இசைப்பிரியா
இசைப்பிரியா IsaiPriya | |
---|---|
பிறப்பு | சோபனா தர்மராஜா மே 2, 1982 நெடுந்தீவு யாழ்ப்பாணம் |
இறப்பு | மே 18, 2009 | (அகவை 27)
தேசியம் | ஈழத்தமிழர் |
பணி | ஊடகம் |
அறியப்படுவது | செய்தி தொகுத்து வழங்குதல் |
பெற்றோர் | தர்மராஜா - வேதரஞ்சினி |
வாழ்க்கைத் துணை | சிறிராம் |
பிள்ளைகள் | அகல்யா , முத்துமணி. |
இசைப்பிரியா (ஆங்கிலம்:IsaiPriya) சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய போராளி. நான்காம் ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தார். 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின[1].
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம் நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட சோபனா மானிப்பாயில் தர்மராஜா - வேதரஞ்சினி ஆகியோருக்கு நான்காவது மகளாகப் பிறந்தார். சோபனா என்று அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. சிறு வயதில் இவரது இதயத்தில் ஓட்டை உண்டு என மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. ஆனாலும் இவருக்கு உடனடியாக எந்தச் சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றார். புலமைப் பரீட்சையில் தேர்வு பெற்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்குச் சென்றார்.
வன்னிக்கு இடம்பெயர்வு
1995 ஆம் ஆண்டு மூன்றாம் கட்ட ஈழப்போரை அடுத்து இலங்கை இராணுவம் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றியது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உயிரைக் காக்க வன்னியை நோக்கி இடம்பெயர்ந்தனர். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று. சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தார்.
விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் இணைவு
வன்னியில் தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரைக் குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டார். 1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு இசையருவி என்ற இயக்கப் பெயர் கொடுக்கப்பட்டது. இசையருவியின் உடல்நிலை காரணமாக இவரை ஊடகத்துறைப் போராளியாக தெரிவு செய்தனர் விடுதலைப் புலிகள். ஊடகத்துறையில் இவர் இசைப்பிரியா என அழைக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் "நிதர்சனம்" ஒளிபரப்புச் சேவையில் செய்தி ஒளிபரப்பாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து ஒளிவீச்சு காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளரானார்[2]. இசைப்பிரியாவைத் தொடர்ந்து அவரது தங்கையும் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். இசைப்பிரியா தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் பங்கு பற்றினார். தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.
திருமணம்
2007 ஆம் ஆண்டில் தனது 26வது அகவையில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி தளபதி சிறிராம் என்பவரை இசைப்பிரியா திருமணம் செய்து கொண்டார். 2009 நான்காவது இறுதியுமான ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் இவர்களுக்கு அகல்யா என்ற ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால், ஈழப்போர்ச் சூழலில் குழந்தை நோய் வாய்ப்பட்டு மருத்துவ வசதியின்றி இறந்தது.
சரணடைதல்
வன்னியில் இசைப்பிரியாவோடு அவரது பெற்றோரும் அக்காவின் குடும்பமும், போராளித் தங்கையும் இருந்தனர். வெளிநாட்டில் இரு சகோதரிகள் இருந்தனர். குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவரும் இறந்தார். 2009 மே நடுப்பகுதியில் இசைப்பிரியாவின் போராளித் தங்கை படுகாயமுற்றார். மே 18 ஆம் நாள் இலங்கை அரசு போரில் வெற்றி கொண்டதாக அறிவித்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர். இவர்களில் இசைப்பிரியாவும், கணவர் தளபதி சிறிராமும் அடங்குவர். சிறீராம் 2009 மே 20 ஆம் நாள் இறந்ததாக இலங்கைப் பாதுகாப்புத் துறையின் இணையத்தளத்தில் கூறப்பட்டிருந்தது[3].
2010 டிசம்பரில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின[1]. இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்தனர். ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.[4][5][6] இவர்கள் இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் 2014 மே 18 அன்று வெளியாகின.[7]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Sri Lanka war crimes -video- woman's body identified
- ↑ "Journalists for Democracy in Sri Lanka". Archived from the original on 2012-04-07. பார்க்கப்பட்ட நாள் 2012-04-07.
- ↑ Identified LTTE leaders who were killed during the Last Battle பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம், Ministry of Defence and Urban Development
- ↑ இசைப்பிரியா படுகொலை வீடியோ உண்மையானதுதான்: ப.சிதம்பரம் தினமணி 02.11.2013
- ↑ http://indiatoday.intoday.in/story/isaipriya-video-disturbing-manmohan-chogm-visit-still-undecided-chidambaram/1/321435.html
- ↑ http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131101_channelfour.shtml
- ↑ "New Exclusive Pictures Of Isaipriya Alive Emerge". கொழும்பு டெலிகிராப். 18 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2014.