அ. மாற்கு
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஓவியர் மாற்கு |
---|---|
பிறந்ததிகதி | 25 சூன் 1933 |
பிறந்தஇடம் | குருநகர், யாழ்ப்பாணம் |
இறப்பு | 27 செப்டம்பர் 2000 | (அகவை 67)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | சிற்பக்கலை, ஓவியம் |
பெற்றோர் | ஹேரத் முதியான்சலாக்கே அப்புகாமி, வெரோனிக்கா |
ஓவியர் மாற்கு என அறியப்படும் அ. மாற்கு (சூன் 25, 1933 - செப்டம்பர் 27, 2000) ஈழத்துத் தமிழ் ஓவியர் ஆவார்.[1] நவீன ஓவியங்கள், மற்றும் சிற்பங்கள் மூலம் இலங்கையில் தனித்த ஆளுமை படைத்தவர். ஓவியப் பயிற்சி வகுப்புகளை யாழ்ப்பாணத்தில் நடத்தி வந்தவர்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
ஓவியர் மாற்கு 1933 சூன் 25 இல் யாழ்ப்பாணம், குருநகர் என்ற ஊரில் வரோனிக்கா, ஹேரத் முதியான்சலாகே அப்புகாமி ஆகியோருக்குப் பிறந்தார். சிறுவயதிலேயே சிற்பங்களைப் பார்ப்பதிலும், அவற்றை செய்வதிலும் ஈடுபாடு காட்டினார்.[3] யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார்.[2] சம்பத்தரிசியார் கல்லூரி நூலகத்திலிருந்த ஓவியப் புத்தகங்களை விரும்பிப் படித்தார். குருநகரில் புனித யேம்சு கல்லூரியில் ஓவிய வகுப்புகளை நடத்தி வந்த ஓவியர் பெனடிக்டிடம் உருவ-ஓவியப் பயிற்சியைப் பெற்றார்.[2][3]
பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர், கொழும்பு தொழினுட்பக் கல்லூரியில் 1953 இல் ஓவியப்பிரிவில் சேர்ந்து ஐந்தாண்டுகள் முழுநேரமாக ஓவியம் கற்று டிப்புளோமா பட்டம் பெற்றார். இங்கு அவர் கல்வி கற்கும்போதே கழுவுதற்பாணி நீர்வர்ண ஓவியங்களை வரையக் கற்றுக் கொண்டார்.[3]
ஓவியப் பணி
பட்டப்படிப்பை முடித்த பின்னர், மாற்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும், பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது வின்சர் ஓவியக் கழகம் (1938-1955) என்ற அமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். 1959 இல் விடுமுறை ஓவியக் கழகம் என்ற பெயரில் ஓவியப் பயிற்சிக் குழு ஒன்றை ஆரம்பித்தார். இக்குழு மூலம் பல இளம் ஓவியர்களுக்குப் பயிற்சி அளித்தார். பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தினார். இப்பயிற்சிக் கழகம் 1995 வரை யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தது.[2][3]
1957 இல் கொழும்பு கலாபவனத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியில் மாற்குவின் ஓவியத்துக்கு இலங்கை மகாதேசாதிபதியின் இரண்டாவது பரிசு கிடைத்தது.[2]
இறுதிக் காலம்
ஓவியர் மாற்கு தனது இறுதிக் காலத்தில் ஈழப்போர்த் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து தான் சேகரித்த அனைத்துப் பொருட்களையும் விட்டு விட்டு இடம்பெயர்ந்து மன்னாரில் வசித்து வந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "THF-Art Gallery [Mark]". தமிழ் மரபு அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "தேடலும் படைப்புலகமும் (ஓவியர் மாற்கு சிறப்பு மலர்) 1987". ஆகத்து 1987. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.
- ↑ 3.0 3.1 3.2 3.3 வாசுகி (சூன் 2000). "ஓவியற் மாற்குவும் அவரது ஓவியங்களும்". காலம். Archived from the original on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.
- ↑ அருந்ததி ரத்னராஜ். "மாற்கு என்னும் 'மனிதன்' பற்றி". உயிர்நிழல் 2000.09-10. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]