இராம கவிராயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராம கவிராயர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இவர் பாடியனவாக ஒன்பது பாடல்கள் உள்ளன. அவற்றில் ஐந்து பாடல்கள் வெண்பா. நான்கு பாடல்கள் விருத்தம்.[1] பிரம்பூர் நாட்டில் வாழ்ந்த ஆனந்தரங்க மகிபாலன் என்பவனை முன்னிலையாக்கி இந்தப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இவன் துரை திருவேங்கடம் என்பவனின் மகன் [2] கலசை வேதாசலம் என்பவன்மேல் பாடப்பட்ட மூன்று பாடல்களும் இதில் உள்ளன.[3] பாடல்களில் சொல்லடுக்குகள் வருகின்றன.

நேரிழைக்கு விழியேழு முலையாறு காதைந்து நெற்றி நான்கு என புதுமை காட்டும் நயப்பாடலும் உள்ளது.[2] புலவர் சேலை கட்டப்பட்டுள்ள பிரமன் சிலையைப் பார்த்து நேரிழை என்று பெண்ணாக்கிப் பார்க்கிறார். பிரமனுக்குத் முகம் நான்கு. எனவே நெற்றி நான்கு. நான்கு முகத்துக்குக் கண் எட்டு. இவன் தன் ஒருகண்ணை நோண்டி பூவாக, திருமாலைப் போல் சிவபூசையின்போது போட்டுவிட்டான், எனவே எஞ்சியுள்ள கண் ஏழு. பிரமனோடு இணைந்திருப்பவள் கலைமகள். பிரமன் உடல் நான்கு முகத்தில் ஒரு முகம் இவனுடையது. அது ஆண். ஏனையவை மூன்றும் கலைமகளுக்கு உரியவை. அவளது மூன்று முகவுருக்களுக்கு ஆறு முலை. இது இவரது பாடலில் கானப்படும் நகைச்சுவை. காது நான்கு தலைக்கு எட்டு இருக்க வேண்டும். ஐந்துதான் உள்ளன. ஒரு முகத்தில் இரண்டு காதுகளும் தெரிகின்றன. ஏனையவற்றில் ஒவ்வொன்று மட்டுமே தெரிகிறது எனவே ஐந்து காதுகள் - இப்படி ஒரு விளக்கம்.

இந்த பாடல்-அடிக்கு அகப்பொருள் விளக்கம் ஒன்றும் உண்டு.
விழி ஏழு. [எ] இது ஏழைக் குறிக்கும் தமிழ் எண். ஆனந்தரங்கன் நாட்டுப் பெண்ணுக்குக் கண் எ போல் உருவம் கொண்டுள்ளது.
முலையாறு. ஆனந்தரங்கனை எண்ணிக் கண்ணீர் ஆறாகப் பாய்கிறது.
காதைந்து . தமிழ் எண் குறியீடு ஐந்து = ரு | அவள் காது ரு போல் உள்ளது.
நெற்றி நான்கு. தமிழ் எண் குறியீடு நான்கு போல் அவள் நெற்றி உள்ளது.
இந்த வகையில் இது ஒருவகைச் சொல்விளையாட்டுப் பாடல்.

மேற்கோள் குறிப்பு

  1. தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 129-130
  2. 2.0 2.1 பாடல் 1
  3. பாடல் 7,8,9
"https://tamilar.wiki/index.php?title=இராம_கவிராயர்&oldid=18335" இருந்து மீள்விக்கப்பட்டது