அ. சிதம்பரநாதச் செட்டியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அ. சிதம்பரநாதச் செட்டியார்
அ. சிதம்பரநாதச் செட்டியார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
அ. சிதம்பரநாதச் செட்டியார்
பிறந்ததிகதி (1907-04-03)3 ஏப்ரல் 1907
பிறந்தஇடம் கும்பகோணம், தமிழ்நாடு
இறப்பு நவம்பர் 22, 1967(1967-11-22) (அகவை 60)
பணி தமிழ்ப் பேராசிரியர்
அறியப்படுவது தமிழறிஞர், எழுத்தாளர்

அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 – நவம்பர் 22, 1967) தமிழகத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இவர் குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார். அங்குள்ள நேட்டிவ் உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928-ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று. "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை வாங்கினார். அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் தந்து கெளரவித்தது. தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1943-ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.

பணிக்காலம்

சென்னை புதுக்கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரியிலும் விரிவுரையாளராகவும், 1946 முதல் 1958 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். இவரது தமிழ்த்துறைப் பணிகளைப் பாராட்டி பெரியார் 27.7.46 அன்றைய குடியரசு இதழில் பாராட்டுரை வழங்கியுள்ளர்.[1] 1948ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராக ஐந்து மாதங்கள் பணியாற்றியுள்ளார். துணைவேந்தராகப் பணியாற்றிய, முதல் தமிழ் பேராசிரியர் இவர் தான். பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழக மேலவைக்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து, அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே ஆகும். சாகித்திய ஆக்காதமியின் உறுப்பினராகவும், மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, பிரான்சு, இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தினார்.1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.

1961ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். 1964ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது.

எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும், தம் இறுதிக்காலத்தில், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வராக 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே, தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார்.

இவர் இயற்றிய நூல்கள்

இவர் எழுதிய நூல்களில் பின்வருவன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

  • தமிழோசை
  • முன்பனிக்காலம்
  • இளங்கோவின் இன்கவி
  • தமிழ் காட்டும் உலகு
  • செங்கோல் வேந்தர்
  • தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
  • கட்டுரைக்கொத்து
  • An Introduction To Tamil Poetry' -தமிழ்க் காப்பியங்களின் சிறப்பினை நிலைநாட்டிய நூலை, சிலப்பதிகாரத்தினையும் அடிப்படையாகக் கொண்டு எழுதினார்.
  • சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஏ.இலட்சுமணசாமி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க, "ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்" எனும் அரிய நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றுத் திறம்பட, 1959 ஆம் ஆண்டு முதல் 1965 வரைப் பணியாற்றினார்.
  • Advance Study of Tamil Prosody
  • CILAPPADIKARAM THE EARLIEST TAMIL EPIC
  • உழைப்பால் உயர்ந்த ஒருவர்
  • தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்
  • பெரியார் மன்றோ
  • மன்னுயிர்க்கு அன்பர்

மறைவு

ஏ. சி. செட்டியார் என்று அழைக்கப்பட்ட இவர் மதுரையில் 1967 நவம்பர் 22 அன்று காலமானார்.

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  1. க.அ.இராமசாமிப் புலவரின் 'தமிழ்ப் புலவர் வரிசை (பகுதி 28) பக்கம் 84.