போத்துக்கீசத் தமிழியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போத்துக்கீச தமிழியல் (Portuguese Tamil Studies) என்பது போத்துக்கீச மொழி, போர்த்துகல், போத்துக்கீச மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
போர்த்துக்கல் காலனித்துவமும் தமிழும்
"ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கே ஹென்றீக்கசு (Henrique Henriques, 1520-1600) போர்த்துக்கல் நாட்டில் யூத இனம் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். தம் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறித்தவ சமயத்தைப் பரப்ப 1546 இல் இந்தியா வந்திறங்கினார்.
இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த ஃபிரான்சிசு சேவியர் (1506-1552) என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். ஹென்றிக்கே ஹென்றீக்கசு தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.
தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் முறையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது:
கொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம
மேற்காட்டிய தலைப்பை இன்றைய முறைப்படி புள்ளி மற்றும் சொல்லிடைவெளி இட்டு எழுதினால் கீழ்வருமாறு அது தோற்றமளிக்கும்:
கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம்
16 பக்கங்களை உள்ளடக்கி 1578இல் பதிக்கப்பட்ட இந்த அரிய நூல் ஹார்வட் பல்கலைக்கழக நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது.
தம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல். [1]
போத்துக்கேய மொழியிலிருந்து பெற்றவை
பேச்சுத் தமிழ் | பொருள் | போத்துக்கீச மூலம் |
---|---|---|
அலுமாரி | நிலைப்பெட்டகம் | armário |
அன்னாசி | ஒருவகைப் பழம் | ananás |
ஆசுப்பத்திரி | மருத்துவமனை | hospital |
கடுதாசி | கடிதம் | carta |
கதிரை | நாற்காலி | cadeira |
குசினி | அடுக்களை | cozinha |
கோப்பை | கிண்ணம் | copo |
சப்பாத்து | காலணி | sapato |
தாச்சி | இரும்புச் சட்டி | tacho |
துவாய் | துவாலை | toalha |
தோம்பு | நில உரிமைப் பட்டியல் | tombo |
பாண் | ரொட்டி,வெதும்பி | pão |
பீங்கான் | செராமிக் தட்டு | palangana |
பீப்பா | மரத்தாழி | pipa |
பேனை | பேனா,தூவல் | pena |
வாங்கு | bench | banco |
விசுக்கோத்து | - | biscoito |
விறாந்தை | தாழ்வாரம்(Verandah) | varanda |