புறப்பொருள் வெண்பா மாலை

புறப்பொருள் வெண்பாமாலை (ஆங்கிலம்: Purapporul Venbamaalai) என்பது தமிழ் இலக்கணம் கூறும் அகப்பொருள், புறப்பொருள் எனும் இரு பொருளிலக்கண வகைகளுள் புறப்பொருள் இலக்கணம் கூற எழுந்த நூலாகும். இதன் காலம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு ஆகும்.

உரைதருநூல்

இஃது ஓர் உரைதருநூல். இதில் இலக்கணம் கூறும் நூற்பா 'கொளு' என்னும் தலைப்பில் அளவு ஒத்த இரண்டடிப் பாடலாக உள்ளது. இந்த இலக்கணத்துக்கு மேற்கோளாக ஆசிரியரே இயற்றிய வெண்பா, அல்லது ஆசிரியப்பா தரப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்துக்குப் பின்

தொல்காப்பியத்துக்குப் பின் புறப்பொருள் இலக்கணம் பற்றி எழுதப்பட்ட ஒரே நூல் இஃதெனக் கூறப்படுகிறது.

வெண்பாமாலை

புறத்திணை பன்னிரண்டும் புறம், புறப்புறம், அகப்புறம் என மூன்று வகையாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 342 கொளுக்கள் 341 துறைகள் (19+13+20+21+8+28+23+32+47+37+18+36+ஒழிபு 18) காணப்படுகின்றன. அத்துறைகளை விளக்க நூலாசிரியர் 361 எடுத்துக்காட்டு பாடல்களைக் கையாண்டுள்ளார். அவற்றில் கைக்கிளைத் திணை நீங்கலாக ஏனைய திணைகள் அனைத்திலும் காணப்படும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்திருக்கின்றன. பாடல்களில் பெரும்பான்மை வெண்பாக்கள். எனவே இதனை வெண்பாமாலை என்று அழைக்கலாயினர்.

பிற்கால உரையாசிரியர்கள் மேற்கோள்

புறப்பொருள் விளக்கும் நூல்கள் அரிதாக இருந்ததினாலோ என்னவோ, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர், மற்றும் நச்சினார்க்கினியர் போன்ற பிற்காலத்து உரையாசிரியர்கள் புறப்பொருள் வெண்பாமாலையில் இருந்து பெருமளவு பாடல்களை மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர்.

பயில்வோர்

நன்னூல் எழுத்து, சொல் இலக்கணங்களைக் கூறுகிறது. இதனைப் பயின்றபின் தொல்காப்பியத்திலுள்ள எழுத்தும் சொல்லும் பயிலப்படுகிறது. அதுபோலத் தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரத்தைப் பயில்வதற்கு முன் அகத்திணை இலக்கணத்துக்கு நம்பியகப்பொருள் நூலையும், புறத்திணை இலக்கணத்துக்கு இந்தப் புறப்பொருள் வெண்பாமாலை நூலையும் பயிலச் செய்யும் பழக்கம் இருந்துவருகிறது.

அகம், புறம்

மக்களின் வாழ்வியலைத் தமிழ்நூல்கள் அகம், புறம் என இரண்டு நிலைகளில் பகுத்துப் பார்த்தன. அகம் என்பது திருமணத்துக்கு முந்தைய களவுநிலையிலும், திருமணத்துக்குப் பிந்திய கற்புநிலையிலும் நிகழும் ஆண்-பெண் உறவு பற்றியது. இது நெஞ்சகத்தில் வைத்து மறைக்கப்படும் வாழ்க்கை. புறம் என்பது புறத்தார்க்குப் புலனாகும் வாழ்க்கை.

பாகுபாடு

தொல்காப்பியர்,

  1. அகத்திணை - 7
  2. புறத்திணை - 7

எனப் பாகுபடுத்திக் காட்டினார். அந்தப் புறப்பொருளைப் புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளாகப் பகுத்துள்ளது. அந்த 12 திணைகளையும் அந்நூலின் ஆசிரியர் ஐயனாரிதனார் 3 பிரிவுகளாகப் பாகுபடுத்தி உள்ளார். அவை,

  1. புறம் - 7 (வெட்சி முதல் தும்பை ஈறாக)
  2. புறப்புறம் - 3 (வாகை, பாடாண், பொதுவியல்)
  3. அகப்புறம் - 2 (கைக்கிளை, பெருந்திணை)

என்பனவாகும்.

ஆசிரியர்

புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் ஐயனாரிதனார். இவரை ‘வானவர் மருமான் ஐயனாரிதனார்’ என்று இந்நூலின் பாயிரம் குறிப்பிடுகிறது. (மருமான் = மருமகன்) சேரநாட்டு ஐயப்பன் கோயில் ஐயனார் சங்ககாலத்தில் அயிரை எனப் போற்றப்பட்டதை இங்கு நினைவுபடுத்திக் கொண்டால் புலவர் பெயருக்கு விளக்கம் புரியும். செங்குட்டுவன் தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் பாடியதை எண்ணும்போது சேரர்-குடியின் தமிழ்த்தொண்டு புலனாகும்.

முந்துநூல்

அகத்தியரின் மாணாக்கர் 12-பேர், 12-திணைகளுக்குரிய இலக்கணம் பாடித் தொகுத்ததாகச் சொல்லப்படும் நூல் பன்னிருபடலம், இந்தப் புறப்பொருள் வெண்பாமாலைக்கு முதல்நூல் என்றும் கருதப்படுகிறது.

இந்நூலின் பகுப்புகள்

  • திணைகளில் கூறப்பட்டுள்ள துறைகளின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன. (தி - திணை).
  1. வெட்சி, (தி. 1 + துறை 19 = 20)
  2. கரந்தை, (தி. 1 + துறை 13 = 14)
  3. வஞ்சி, (தி. 1 + துறை 20 = 21 )
  4. காஞ்சி, (தி. 1 + துறை 21 = 22 )
  5. நொச்சி, (தி. 1 + துறை 8 = 9 )
  6. உழிஞை, ((தி. 1 + துறை 28 = 29 )
  7. தும்பை, ((தி. 1 + துறை 23 = 24)
  8. வாகை,(தி. 1 + துறை 32 = 33)
  9. பாடாண், ((தி. 1 + துறை 47 = 48)
  10. பொதுவியல், (துறைகள் - 37)
  11. கைக்கிளை,(ஆண்பால் கைக்கிளைத் துறை 9 + பெண்பாற் கைக்கிளைத் துறை 10 = 19)
  12. பெருந்திணை (பெண்பால் கூற்று 19 + இருபால் கூற்று 17 = 36)

ஆகிய திணைகளின் அடிப்படையில் 12 படலங்களாகப் பகுத்து அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையும் பல துறைகளாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் துறைகளைத் தொகுத்துக் காட்டும் பாடல் ஒன்று ஒவ்வொரு திணைக்கும் உள்ளது. இதனைச் சூத்திரம் என்கின்றனர். இப்படி 19 சூத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு துறையும் ஈரடி நூற்பா ஒன்றால் விளக்கப்படுகிறது. இதனை இதன் உரையாசிரியர் கொளு என்று குறிப்பிடுகிறார். (செய்தியைக் கொண்டது கொளுதானே?) இந்நூலில் 342 கொளுக்கள் உள்ளன. மேலும் ஒழிபு என்னும் தலைப்பின்கீழ் 19 வென்றி-துறைகள் உள்ளன. இந்நூலில் கைக்கிளைத் திணை பாடல்கள் மட்டும் மருட்பாவின் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜயங்கொண்ட சோழமண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயனார் எழுதியதாகச் சொல்லப்படும் உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது. கிழார் என்பதால் இவர் உழவர் எனத் தெரிகிறது.

ஒவ்வொரு கொளுவுக்கும் விளக்கம், அந்தத் துறையை விளக்கும் வெண்பா அல்லது ஆசிரியப்பா ஒன்று, அதற்கு உரை என்னும் பாங்கில் அந்த உரை அமைந்துள்ளது.

நூலின் ஒழிபியலில் சேர்க்கப்பட்டுள்ள புதுமையான துறைகள்

  • மகளிர் விளையாட்டு
ஆடல்-வென்றி, பாடல்-வென்றி, யாழ்-வென்றி, பூவை-வென்றி, கிளி-வென்றி, சூது-வென்றி, பிடி-வென்றி,
  • காளையர் விளையாட்டு
மல்-வென்றி, ஏறுகொள்-வென்றி (சல்லிக்கட்டு) குதிரை-வென்றி, தேர்-வென்றி,
  • வேடிக்கை விளையாட்டு
கோழி-வென்றி (கோழிப்போர்), சிவல்-வென்றி (கவுதாரிப்போர்), பூழ்-வென்றி, (காடைப்போர்), தகர்-வென்றி (ஆட்டுக்கடாச் சண்டை), யானை-வென்றி (‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால்’ – திருக்குறள்),
  • வணிகன் பெருமை
வணிக-வென்றி,
  • உழவன் பெருமை
உழவன்-வென்றி
  • புலவன் பெருமை
கொடுப்போர் ஏத்திக் கொடார் பழித்தல்.

நூல்

நூலில் சொல்லப்படும் இலக்கணமும், மேற்கோள் பாடலும் எவ்வாறு உள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டுகள்

1

கைக்கிளைப் படலம், பெண்பாற் கூற்று, நெஞ்சொடு மெலிதல், பாடல் எண் 304

அருஞ்சொல் வஞ்சி அல்லிருட் செலீஇய
நெஞ்சொடு புகன்ற நிலையுரைத் தன்று.

(இது கொளு என்னும் இலக்கண நூற்பா) இதற்குச் சாமுண்டி தேவர் தரும் உரை - "அழகிய சொல்லினையுடைய வஞ்சிக்கொம்பை ஒப்பானவள் இரவுப்பொழுது இருளின்கண் செல்வான் வேண்டி மனத்தோடு விரும்பிய நிலையைச் சொல்லியது."

மல்லாடு தோளான் அளியவாய் மாலிருட்கண்
செல்லாம் ஒழிக செலவென்பாய் நில்லாய்
புனையிழை இழந்த பூசல்
வினையினும் நினைதிழோ வாழியென் நெஞ்சே.

(இது ஆசிரியப்பாவால் ஆசிரியரே இயற்றித் தந்த மேற்கோள் பாடல்) இதற்குச் சாமுண்டி தேவர் தரும் உரை - மல்லின் செய்தி உலாவும் புயத்தினை யுடையான் தன் அளியை ஆசைப்பட்டு மயக்கமுடைய இருளிடத்துச் செல்லக்கடவேம் இல்லேம்; நீ தவிர்வாயாக போக்கை என்று சொல்லுவாய், நீ நில்லாய், அணிந்த ஆபரணம் சோர்ந்த ஆரவாரத்தை உள்ளுவையோ, உள்ளாயோ, வாழ்வாயாக எனது நெஞ்சே!

2

வெட்சிப்படலம், விரிச்சி பாடல் எண் 4

வேண்டிய பொருளின் விளைவுநன்கு அறிதற்கு
ஈண்டுஇருள் மாலை சொல்ஓர்த் தன்று

இது இலக்கணம் கூறும் கொளு.

எழுவணி சீறூர் இருள்மாலை முன்றில்
குழுவினம் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடங்கள் கொண்டுவா என்றான் குணிவில்
தடங்கையாய் வென்றி தரும்

இது நூலாசிரியரே பாடிச் சேர்த்த மேற்கோள் வெண்பா.

கருவிநூல்

சேரர் பரம்பரையினராகிய ஐயனாரிதனார் அருளிச்செய்த புறப்பொருள் வெண்பாமாலை மூலமும், சாமுண்டி தேவநாயனார் இயற்றிய உரையும், ஐந்தாம் பதிப்பு - 1942.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=புறப்பொருள்_வெண்பா_மாலை&oldid=13344" இருந்து மீள்விக்கப்பட்டது