யாக்கை (திரைப்படம்)

யாக்கை (yaakkai) என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் காதல் மற்றும் குற்ற திரில்லர் திரைப்படம் ஆகும். இதில் கதாநாயகனாக கிருஷ்ணாவும், கதாநாயகியாக சுவாதி ரெட்டியும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், ராதா ரவி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு 3 அன்று வெளியிடப்பட்டது.[1]

யாக்கை
இயக்கம்குழந்தை வேலப்பன்
தயாரிப்புமுத்துகுமாரன்
கதைகுழந்தை வேலப்பன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுசத்யா பொன்மார்
படத்தொகுப்புவி. ஜே. சபு ஜோசப்
கலையகம்ப்ரீம் பிக்சர்ஸ்
வெளியீடு3 மார்ச்சு 2017 (2017-03-03)
ஓட்டம்2 மணித்தியாலமும் 7 நிமிடமும்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

வெளிநாட்டில் இருந்து வரும் ஶ்ரீராமிடம் (குரு சோமசுந்தரம்) அவரது தந்தையும் வைத்தியருமான கிருஷ்ணமூர்த்தியின் (ராதா ரவி) கொலை சம்பந்தமாக காவல் அதிகாரியான சகாயம் (பிரகாஷ்ராஜ்) விசாரணை நடத்துகின்றார். மற்றுமொரு காட்சியில் கல்லூரி மாணவரான கதிர் (கிருஷ்ணா) அதே கல்லூரியில் பயிலும் சேவை மனப்பான்மையுள்ள கவிதாவை (சுவாதி ரெட்டி) நேசிக்கிறார். தான் சொந்தமாக உழைத்த பணத்தில் தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளிக்க கவிதாவை சந்திக்க புறப்படுகிறார்.  அவர் கண் எதிரிலேயே கவிதாவின் மீது ஓர் ஆட்டோ மோதுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடக்கும் அவரை ஓர் ஆம்புலன்ஸ் ஏற்றி செல்கிறது. குற்றுயிராக கிடக்கும் கவிதாவை ஆம்புலன்ஸ் சாரதி சுத்தியலால் அடித்து கொலை செய்கிறார். கொலைகளுக்கான காரணமும், கதிரின் பழிவாங்களுமே திரைப்படத்தின் மீதிக்கதை...

நடிகர்கள்

கிருஷ்ணா - கதிர்

சுவாதி ரெட்டி - கவிதா

பிரகாஷ் ராஜ் - சகாயம்

ராதாரவி - கிருஷ்ணமூர்த்தி

குரு சோமசுந்தரம் - ஶ்ரீ ராம்

எம். எஸ். பாஸ்கர் - கதிரின் தந்தை

ஜி. மாரிமுத்து - கவிதாவின் தந்தை

மயில்சாமி

சிங்கம்புலி

ஹரி கிருஷ்ணன் - நூர்

தயாரிப்பு

2013 ஆம் ஆண்டில் குழந்தை வேலப்பன் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் இடயம் என்ற பெயரில் புதிய  திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாக அறிவித்தனர். அவர்கள் இதயம் என்ற பெயரில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து தலைப்பு உரிமையை வாங்கியிருந்தனர்.[2] பிரகாஷ் ராஜ் காவல் அதிகாரியாகவும், சுவாதி ரெட்டி கதாநாயகியாகவும் ஆறு நாட்கள் படப்பிடிப்புகள் நடந்த பின் 2014 ஆம் ஆண்டு நவம்பரில் திரைப்படத்தின் தலைப்பை யாக்கை என்று மாற்றுவதாக தெரிவித்தனர்.[3] கிருஷ்ணா மற்றும் சுவாதி ரெட்டி இணைந்து நடித்த மற்றுமொரு திரைப்படமான யட்சன் (2015)   நிறைவடையும் வரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு மேலும் முன்னேறியது. திரைப்படத்தின் எதிர்மறையான கதாபாத்திரத்திற்காக குரு சோம சுந்தரம் இணைந்தார்.[4] படப்பிடிப்புகள் பிரதானமாக சென்னை முழுவதும் கல்லூரி வளாகங்களில் நடைபெற்றன. அதே சமயம் கோவை, ஊட்டி மற்றும் கோத்தகிரி ஆகிய இடங்களிலும் காட்சிகள் படமாக்கப்பட்டன.[5] 2016 ஆம் ஆண்டின் சூலையில் தயாரிப்பின் இறுதி கட்ட வேலைகள் நடந்தன. கிருஷ்ணா ஒரே நாளில் அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் செய்தார்.[6]

ஒலிப்பதிவு

யாக்கை திரைப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் படத்தினை விளம்பரப் படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்டன. யுவன் சங்கர் ராஜா பாடிய "நீ" என்ற பாடல் 2016 ஆம் ஆண்டில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் தனுஷ் பாடிய "சொல்லித் தொலையேன் மா" என்ற மற்றொரு பாடல் 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.[7]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யாக்கை_(திரைப்படம்)&oldid=36889" இருந்து மீள்விக்கப்பட்டது