பிரக்ஞை (சிற்றிதழ்)
பிரக்ஞை என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து 1970 ஆம் ஆண்டுகளில் வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும்.
வரலாறு
பிரக்ஞை மாத ஏடாக, 1974 அக்டோபரில் வெளிவரத் துவங்கியது. இதன் ஆசிரியர் ஆர். இரவீந்திரன் ஆவார்.[1] பிரக்ஞையின் முதல் இதழின் அட்டையில் கிருஷ்ணமூர்த்தியின் 'லினோகட்' ஓவியம். பாலகுமாரன் எழுதிய 'விளிம்பு', ராமச்சந்திர வைத்தியநாத்தின் பயணம் என்ற கதைகள். லா. ச. ரா.வுடன் பேட்டி, ஐராவதம் முத்து சாமியின் மூன்று நாடகங்கள், தி. நா. ஜெயராமன், 'கர்ம் ஹவா' என்ற இந்திப் படம் பற்றிக் கட்டுரைகள். சில கவிதைகள். ஓவியக் கண்காட்சி, மாணவர் திரைப்படங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தன. இதழின் அளவும் அமைப்பும் விஷயங்களும், அப்போது வெளிவந்து கொண்டிருந்த க ச ட த ப ற வை நினைவுபடுத்துவதாக இருந்தன.[2]
‘பிரக்ஞை' இலக்கியம் தவிர்த்த ஏனைய விஷயங்களில் அதிக அக்கறை கொண்டது. சமூக, கலை, பொருளாதாரச் சிந்தனைக் கட்டுரைகளை ( மொழிபெயர்ப்புகளை ) வெளியிடுதில் ஆர்வம் காட்டியது. ‘சீனச் சிறப்பிதழ்' ஒன்றைத் வெளியிட்டது.
பல வழிகளில் பிரக்ஞைக்கு வலுவூட்டிய இதன் ஆசிரியர் ஆர். ரவீந்திரன் சென்னையை விட்டுச் செல்ல நேரிட்டதனால், ‘பிரக்ஞை' யிலிருந்து விலகிக் கொண்டார். பின்னர் ஜி. ரவீந்திரன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.[2]
படைப்புகள்
பிரக்ஞை 'அறிவார்ந்த தன்மையோடு' கலை, ஓவியம், திரைப்படம் பற்றிய கட்டுரைகளையும் கருத்துக்களையும் வெளியிட்டது. திரைப்பட விமர்சனங்கள், அரசியல் சமூகப் பார்வையோடு அழுத்தமாகவும் விரிவாகவும் எழுதப்பட்டன. சத்யஜித்ரே, பதல் சர்க்கார், சியாம் பெனகல், மிருணாள் சென் முதலியோரின் படங்கள் பற்றிய கட்டுரைகள் வெளியாயின. ஓவியக் கலைஞர்கள், அவர்களுடைய படைப்புகள் சம்பந்தமான கட்டுரைகளையும் பிரக்ஞை வெளியிட்டது.
புதுரகக் கதைகள், புதுக் கவிதைகள், கவிதைத் தொகுப்புகள் பற்றிய காரசாரமான விமர்சனங்கள் பிரக்ஞையில் அடிக்கடி வெளியாயின. சில புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய விரிவான மதிப்புரைகளும் வந்தன. நான்காவது இதழில் ஞானக்கூத்தன் கலந்துரையாடல்' 12 பக்கங்கள்-கவிதை பற்றிய அவருடைய கருத்துக்களை விளக்கியது.
ஏழாவது இதழ் கவிதைச் சிறப்பிதழ் ஆக வெளிவந்தது. ஞானக் கூத்தன், ஹரி. ஸ்ரீனிவாசன், மாலன், பிரபஞ்சகவி, பகவய்யா, நா. விச்வநாதன், தேவதேவன், ஆத்மாநாம், தஞ்சாவூர் கவிராயர், மணிகண்டன் கவிதைகள் எழுதியுள்ளனர். மூன்று மலையாளக் கவிதைகளை நகுலன் தமிழாக்கினார். மற்றும் செக் மொழிக் கவிதை, டி. எஸ். எலியட் கவிதைகளும் தமிழில் தரப்பட்டன. 'மார்க்ஸியமும் பஜனைக் கவிஞர்களும்' என்ற தலைப்பில் முற்போக்குக் கவிஞர்களின் தன்மைகள் குறித்து விரிவான கட்டுரை ஒன்றும் பிரசுரமாயிற்று.
'மார்க்லிசமும் இலக்கிய விமர்சகனும்’- ஜியார்ஜ் ஸ்டைனர் எழுதியது. மொழிபெயர்க்கப்பட்டு தொடர் கட்டுரையாக வெளிவந்துள்ளது. ஆல்பர்ட் கேமு நாடகம் 'நியாயவாதிகள்' தொடர் அம்சமாக வந்தது.
13 வது இதழில் கடந்த ஓராண்டில் பிரக்ஞை சாதித்தது என்ன என்பது குறித்து விளக்கம் இடம்பெற்றது. மேலும் சார்வாகன் எழுதிய 'மக்கள் இலக்கியமும் மனோதர்மமும்' என்ற நல்ல கட்டுரை ஒன்று வெளியானது. நீண்ட சர்ச்சைக்கு வித்திட்ட கட்டுரை ஒன்றை வேற்றுமை என்ற தலைப்பில் ந. முத்துசாமி எழுதினார்.
21-22 வது இதழில் 'கே. சி. எஸ். பணிக்கர் ஒரு பார்வை’ என்ற கட்டுரையில் ஜெயராமன் அந்த ஓவியரைப் பற்றி விரிவாக எழுதினார். பணிக்கரின் ஓவியங்களும் அச்சாகியிருந்தன.
நிறுத்தம்
1976 பிற்பகுதியிலிருந்து 'பிரக்ஞை' மாதம்தோறும் வெளிவர முடியாத நிலைமை ஏற்பட்டது. 21-22, 23-24 என்று இரண்டு இதழ்களை ஒன்றாகச் சேர்த்து வெளியிட்டது. 1976 நவம்பர், திசம்பர், 1977 சனவரி எனத் தேதியிடப் பெற்ற இதழுக்குப் பிறகு, பிரக்ஞை 1977 சூலை மாதம் 29-34 என்று ஒரே இதழாக வெளி வந்தது.
44-45 (மே, சூன், சூலை-78 ), 47-49 ( ஆகத்து, செப். அக். 78) என்று இரண்டு இதழ்கள் வந்தன. இவற்றுடன் 'பிரக்ஞை’ யின் இயக்கம் ஒடுங்கிவிட்டது. அதன் பின்னர் இதழ் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.[2]
குறிப்புகள்
- ↑ ம.நவீன் (2015-04-30). "‘எழுத்து’ இதழும் சிற்றிதழ் அரசியலும்" (in en-US). https://vallinam.com.my/version2/?p=2109.
- ↑ 2.0 2.1 2.2 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல் (மணிவாசகர் பதிப்பகம்): pp. 99-108. https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88. பார்த்த நாள்: 13 நவம்பர் 2021.