பாண்டி (திரைப்படம்)
பாண்டி 2008 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் மற்றும் சினேகா நடிப்பில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் இந்தியில் ஏக் டுலாரா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.
பாண்டி | |
---|---|
இயக்கம் | ராசு மதுரவன் |
தயாரிப்பு | ஹிதேஷ் ஜபக் |
கதை | ராசு மதுரவன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் சினேகா நமிதா நாசர் சரண்யா பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | யு. கே. செந்தில்குமார் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | நேமிசந்த் ஜபக் |
வெளியீடு | மே 23, 2008 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
சுந்தரபாண்டி (நாசர்)- சிவகாமி (சரண்யா பொன்வண்ணன்) தம்பதியரின் இரு மகன்கள் ராஜபாண்டி (ஸ்ரீமன்) மற்றும் பாண்டி (ராகவா லாரன்ஸ்). இவர்களுக்கு இரு சகோதரிகள். ராஜபாண்டி நல்லவனாக நடித்து தந்தையிடம் நற்பெயர் பெறுகிறான். பாண்டி பொறுப்பற்றவனாக இருப்பதால் தந்தை அவனை வெறுத்தாலும், தாயின் செல்லப்பிள்ளையாகவே இருக்கிறான். காவலர் பெரியமாயனின் (இளவரசு) மகள் புவனா (சினேகா) பாண்டியைக் காதலிக்கிறாள். சுந்தரபாண்டி தன் மகளின் திருமணத்திற்காக வீட்டில் வைத்திருந்த பணம் திருடுபோகிறது. பாண்டிதான் அப்பணத்தைத் திருடியிருப்பான் என்றெண்ணும் சுந்தரபாண்டி அவனை அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார். ஆனால் யாரும் எதிர்பாராவகையில் ராஜபாண்டி தன் காதலியுடன் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுச் சென்றதை அறிந்ததும் அதிர்ச்சியடைகிறார் சுந்தரபாண்டி.
தன் தங்கைகளின் திருமணத்தை தான் நடத்தி வைப்பதாக தன் தந்தையிடம் உறுதி கொடுக்கும் பாண்டியின் நல்ல குணத்தை சுந்தரபாண்டி புரிந்துகொள்கிறார். கடன்வாங்கித் தங்கைத் திருமணத்தை நடத்தி வைக்கிறான். பாண்டிக்கு புவனாவைப் பெண் கேட்டுச் செல்லும் சுந்தரபாண்டியிடம் தன் பெண்ணைத் தர மறுக்கிறார் பெரிய மாயன். இதனால் வீட்டைவிட்டு வெளியேறும் புவனா பாண்டியைத் திருமணம் செய்துகொள்கிறாள். கடனை அடைப்பதற்காக வெளிநாட்டு வேலைக்குச் செல்கிறான் பாண்டி.
வெளிநாட்டிலிருந்து திரும்பிவரும் பாண்டி தன் தாய் விபத்தில் இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைகிறான். அந்த விபத்து சுந்தரபாண்டியின் உடன்பணியாற்றியவரால் திட்டமிடப்பட்டது என்பதை அறிந்து தன் தாயின் மரணத்திற்குக் காரணமானவனை பாண்டி என்ன செய்கிறான் என்பதே முடிவு.
நடிகர்கள்
- ராகவா லாரன்ஸ் - பாண்டி
- சினேகா - புவனா
- நமிதா - சலங்கை
- நாசர் - சுந்தரபாண்டி
- சரண்யா பொன்வண்ணன் - சிவகாமி
- ஸ்ரீமன் - ராஜபாண்டி
- கஞ்சா கருப்பு - தலையாதி
- ராஜ்கபூர்
- இளவரசு - பெரியமாயன்
- மயில்சாமி - மொக்கைச்சாமி
- வையாபுரி - திருடன்
இசை
படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களை பேரரசு, நந்தலாலா, நா. முத்துக்குமார் மற்றும் பஞ்சு அருணாசலம். 1991 ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான "மாசி மாசம்" பாடல் இப்படத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
வ.எண் | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | ஊரை சுத்தும் | செந்தில்தாஸ் |
2 | பட்டயகிளப்பு | நவீன் மாதவ், அனுராதா ஸ்ரீராம் |
3 | ஆடிஅடங்கும் | செந்தில்தாஸ், கிரேஸ் கருணாஸ் |
4 | மாசிமாசம் (மறு ஆக்கம்) | சத்யன், மேகா |
5 | குத்து மதிப்பா | சுசித்ரா, பென்னி தயாள் |
6 | ஆத்தா நீ | தேவா |