மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள வைணவத் திருக்கோயில்.

படிமம்:Kanthirantha.jpg
மலையடிப்பட்டி பள்ளிகொண்டபெருமாள் கோயில்

அமைவிடம்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1] இக்கோயிலை திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை 67, துவாக்குடியிலிருந்து அசூர், செங்களூர் வழியாக கிள்ளுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் 16கிமீ தூரம் பயணம் செய்தும் அடையலாம்.

குகைக் கோயில்கள்

மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கும் மற்றொன்று திருமாலுக்கும் உரியது. [2] இவை இரட்டைக் கோயிலாகக் கருதப்படுகிறது.[3] சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் எனவும், திருமாலுக்குரிய கோயிலானது பள்ளிகொண்ட பெருமாள் கோயில் எனப்படுகிறது. மேலும் திருமால் கோயில் கண்திறந்த பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

இறைவன், இறைவி

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள், தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி.

சிறப்பு

சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் விஷ்ணு குகை உள்ளது. இக்கோயில் ஓர் குடவரைக்கோயிலாகும்.[2] மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பதுபோல செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகள் மூலமாக கி.பி.7-8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.[1] சற்றொப்ப புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் இருப்பதைப் போலவே இங்குள்ள பெருமாளும் காணப்படுகிறார்.[3]

பூசை நேரம்

தினமும் நான்கு வேளைகளில் பூசைகள் நடைபெறுகிறது. கால நடை திறப்பு பூசை 7 மணிக்கும், உச்சிக்கால பூசை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை மாலை 6 மணிக்கும், அர்த்தசாம பூசை இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். கோயிலானது தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.[1]


மாடம்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003
  2. 2.0 2.1 Dr.J.Raja Mohamad, Art of Pudukottai (Art and Architecture), Historical Arcives Committee,Pudukottai, 2003
  3. 3.0 3.1 Ranganathar Temple, Dinamalar Temples

வெளி இணைப்புகள்