இதயம் (திரைப்படம்)
இதயம் | |
---|---|
இயக்கம் | கதிர் |
தயாரிப்பு | டி. ஜி. தியாகராஜன் ஜி. சரவணன் |
கதை | கதிர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ஹீரா ராசகோபால் சின்னி ஜெயந்த் மனோரமா |
ஒளிப்பதிவு | அப்துல் இரெகுமான் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | சத்திய ஜோதி பில்ம்ஸ் |
விநியோகம் | சத்திய ஜோதி பில்ம்ஸ் |
வெளியீடு | 6 செப்தம்பர் 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயம் 1991ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதுவே இயக்குனர் கதிர் இயக்கிய முதல் திரைப்படமாகும். முரளியும் ஹீராவும் நடித்த இக்காதல் திரைப்படம் 1990களின் ஒரு மிகச்சிறந்த வெற்றிப்படமாகவும், பின்னர் வந்த காதல்கருத் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தது.
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கிராமத்திலிருந்து சென்னை வந்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முரளி, தன்னுடன் படிக்கும் ஹீராவைக் காதலிக்கிறார். ஆனால் தனது தாழ்வு மனப்பான்மையாலும் கூச்ச இயல்பாலும் அதை அவரிடம் சொல்ல முடிவதில்லை. இப்பின்னணியில் அவர் ஹீராவிடம் காதலைச் சொல்ல முயலும் பல காட்சிகள் இப்படத்தில் குறிப்பிடத்தக்கன. பின்னர் ஹீரா வேறொருவரைக் காதலிக்கிறார் என்று தவறாக நினைக்கிறார், ஆனால் உண்மையில் ஹீரா தன் உடன்பிறந்தவரையும் அவரது காதலனையும் இணைக்கவே உதவி செய்கிறார்.
படிப்பை முடித்துச் செல்லும்வரை தன் காதலை அவர் சொல்வதில்லை. இறுதியாக ஹீரா இவரது காதலைப் புரிந்துகொள்ளவரும்போது முரளிக்கு இதயநோய் இருப்பதாக கண்டறியப்படுவதோடு அவரால் எந்தவொரு மகிழ்செய்தியையோ துயரச்செய்தியையோ தாங்கமுடியாது என்பதும் தெரியவருவதால் கதையில் திருப்பம் ஏற்படுகிறது.
இசை
இப்படத்தின் பின்னணி இசையையும் பாடல்களையும் இளையராஜா அமைத்துள்ளார். பாடல் வரிகளை வாலியும் பிறைசூடனும் எழுதியுள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரும் வெற்றிப்பாடல்கள் ஆகும்.
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடியவர்கள் |
---|---|---|---|
1 | ஏப்ரல் மேயிலே | வாலி | இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி, எசு. என். சுரேந்தர் |
2 | பொட்டு வைத்த ஒரு வட்டநிலா | வாலி | கே. ஜே. யேசுதாஸ் |
3 | ஓ பார்ட்டி நல்ல | வாலி | மலேசியா வாசுதேவன் |
4 | பூங்கொடிதான் பூத்ததம்மா | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
5 | இதயமே இதயமே | பிறைசூடன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேலும் இப்படம் அதன் கதையோடு ஒத்திசையும் அருமையான பின்னணி இசைக்காக பெயர்பெற்றது.
துணுக்குகள்
- இதுவே இயக்குனர் கதிரும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த ஒரே திரைப்படமாகும்.
- பிற்காலத்தில் மிகப்பெரிய திரைநடனக் கலைஞராகவும் இயக்குனராகவும் வந்த பிரபுதேவா இத்திரைப்படத்தில் "ஏப்ரல் மேயிலே" பாடலில் முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். (இதற்கு முன்பே அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் இவர் பின்னணியில் ஆடியிருந்தார்)
- அதே பாடலின் தொடக்கத்தில் பிரபுதேவாவின் அண்ணனும் மற்றொரு புகழ்பெற்ற நடன அமைப்பாளருமான ராஜூ சுந்தரமும் பின்னணியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.