வேதம் பாடினான். அத்துடன் 8 திசைகளுக்கும் 8 யானைகளைப் படைத்தான்.
பாடல் 3
- நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழல்நாறி
- காலை இருள்சீக்கும் காய்கதிர்போல் – கோல
- மயில்தோகை மேல்தோன்றி மாக்கடல்சூர் வென்றோன்
- அணிச்சே வடிஎன் அரண். [3]
- பாடலின் செய்தி
- கடல் என்னும் தோகைமயில் மேல் கதிரவன் போலத் தோன்றி, சூரபனமாவை வென்ற முருகள் சேவடி எனக்கு அரண் (காப்பு)
பாடல் 4
- ஆர்கலி ஞாலத்(து) அறங்காவ லாற்சிறந்த
- பேரருளி னார்க்குப் பெறலருமை யாதுளதோ
- வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்
- போர்மலைந்து வெல்லும் புகழ் [4]
- பாடலின் செய்தி
- அறங்காவலினால் சிறந்த மன்னனுக்கு கடலலை போல வரும் படையையும் வெல்லுதல் எளிது.
பாடல் 5
- கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம்
- இருங்கடி மண்மகளை ஏந்தினவே ஆயின்
- பெரும்பெயர் ஏனத்(து) எயி(று) அனைய அன்றே
- கரும்பறை தொண்டையான் தோள் [5]
- பாடலின் செய்தி
- கடலில் மிதந்துவந்த தொண்டைமானின் தோள்கள் பகைவரைத் தாக்கும்போது யானையின் கொம்புகளைப் போன்றவை.
காலம்
- தமிழ்நாட்டில் தொண்டையரின் கடைசி மன்னன் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன். நந்திக் கலம்பகம் என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். எனவே இந்த நூலின் காலம் 9ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005