அணி இலக்கண நூல்கள்
அணியிலக்கணங்கூறும்நூல்கள் என்பது செய்யுளிலமைந்துள்ள அணிகளின் இலக்கணங்கூறும் நூல்களாகும். தமிழ்மொழியில் அணியிலக்கணங்கூறும்நூல்கள் குறைவே. தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், குவலயானந்தம், சந்திராலோகம், முத்துவீரியம் என பலநூல்கள் தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களாகும். இவையன்றி அணியியல் என்ற ஒருநூல் இருந்து மறைந்துவிட்டது.
தண்டியலங்காரம்
தண்டியலங்காரம் வடமொழியிலுள்ள காவியதர்சம் என்ற இலக்கணநூலை அடிப்படையாகக்கொண்டு, தமிழ்த்தண்டியாரால் எழுதப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்தது. 35 பொருளணிகளைக் கூறுவது. இதன் மூலமும் உதாரணச்செய்யுளும் நூலாசிரியராலேயே செய்யப்பட்டது. இதன் காலம் அனபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்கனின் காலமாகிய 12-ஆம் நூற்றாண்டாகும். இதற்கு சுப்பிரமணிய தேசிகர் என்பவர் உரை செய்துள்ளார்.
வீரசோழியம்
இது வீரராசேந்திர சோழன் பெயரில் புத்தமித்திரர் என்ற சமணமுனிவரால் செய்யப்பட்டது; கட்டளைக்கலித்துறை என்னும் காரிகையாப்பால் அமைந்துள்ளது; ஐந்திலக்கணமும் கூறுவது; 35 பொருளணிகளைக்கூறுவது. இதன் காலம் 11ஆம் நூற்றாண்டாகும். இதற்கு பெருந்தேவனார் என்பவர் உரை செய்துள்ளார்.
மாறனலங்காரம்
இது நம்மாழ்வார் பேரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் செய்யப்பட்டது. பொதுவியல் மட்டும் வெண்பாயாப்பிலும், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் மூன்றும் நூற்பாயாப்பிலும் அமைந்துள்ளன. இதில் 64 பொருளணிகள் கூறப்படுகின்றன. நூலாசிரியராலேயே மூலமும் உதாரணமும் தரப்பட்டுள்ளது. இதன் காலம் 16 -ஆம் நூற்றாண்டாகும். இதற்குக் காரி ரத்னக் கவிராயர் என்பவர் உரை எழுதியுள்ளார்.
இலக்கண விளக்கம்
இது வைத்திய நாத தேசிகர் என்பவரால் தண்டியலங்காரத்தைத் தழுவித் தொகுக்கப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்துள்ளது. ஐந்திலக்கணமும் கூறுவது. இதில் 35 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியரே உரைசெய்துள்ளார். இதன் காலம் 17-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியாகும்.
தொன்னூல் விளக்கம்
இது ஜோசப் பெஸ்கி என்னும் பாதிரியாராகிய வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. நூற்பாயாப்பில் அமைந்துள்ளது. ஐந்திலக்கணமும் கூறுவது. இதில் 30 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியரே உரைசெய்துள்ளார். இதன் காலம் 17-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும்.
அணி இலக்கண நூல்கள் (காலநிரல்) [1]
1
நூல் | ஆசிரியர் | ஆண்டு | யாப்பு | பாடல் | குறிப்பு |
---|---|---|---|---|---|
தொல்காப்பியம் | தொல்காப்பியர் | கி.மு. 500-300 | நூற்பா | உவம இயல் பகுதியில் உள்ளவை | மூல நூல் |
அணியியல் | அகத்தியர் | 8 ஆம் நூற்றாண்டு | நூற்பா | - | நூல் முழுமைநிலையில் கிடைக்கவில்லை |
வீரசோழியம் | புத்தமித்திரர் | 11 ஆம் தூற்றாண்டு | கட்டளைக் கலித்துறை | 39 | வடமொழியில் 'தண்டி' என்பவர் எழுதிய இலக்கணத்தைத் தழுவியது |
தண்டியலங்காரம் | தமிழ்ப் புலவர் தண்டி | 12 ஆம் நூற்றாண்டு | நூற்பா | 125 | வடமொழியில் 'தண்டி' என்பவர் எழுதிய இலக்கணத்தைத் தழுவியது. பொருவியல், பொருளணி, சொல்லணி என்னும் தலைப்புகளில் உணிகளை விளக்குவது |
மாறன் அலங்காரம் | திருக்குருகைப் பெருமாள் கவிராயர் | 16 ஆம் நூற்றாண்டு | நூற்பா | எடுத்துக்காட்டு | பாயிரம், பொது, பொருளணி, சொல்லணி, எச்சவியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. |
2
நூல் | ஆசிரியர் | நூற்றாண்டு | யாப்பு | பாடல் | குறிப்பு |
---|---|---|---|---|---|
இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் | 17 | நூற்பா | 90 | 5 இலக்கணங்களைக் கூறும் இந்த நூலில் அணி இலக்கணம் என்பது ஒரு பகுதி நூற்பா 620 முதல் 709 வரை உள்ள நூற்பாக்களில் சொல்லப்பட்டுள்ளது. [2] |
குவலயானந்தம் [3] | மாணிக்க வாசகர் | 19 | நூற்பா | 132 | அணியியல் என்னும் பகுதி, நூற்பா 151 முதல் 282 வரை [4] |
அணி இலக்கண வினாவிடை | விசாகப் பெருமாள் ஐயர் | 19 | உரைநடை | - | இது ஒரு தொகுப்பு நூல் |
சந்திராலோகம் | முத்துசாமி ஐயங்கார் | 19 | நூற்பா | 126 | சந்திரலோகம் என்னும் நூலின் மொழிபெயர்ப்பு |
தண்டியலங்கார சாரம் | சீனிவாசராகவாசாரி | 19 | உரைநடை | - | தண்டி என்னும் வடமொழி நூலின் சுருக்கம் |
தொனி விளக்கு | சுப்பிரமணிய சாஸ்திரி | 20 | உரைநடை | - | தண்டி என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு |
பிற நூல்கள்
- வடமொழியில் ஜயதேவர் என்பவர் எழுதிய சந்திராலோகம் என்ற நூல், முத்துசாமி ஐயங்கார் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இதில் 100 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதன் காலம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.
- வடமொழியில் அப்பைய தீட்சிதரால் செய்யப்பட்ட குவலயானந்தம் மீனாட்சிசுந்தர கவிராயரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. இதில் 124 பொருளணிகள் கூறப்பட்டுள்ளன. இதன் காலம் 19 -ஆம் நூற்றாண்டாகும்.
- முத்துவீரியம் என்பது முத்துவீரிய உபாத்தியாயர் என்பவரால் இயற்றப்பட்டது. ஐந்திலக்கணமும் கூறுவது. இந்நூல் பற்றி பிற செய்திகள் கிடைக்கவில்லை.
உசாத்துணை
தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 145.
- ↑ தமிழூர் முனைவர் ச. வே. சுப்பிரதணியன், பதிப்பாசிரியர் (2007). தமிழ் இலக்கண நூல்கள் (மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன்). சிதம்பரம் 608 001: மெய்யப்பன் பதிப்பகம்,. பக். 422 முதல்.
- ↑ இது ஒரு மொழிபெயர்ப்பு நூல். மூலநூல் சுப்பைய தீட்சிதர் இயற்றியது
- ↑ தமிழூர் முனைவர் ச. வே. சுப்பிரதணியன், பதிப்பாசிரியர் (2007). தமிழ் இலக்கண நூல்கள் (மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன்). சிதம்பரம் 608 001: மெய்யப்பன் பதிப்பகம்,. பக். 704 முதல்.