இரா. பாலகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரா.பாலகிருஷ்ணன்
R.Balakrishnan
Radio Bala2.jpg
Radio Bala
மலேசிய வானொலி
இந்தியப் பகுதி
தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாலகிருஷ்ணன் ராமானுஜம்

26 டிசம்பர் 1936
ரூபானா தோட்டம்
தெலுக் இந்தான்
பேராக் மலேசியா
இறப்பு25 மே 2009
பெட்டாலிங் ஜெயா சிலாங்கூர் மலேசியா
இளைப்பாறுமிடம்கோலாலம்பூர்,
தேசியம்மலேசியர்
துணைவர்கிரிஜா பாலகிருஷ்ணன்
பிள்ளைகள்அனுராதா (1966)
இலட்சுமி (1967)
வெங்கடகிரி (1969)
ஸ்ரீதர் (1973)
வாழிடம்(s)பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
முன்னாள் கல்லூரிமலாயா பல்கலைக்கழகம்
சிஙகப்பூர்
1956–1959
உடைமைத்திரட்டுயுனெஸ்கோ ஆசிய பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகம்

இரா.பாலகிருஷ்ண்னன் (பிறப்பு: டிசம்பர் 26, 1936) மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஆழமானக் காலச் சுவடுகளைப் பதித்துச் சென்றவர். இவர் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியின் தலைவராக இருந்த போது பல புதுமையான மாற்றங்களைச் செய்தார். பல நுணுக்கமான அணுகு முறைகளைக் கொண்டு வந்தார். இவர் பல தமிழ் எழுத்தாளர்களை வானொலிக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

வரலாறு

இரா.பாலகிருஷ்ணனின் தந்தையாரின் பெயர் ராமானுஜம். தாயாரின் பெயர் கிருஷ்ணம்மாள். இவர் மலேசியா, பேராக், தெலுக் இந்தான், ரூபானா தோட்டத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் அத்தோட்டத்தில் கணக்கராகப் பணியாற்றினார். அவருக்கு பாலகிருஷ்ணன், பத்பநாபன், ஹரிராமுலு, சாம்பசிவம், ராதா, இந்திராவதி, புஷ்பலீலா என ஏழு பிள்ளைகள்.

பள்ளி வாழ்க்கை

ஜப்பானியரின் ஆட்சிகாலத்தில் ரூபானா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் சிரம்பான் சென்று அங்கு தன் மாமாவின் இல்லத்தில் தங்கி தன் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தார். காலையில் ஆங்கிலோ சீனப் பள்ளியில் ஆங்கிலத்தையும் பிற்பகலில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழியையும் கற்றார்.

பின்னர் அவருடைய மாமா வேலை மாற்றலாகி தெலுக் இந்தான் வந்தார். அதனால், பாலகிருஷ்ணனும் அவருடன் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தெலுக் இந்தான் ஆங்கிலோ சீனப் பள்ளியிலும், பாரத மாதா தமிழ்ப்பள்ளியிலும் கல்வியைத் தொடர்ந்தார். அவருடைய பள்ளி வாழ்க்கை சிரமமானது.

அதிகாலையிலேயே எழுந்து கிந்தா ஆற்றைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். பின்னர் எட்டு கிலோமீட்டர் சைக்கிளில் மிதித்து பள்ளி செல்ல வேண்டும். அவருக்கு காற்பந்து விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும்.

தலைமை மாணவ ஆளுகையாளர்

ஆறாம் படிவம் படிக்கின்ற காலத்தில் ஸ்டான்லி பத்மன் எனும் ஆசிரியரின் இல்லத்தில் தங்கிப் படித்தார். ஸ்டான்லி ஆசிரியர் தான் அவருக்கு நம்பிக்கைக்குரிய அறிவுரையாளராகவும் காப்பாளராகவும் விளங்கினார். பாலகிருஷ்ணனின் வாழ்க்கையைத் திசை மாற்றி அமைத்தவரும் அவரே.

விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கியதால் அவர் பள்ளியின் தலைமை மாணவ ஆளுகையாளராக நியமிக்கப் பட்டார். அந்தக் கால கட்டத்திலேயே பாலகிருஷ்ணனின் படங்கள் மலேசிய நாளிதழ்களில் பிரசுரமாயின.

மலாயா பல்கலைக்கழகம்

பாலகிருஷ்ணன் தம்முடைய ஆறாம் படிவ இறுதிக் கல்வியை ஈப்போ ஆங்கிலோ சீனப் பள்ளியியில் படித்து முடித்தார். பின்னர் 1956 ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகம் சென்று பட்டப் படிப்பை மேற்கொண்டார். அப்போது மலாயா பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இருந்து இயங்கி வந்தது.

1961 ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் அரசாங்கங்கள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு அப்பல்கலைக்கழகத்தை இரு பல்கலைக்கழகங்களாகப் பிரித்தன. கோலாலம்பூரில் உள்ள பல்கலைக்கழகம் மலாயா பல்கலைக்கழகம் என்றும் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என்றும் தனித் தனியாகச் செயல்படத் தொடங்கின.

மலேசிய வானொலியில் நிகழ்ச்சி உதவியாளர்

பல்கலைக்கழகத்திலும் அவர் காற்பந்து போட்டியில் சிறந்து விளங்கினார். பல்கலைக்கழக மாணவர்கள் அவரை ‘ராக்பில்லர்’ என்று செல்லமாக அழைத்தனர். அவருக்கு ‘கோலி பாலா’ எனும் மற்றோர் அடைமொழியும் இருந்தது. 1960 ஆம் ஆண்டு இந்தியக் கல்வியில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவரைப் பாராட்டி பல்கலைக்கழகத்தின் நூல் பரிசும் வழங்கப் பட்டது.

அதே ஆண்டு தம்முடைய 24வது வயதில் மலேசிய வானொலியில் (அப்போது மலாயா வானொலி) நிகழ்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். மலேசிய வானொலியில் பணிபுரிந்து கொண்டே மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவில் 1961–1970 வரை பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

ஐ.நா. பேசுகிறது

பாலகிருஷ்ணன் தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். ’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார்.

அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார். 1962லிருந்து 1972வரை மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவராகவும் மலேசிய ஒலிபரப்பு பயிற்சி மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

1976 ஆம் ஆண்டு ’யுனெஸ்கோ’ அவரை ஆசிய பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகத்தின் தலைவராக நியமித்தது. அதே ஆண்டு ’மக்கள் ஓசை’ நாளிதழின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 1991 ஆம் ஆண்டு வரை அவர் அப்பதவியில் இருந்தார்.

24 மணி நேர ஒலிபரப்பு

மலேசிய இந்தியர்களின் தலைவர்களாக விளங்கிய துன் சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ பத்மநாபன், டத்தோ எஸ்.சுப்பிரமணியம் போன்றோரிடம் நெருக்கமாகப் பழகி மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் செய்துள்ளார். அவருடைய இறுதி காலம் வரை ராம சுப்பையா படிப்புதவி கடனுதவிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

அவருடைய அயராத முயற்சியின் பலனாக மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதியில் இப்போது 24 மணி நேர ஒலிபரப்பு ஒலித்து வருகின்றது. இரா.பாலகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் இயற்கை எய்தினார்.

திருமண வாழ்க்கை

1965 மார்ச் 27ல் பாலகிருஷ்ணன் தன்னுடைய 28வது வயதில் கிரிஜா நாயுடு என்பவரைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் மலேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இவர்களுக்கு அனுராதா(1966), லெட்சுமி(1967), வெங்கடகிரி(1969), ஸ்ரீதர்(1973) எனும் நான்கு குழந்தைகள். பாலகிருஷ்ணன் கிரிஜா தம்பதியினருக்கு சைலேஷ், மனிஷா, நிக்கில், திரிஷா, திரன் எனும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

பாலகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி நுரையீரல் பாதிப்பினால் அவருடைய கோலாலம்பூர் அரா டமன்சாரா இல்லத்தில் இயற்கை எய்தினார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இரா._பாலகிருஷ்ணன்&oldid=26941" இருந்து மீள்விக்கப்பட்டது