புதுக்கோட்டையிலிருந்து சரவணன்

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (Pudhukottaiyilirundhu Saravanan) 2004 இல் தனுஷ் மற்றும் அபர்ணா பிள்ளை நடிப்பில் எஸ். எஸ். ஸ்டான்லி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம். 16 சனவரி 2004 பொங்கலன்று வெளியாகி [1] வணிகரீதியில் சராசரி வெற்றிப்படமாக அமைந்தது.

புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
இயக்கம்எஸ். எஸ். ஸ்டான்லி
தயாரிப்புஎஸ். கே. கிருஷ்ணகாந்த்
கதைஎஸ். எஸ். ஸ்டான்லி
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புதனுஷ்
அபர்ணா பிள்ளை
கருணாஸ்
ஒளிப்பதிவுஜி. ரமேஷ்
படத்தொகுப்புஜி. ஆர். அனில் மல்நாட்
கலையகம்இந்தியன் தியேட்டர் புரொடக்சன்ஸ்
வெளியீடுசனவரி 16, 2004 (2004-01-16)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் சரவணன் (தனுஷ்) தன் குடும்ப சூழ்நிலை காரணமாக சிங்கப்பூரில் வேலைக்குச் செல்கிறான். அங்கு நல்ல சம்பளம் கிடைப்பதால் தன் குடும்பத்தின் பணப்பிரச்சினைகள் தீரும் என்று எண்ணுகிறான். அங்கு அவன் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சீனாவைச் சேர்ந்த ஒருவனுடன் (பீட்டர் ஹீன்) ஏற்படும் சண்டையால் சரவணனின் கடவுச்சீட்டை அவன் எரிக்கிறான். சண்டையின் முடிவில் எதிர்பாராவிதமாக அவன் (பீட்டர் ஹீன்) இறக்க கொலைப்பழி சரவணன் மீது விழுகிறது.

ஷாலினி (அபர்ணா பிள்ளை) சிங்கப்பூரில் உள்ள அவள் மாமா வீட்டில் வசதியாக வாழ்ந்து வருபவள். அவளுடைய மாமா சூதாட்டத்தில் ஷாலினியைப் பணயமாக வைத்து விளையாடித் தோற்கிறார். அவருடைய எதிரிகளிடமிருந்து ஷாலினியைக் காப்பாற்ற, இந்தியாவில் இருக்கும் அவள் பெற்றோரிடம் அனுப்ப முடிவுசெய்கிறார். அவளை பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் பொறுப்பை சரவணனிடம் கொடுக்கிறார். அதற்கு 3 இலட்சம் பணம் தருவதாகச் சொல்வதாலும், கொலைப்பழியின் காரணமாகக் காவல் துறையிடமிருந்து தப்பிக்கவும் சரவணன் ஒத்துக்கொள்கிறான்.

விமலின் (கருணாஸ)) உதவியால் போலிக் கடவுச்சீட்டுப் பெற்று மலேசியா, தாய்லாந்து மற்றும் பர்மா வழியாக இந்தியா செல்வதே அவர்கள் திட்டம். இந்தப் பயணத்தில் ஷாலினி சரவணன் மீது காதல்வயப்படுகிறாள். சரவணன் ஷாலினியைக் காதலித்தாலும் அதை அவளிடம் மறைக்கிறான். அவள் பெற்றோரிடம் அவளை பாதுகாப்பாக சேர்த்துவிட்டு தன் பணத்தைப் பெற்றுக்கொள்கிறான். தன்னை நேசித்தால் இரண்டு மாதங்களுக்குள் திரும்பிவருமாறு சொல்கிறாள். இறுதியில் சரவணன் தன் காதலைத் தெரிவிக்க இருவரும் இணைகிறார்கள்.

நடிகர்கள்

தயாரிப்பு

"முதல் படம் பார்த்ததுமே தனுஷ் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை புரிந்து கொண்டேன். இரண்டு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தேன். அந்த அளவிற்கு தனுஷ்மீது நம்பிக்கை வந்தது எனக்கு'' என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கிருஷ்ணகாந்த். `திருடா திருடி'யைத் தொடர்ந்து, அடுத்த படமான `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தைத் துவங்கினார்.[2]

இசை

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 4 திசம்பர் 2003 இல் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாடல்களை யுவன் சங்கர் ராஜா பாடினார். தன் முதல் பாடலாக "நாட்டு சரக்கு" பாடலைப் பாடி தனுஷ் பாடகராக அறிமுகமானார்.[3] பாடலாசிரியர்கள் பா. விஜய், தாமரை, சினேகன் மற்றும் நா. முத்துக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதினர்.[4]

பாடல் வரிசை

வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 மலர்களே தாமரை பாம்பே ஜெயஸ்ரீ 04:56
2 பேபி பேபி பா. விஜய் கார்லா, யுவன் சங்கர் ராஜா 05:56
3 வேர் டூ வி கோ பா. விஜய் யுவன் சங்கர் ராஜா 03:14
4 நாட்டு சரக்கு பா. விஜய் தனுஷ், ரஞ்சித், லாவண்யா 04:37
5 புது காதல் சினேகன் ரஞ்சித், சின்மயி 05:08
6 புதுக்கோட்டை சரவணன் நா. முத்துக்குமார் குணால் கஞ்சவாலா, ஹேமா சர்தேசாய், நிதிஷ் கோபால், யுகேந்திரன் 04:25

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்