வைகை (இதழ்)

வைகை என்பது 1970 களில் வெளியான சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரையில் இருந்து மாதாந்தம் வெளிவந்தது.

வரலாறு

வைகை இதழின் இதழ் 1977 ஆகத்தில் வெளியானது. இதன் ஆசிரியராக ஆர். குமாரசாமி இருந்தார்.[1] அவரும் அவருக்குத் துணை சேர்ந்திருந்தவர்களும் சிற்றிதழான பிரக்ஞையை முன்மாதிரியாகக் கொண்டிருந்தார்கள். இந்த இதழ் அன்றைய கல்கி இதழ் அளவில், நல்ல வெள்ளைத் தாளில் அச்சாகி வந்தது. முதல் ஆண்டு ஒவ்வொரு இதழும் 34 பக்கங்கள் ( அட்டை தனி ) சில சமயம் அதிகமாகவும் கொண்டிருந்தது. பின்னர், பக்கங்கள் குறைந்தும் கூடியும் வந்தன. ஒரு இதழ் பத்தே பக்கங்களுடன் இரண்டு கட்டுரைகள் மட்டும் கொண்டு வெளியாகியும் உள்ளது. இதற்கெல்லாம் எழுதுகிறவர்களையே இது குறை கூறியது.

முதல் இரண்டு இதழ்களில் வைகை கவிதைகள் வெளியிட்டது. பின்னர், 'கதைகள், கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா' என்று அறிவித்தது. சிந்தனைக் கட்டுரைகள், முக்கியமாகப் புத்தக விமர்சனங்கள் வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்த தரத்துக்குக் கட்டுரைகள் வரவில்லை. ஆகவே, இதழ்கள் காலதாமதத்துடனேயே வெளியாயின.

வைகை இதழில் ந. முத்துசாமியின் நீண்ட கட்டுரைகள் வெளியாயின. தெருக்கூத்து பற்றி அவர் தெருக்கூத்துக்கு உதவி தேவை, நடேசத் தம்பிரானின் தெருக்கூத்து, கொண்டையார் தண்டலம் வரதப்ப வாத்தியாரின் தெருக்கூத்து, பொம்மலாட்டங்களும் தெருக்கூத்தும், பத்மா சுப்ரமண்யத்தின் மீனாட்சி கல்யாணம், மீனாட்சி கல்லூரியில் நாடகங்கள் இப்படிப் பல கட்டுரைகளை நீளமாக எழுதியுள்ளார். இவற்றில் சில 16 அல்லது 7 பக்கங்கள்கூட வந்துள்ளன. மேலும் முத்துசாமி சுந்தர ராமசாமி எழுதிய 'குரங்குகள்' என்ற சிறுகதை பற்றி எட்டுப் பக்க விரிவுரை போன்ற வேறு சில கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

வெ. சாமிநாதனின் 'ஓர் எதிர்ப்புக் குரல்' என்ற கட்டுரைத் தொகுப்புக்கு க. ரா. எழுதிய முன்னுரையை வைகை எட்டாவது வது இதழில் மறு பிரசுரம் செய்தது. 'வெங்கட்சாமிநாதனின் கருத்துலகம்' என்ற தலைப்பில் வண்ணதாசனின் 'தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்' என்ற கதைத் தொகுதிக்கு சு. ரா. எழுதிய முன்னுரையை 'வண்ணதாசன் கதைகள்' என்ற தலைப்புடன் வெளியிட்டது. நாஞ்சில் நாடனின் புதினமான 'தலைகீழ் விகிதங்கள்', காஸ்யபனின் 'அசடு' ஆகியவற்றுக்கு க. ரா. விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சுந்தர ராமசாமியின் 'பல்லக்குத் தூக்கிகள்' கதைத் தொகுதி பற்றி சி. மோகன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அகிலனின், சித்திரப் பாவை புதினத்துக்கு, ஞானபீட விருது வழங்கப்பட்டதை வைகை கண்டித்தது. கல்வித் துறையில் நிகழும் சீர்கேடுகளை வைகை சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்தது. குறிப்பாக, மதுரைப் பல்கலைக்கழகம் இதன் தாக்குதலுக்கு இலக்காக அமைந்தது. பாடநூலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பின் தன்மை குறித்தும், ஒப்பியல் இலக்கியம் சம்பந்தமான ஆய்வு பற்றிய ஒரு பேராசிரியரின் நூலையும் வன்மையாகக் கண்டித்து கட்டுரைகள் எழுதப்பட்டன.

ஞானி கட்டுரைகள் எழுதியுள்ளார். வெ. சாமிநாதனின் 'பாலையும் வாழையும்' கட்டுரைகளைத் தொடர்ந்து 'வாலையா? வாழையா? தொடர்ந்து தேடல்' என ஞானி கட்டுரையும், இந்திய மெய்யியல் பற்றி தேபி பிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய நூலுக்கு ஒரு விரிவான விமர்சனம் ( 12 பக்கங்கள் ) எழுதினார்ர். மேலும் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் மெய்யியலை விமர்சித்து 'மணல்மேட்டில் ஒரு அட்டை வீடு' என்ற நீண்ட கட்டுரையும் எழுதினார்.

வைகையின் 11வது இதழ் விமர்சன இதழாக அமைந்திருந்தது. 'சுந்தர ராமசாமியின் குரங்குகள்' என்ற ந. முத்துசாமி கட்டுரை; 'சோவியத் நாட்டில் ஒரு தமிழ் மாணவி' (வி. எஸ். கமலா எழுதிய புத்தகம் பற்றி) விமர்சனம், 'கண்டதும் கேட்டதும்'- ஒரு சுய விமரிசனம். ஜி. நாகராஜன் அவருடைய கதைத் தொகுப்பு பற்றி அவரே எழுதியது). போன்றவை அதில் வெளியாயின.

வைகை அதன் இறுதிக் கட்டத்தில் மணிக்கொடி இதழ் மீது தனது கவனத்தைத் திருப்பியது. கு. ப. ரா. சிறப்பிதழ் வெளியிடுவதில் அக்கறை கொண்டது. மணிக்கொடியில் வந்த 'யாத்ரா மார்க்கம்' பகுதியில் வெளியான குறிப்புகளையும் சூடான விவாதங்களையும் வைகை 27, 28 வது இதழ்களில் மறுபிரசுரம் செய்தது. 'மணிக்கொடி' யில் வெளியான சில புத்தக மதிப்புரைகளையும் வைகை வெளியிட்டது.

வைகையின் 27-ம் இதழில் அது கதை, கவிதைகள் போன்ற படைப்புகளை வெளியிட மறுத்து வந்த போக்கைக் கைவிட விரும்பியாத தன் கொள்கை மாற்றத்தை வெளியிட்டது. ஆனால் 1981இல் வெளிவந்த 28ஆம் இதழுக்குப் பிறகு வைகை வரவில்லை.[2]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வைகை_(இதழ்)&oldid=17693" இருந்து மீள்விக்கப்பட்டது