இராம. அரங்கண்ணல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இராம. அரங்கண்ணல் (Rama Arangannal, மார்ச் 31, 1928 - ஏப்ரல் 29, 1999) ஓர் தமிழக எழுத்தாளார், திரைப்படத் தயாரிப்பாளர்[1] மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரங்கண்ணல் நாகப்பட்டினம் மாவட்டம் கோமல் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் இராமகிருஷ்ணன் - ருக்மணி. இவர் பள்ளி நாட்களில் காங்கிரசு ஆதரவாளராக இருந்தவர். பின் திராவிட இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டார். பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்பில் (இண்டர்மீடியேட்) சேர்ந்தார். ஆனால் அதனை முடிக்கவில்லை.

இதழாளர்

பதினெட்டாவது வயதில் அகில இந்திய முஸ்லிம் லீக்கின் அதிகாரப்பூர்வ ஏடான முஸ்லிம் இதழில் துணை ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். 1949 முதல் திராவிடநாடு இதழில் பணியாற்றினார். பின் ”அறப்போர்” என்ற இதழை 1961 மார்ச் 10ஆம் நாள் தொடங்கி நடத்தினார்.

திரையுலகில்

1950களிலும் 60களிலும் இவர் எழுதிய சிறுகதைகள் பல திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவற்றுக்குத் திரைக்கதை, வசனமும் எழுதினார். அவ்வாறு வெளியான திரைப்படங்கள்: செந்தாமரை, மகனே கேள், பொன்னு விளையும் பூமி, பச்சை விளக்கு மற்றும் அனுபவி ராஜா அனுபவி. இவை தவிர கா. ந. அண்ணாதுரை எழுதிய கதையொன்று தாய் மகளுக்குக் கட்டிய தாலி என்னும் திரைப்படமாக உருவானபொழுது, அதற்கு உரையாடல் எழுதினார்.

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

திராவிட முன்னேற்றக் கழக்கத்தில்

1949 இல் திராவிடர் கழகத்திலிருந்து, அண்ணாதுரை வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (திமுக) தொடங்கிய போது அவரை ஆதரித்த முக்கிய தலைவர்களுள் அரங்கண்ணலும் ஒருவர். 1962 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் மீண்டும் இதே தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1970ஆம் ஆண்டு குடிசைப்பகுதி மாற்றுவாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்

1976 இல் திமுகவில் இருந்து வெளியேறி மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்

மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுகதோடு இணைக்கப்பட்டபொழுது இவரும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

மீண்டும் தி.மு.க.வில்

1984இல் மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.

கலைமாமணி விருது

2007-08 ஆம் ஆண்டு இவரது படைப்புகளைத் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. கலைமாமணி விருது வழங்கியும் சிறப்பித்துள்ளது.

படைப்புகள்

  1. அறுவடை (புதினம்)
  2. இதயகீதம், 1951, திராவிடப்பண்ணை, திருச்சி [3]
  3. இதய தாகம் (புதினம்)
  4. உடைந்த இதயம், 1953, திராவிடப்பண்ணை, திருச்சி.
  5. கடிகாரம் (புதினம்)
  6. செந்தாமரை (சிறுகதைகள்)
  7. நினைவுகள் (தன்வரலாறு)
  8. பச்சைவிளக்கு (சிறுகதைகள்)
  9. புழுதிமேடு, (சிறுகதைகள்), 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை-2 [4]
  10. மகளே கேள் (சிறுகதைகள்)
  11. ரஸ்புடீன், 1951, திராவிடப்பண்ணை, திருச்சி [3]
  12. ரோம், 1952, திராவிடப்பண்ணை, திருச்சி [5]
  13. வியர்வை விருந்து, 1951, பாரிநிலையம், சென்னை.[6]
  14. வெண்ணிலா (புதினம்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராம._அரங்கண்ணல்&oldid=3383" இருந்து மீள்விக்கப்பட்டது