நயினாதீவு

நயினாதீவு (Nainativu) யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் (சிங்கள மொழியில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது.[1][2] இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பௌத்த பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.

நயினாதீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


நயினாதீவு
நயினாதீவு is located in இலங்கை
நயினாதீவு
நயினாதீவு
ஆள்கூறுகள்: 9°37′9.66″N 79°46′18.99″E / 9.6193500°N 79.7719417°E / 9.6193500; 79.7719417

1976 இல் நயினாதீவில் மக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய மக்கள்தொகை உள்ளது.

அமைவிடம்

இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.

போக்குவரத்து

நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.

நயினாதீவு வரலாறு - வரலாற்றுக்கு முன்பிருந்து கிபி 1000 வரை

படிமம்:Nagapooshani Amman Temple.jpg
நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. இங்கே பௌத்த கோவில் ஒன்று இருந்ததாகவும், இந் நூலில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. குல. சபாநாதன் "இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன"[3] எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.

வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம்

நாகதீப, மணிபல்லவம் ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக நயினாதீவுடன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாகதீவு (நகதிவ) எனும் பெயர் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் விளங்குகின்றது. ஆகவே, "நாகதீப" அல்லது "நாகதீபம்" என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும்.

நம்பொத்த

நாகதிவயின என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக கி.பி. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நம்பொத்த என்ற சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது நயினார்தீவு அல்லது நாகநயினார்தீவு அல்லது நாகதீவு என்ற தமிழ்ப் பெயரின் சிங்கள வடிவமே என்பதற்கு நம்பொத்த குறிப்பிடும் ஏனைய தீவுகளுக்கான சிங்களப் பெயர்களே சான்றாகும். அவை வருமாறு:

  • தண்ணீர்த்தீவு (வேலணைத்தீவு)- தன்னிதிவயின
  • புங்குடுதீவு - புவங்குதிவயின
  • காரைதீவு - காறதிவயின
  • அனலைதீவு - அக்னிதிவயின

‘நம்பொத்த’ நூலாசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்களை சில இடங்களில் சிதைத்து சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய முயன்றுள்ளார். வேறு சில இடங்களில் அவர் தமிழ்ப் பெயரில் உள்ள சொல்லுக்குச் சமமான சிங்களச் சொல்லைப் பதிலிட்டு மொழிமாற்றம் செய்துள்ளார் என்பதை மேலே கண்டோம். ‘அனல்’ என்ற தமிழ்ச் சொல் ‘அக்னி’யைக் குறிப்பது என்பதை அறிந்து இருந்த ‘நம்பொத்த’ ஆசிரியர், ’நயினார்’, ‘நாகநயினார்’ என்பன நாகதேவனைக் குறிக்கும் பெயர்கள் என்பதையும் அறிந்து இருந்திருக்கலாம். ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில், நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர் நாகதீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு - இவற்றில் எதுவாகவும் இருந்திருக்கலாம் என்பதே ‘நம்பொத்த’ மூலம் நமக்குத் தெரியவருகின்றது.

"மணிபல்லவம்" என்ற பெயரும் "நாகதீபம்" என்ற பெயரைப் போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக வழங்கப்பட்டது என்பது நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் சி. இராசநாயகம் ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும். போல் பீரிஸ், பரணவிதான போன்ற சிங்கள தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளனர்.

நாகதீபமும் மணிபல்லவமும்

இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன,

  1. நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு முன்பே நாக நாடான இலங்கை நயினாதீவு கோநகராக்கி ஆழ்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர்.
  2. தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு மணமுடித்து அவளுக்கு சீதனமாக தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான்.
  3. நயினாதீவு நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான்.
  4. அப்போது மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தை பெரும் பெயரில் போர் தொடுக்கிறான்.
  5. இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கி போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர்.
  6. இதே கதையை மணிமேகலையும் கூறுகிறது. (மணிமேகலை- பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை 58-61)

இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே; யாழ்.குடாநாடுதான் நாகதீபம் என்றால், அதுவே மணிபல்லவமுமாகும்’ என்று மேற்கூறிய அறிஞர் பெருமக்கள் முடிவுகட்டியுள்ளதுபோன்று தோற்றுகின்றது. மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடும் ‘மணிபல்லவம்’ நயினாதீவாக இருக்கக்கூடும் என்ற கருத இடமுண்டு, ஆனால் ‘நாகதீபம்’ என்ற பெயர் பண்டைய நாட்களில் நாகர் அரசாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை அல்லது இராச்சியத்தைக் குறிக்க வழங்கப்பட்டதே அல்லாது, எமது ஊரைப் போன்ற ஒரு சிறிய ஊரைக் குறிக்க வழங்கப்படவில்லை. இது குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டையும் அயல் தீவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இன்றைய வடமாகாணம் முழுவதையும் மேற்குக் கரையில் கல்யாணி (களனி) ஆறு வரையான பகுதிகளையும்கூட ‘நாகதீபம்’ உள்ளடக்கியிருந்தது என்ற கருத்தும் உண்டு. ஆகவே, ‘நாகதீபம்’ என்பது ஒரு இராச்சியத்தின் பெயர் நயினாதீவைப் போன்ற ஒரு சிறிய தீவை அல்லது ஊரைக் குறித்த பெயரல்ல. ஆனால், மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே முப்பது ‘யோசனை’ தூரத்தில் அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறும் விவரங்கள் நயினாதீவுக்குப் பொருந்துவனவாக உள்ளன. ‘புத்தர் இங்கு வந்தார். போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது வேறு விடயம். அதுபற்றி சிங்கள வரலாற்றுத் துறை அறிஞர்களிடையேகூடக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ் நாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியிருந்தனர். இந்தத் தீவு ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அக்காலத்திலும் திகழ்ந்திருந்தது. ஆகவே, ‘மணிமேகலை’க் காப்பியம் எழுந்த சங்கமருவிய காலத்தில் - அதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் - நயினார்தீவு, ‘மணிபல்லவம்’ என்றும் அழைக்கப்பட்டது என்றும், இது நாக அரசர்களால் ஆட்சிசெய்யப்பட்ட நாகதீவு (நாகதீபம்) என்ற இராச்சியத்துக்கு உட்பட்டிருந்தது என்றும் கொள்வது தவறன்று. சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள்.

ஆபுத்திரனும் அமுதசுரபியும்

மாரிக் காலத்து நள்ளிருளில் யாம வேளையில் வழிப்போக்கர் சிலர் ஆபுத்திரனிடம் வயிறுகாய் பெரும்பசி வாட்டுகிறது என்றனர். பிச்சை வாங்கிய உணவை, முடியாதவர்களுக்குத் தந்தபின் எஞ்சிய உணவை உண்டுவந்த அவன், செய்வது அறியாமல் மனம் நொந்துகொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த கோயிலின் தெய்வம் சிந்தாதேவி அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவன் கையில் கொடுத்த்து. அதில் உள்ள உணவு அள்ள அள்ள வளர்ந்துகொண்டே இருக்கும். அதனை அவன் தேவியைத் தொழுது வாங்கிக்கொண்டான். வழிப்போக்கர்களின் பசியைப் போக்கினான். பின்னர் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி பசியைப் போக்கிக்கொண்டிருந்தான்.

வானவர் தலைவன் இந்திரன் கொடையாளி. ஆபுத்திரன் கொடையால் இந்திரனின் பாண்டுகம்பளம் (அரியணை) ஆட்டம் கண்டது. ஆபுத்திரனை ஒடுக்க எண்ணினான். அந்தணன் உருவில் ஆபுத்திரனிடம் வந்து வரம் தருவதாகச் சொன்னான். ஆபுத்திரன் தன்னிடம் உள்ள கடிஞை போதும் என்றான். வஞ்சக இந்திரன் அந்தக் கடிஞை பயன்ற்றுப் போகும்படி நாடும் மக்களும் 12 ஆண்டுகள் பசியின்றி வளத்துடன் வாழத் தானே வரம் தந்துவிட்டுச் சென்றான். ஆபுத்திரனிடம் உணவு பெறுபவர் யாரும் இல்லாததால் கடிஞை செயலற்றுப் போயிற்று.

ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்றான். அப்போது வங்கக்கப்பலிலிருந்து இறங்கிய சிலர் சாவகத் தீவு மக்கள் பசியால் வாடுவதாக்க் கூறினர். சாவகத் தீவுக்கு வங்கத்தில் சென்னறான். இடையில் புயல். பாய்மரப் பாய் கிழிந்துவிட்டது. நாய்கர் (மாலுமிகள்) மணிபல்லவத் தீவில் இறங்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர்.

ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச்சென்றுவிட்டான். கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான்.

இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள். பாம்பு-கருடன் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்து மாநாய்கன் வணிகர் ஒருவரால் நயினைக் கோயில் அமைக்கப்பட்டது காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாநாய்கன் என்னும் வணிகன் என்பது செவிவழிக் கதை. பாம்பு சுற்றிக் கல்லையும், கருடன் கல்லையும் கோவிலையும் இன்று அடியார்கள் தரிசிக்கின்றனர்.

வரலாற்றுத்துறை அறிஞர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.

நயினார்பட்டர்

இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர் இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்:

“நாகதீவு, நயினாதீவு எனப் பெயர் மாறியது நயினாபட்டர் என்னும் பிராமணர் ஒருவர் அங்கு குடியேறிக் கிலமாய்க் கிடந்த நாகதம்பிரான் கோயிலைப் புதுக்கியபின் என்ப. ஆயின், “நாகநயினார் தீவு” என வையாபாடலில் வருகின்றது. நாகதம்பிரான், நாகநயினார் எனவும் அழைக்கப்பட்டதேயோ?”

திரு.குல.சபாநாதன் அவர்களும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்குறித்த கருத்தை வழிமொழியும் வகையில் தனது நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்:

“நாகர் தாம் வழிபட்ட நாகத்தை, நாகநயினார், நாகதம்பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம் கோவில் கொண்டெழுந்தருளிய தலம் நாகநயினார்தீவு, நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.”

“நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில் இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறி நாகபூசணி அம்மன் கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக தகவல்களைக் காணலாம்.

இச்சிறுதீவு, நாகதீவு (சிங்களத்தில் ‘நாகதிவயின’), நயினாதீவு (அல்லது நயினார் தீவு) என்ற பெயர்களாலும், டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது (Haorlem) ‘ஹார்லெம்’ எனவும் அழைக்கப்பட்டதென்பது ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது. ‘ஹார்லெம்’ என்பது ஒல்லாந்தில் தலைநகர் ‘அம்ஸ்ரடாமு’க்கு அருகில் உள்ள சிறிய நகரின் பெயர். ஒல்லாந்தர் அமெரிக்காவில் குடியேறியபோது, தற்போதைய நியயோர்க் நகருக்கு அண்மையில் ஒரு குடியிருப்பை நிறுவி, அதற்கும் ‘ஹார்லெம்’ என்றே பெயரிட்டனர். நயினாதீவு தற்போது ‘ஹார்லெம்’ என்று அழைக்கப்படுவதில்லை.

நாகர்களது குடியிருப்பு

விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும் அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட, ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம், தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும், இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர். இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானியாகவிருந்தது.”

நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று, சரித்திர காலத்துக்கு முன்னர் - அதாவது விசயன் வரவுக்கு முன்னர் - நாகர்களது ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள் கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ்.குடாநாட்டில்) இருந்தோ அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில் குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது சந்தேகமறப் புலப்படுகின்றது. நயினார்தீவு, நாகதீவு, நாகதிவயின, நாகநயினார்தீவு, ஆகிய நயினாதீவுக்கு வழங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பெயர்களும் இவ்வுண்மையை மேலும் உறுதிசெய்கின்றன.

நயினாதீவு வரலாறு - பகுதி 2 : கிபி 1001 முதல் இன்று வரை

சோழர்கள், மற்றும் சேது நாட்டுமக்கள்

பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அவ்வேளை இங்கு வந்து திருப்பணி வேலைகளைச் செய்த சோழதேசத்துச் சிற்பிகளும் பிராமணக் குடிகளும் மற்றும் கோவில் பணிக்கு அவசியப்பட்ட ஊழியர்களும் தமது குடும்பங்களுடன் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டிருக்கலாம். இவ்வாறு தமிழகத்து மக்கள் வந்து தங்கும் முறை தொடர்ந்ததாலோ என்னவோ இவ்வாறு பிறநாட்டவர் வந்து தாம் இறங்கும் துறைமுகங்களுக்கு அண்மையில் வசிக்க விழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பிற நாட்டார் (பரதேசிகள்) “ஊராத்துறையில் வந்து இருக்க வேணுமென்றும்..” “புதுத் துறைகளில் வந்தாலித் துறையிலே சந்திக்க வேணுமென்றும்…” முதலாம் பராக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1153-1186) நயினாதீவில் நிறுவப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக நயினாதீவு இருந்தமையால் தமிழகத்தவர் அல்லாத பிறநாட்டவர் சிலரும் தனிப்பட்ட காரணங்களின் பொருட்டு இத்தீவில் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திருத்தலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.

சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர். வரலாற்றுக்கெட்டாத காலம் தொடக்கம் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தல் இடம்பெற்றது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிசுக்காரரும்கூட சங்கு குளித்தலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர். சங்குகுளித்தல் நயினாதீவுக் கடலில் மும்முரமாக இடம்பெற்றதால் அத்தொழில் செய்யும் மக்கள் ஈழத்தின் பிறபகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களில் இருந்தும் வந்து நயினாதீவில் குடியேறலாயினர். இவர்களில் இஸ்லாம் மதத்தவரான தமிழர்களும் அடங்குவர். இஸ்லாமியரின் வழிபாட்டுக்கென பள்ளிவாசல் ஒன்றும் தீவின் தென்கிழக்குக் கரையில் அமைக்கப்பட்டு இன்றும் வழிபாடு அங்கு நிகழ்கின்றது.

முதலில் நாகர்களும், பின்பு இங்குள்ள நயினார் கோவிலைச் சீரமைப்பதற்கும், வழிபாடுகளைக் குறைவற நடத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளின் முன்பு நயினாதீவுக்கு வெளியிலிருந்து குறிப்பாக சோழநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பிகள், பிராமணர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தவர், உறவினர், வேலையாட்களும், தொடர்ந்து வந்து சங்கு குளித்தலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களும் ஆகிய இவர்களுள் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என இத்தீவின் குடித்தொகை மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது.

போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம்

1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. “கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி நல்லூர்க் கந்தசாமி கோயிலை இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று.

இக்காலத்தில் (கி.பி. 1620–1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது. நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலம்

போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் எங்குமே பெயரளவுக்காகுதல் கத்தோலிக்க சமயம் பரவியது. இக்காலம் நயினாதீவில் எத்தகைய சமய மாற்றம் ஏற்பட்டது என்பது திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில ஊரவர்கள் சிலர் அச்சமயம் ஏற்பட்ட சமய நெருக்கடியைத் தவிர்க்க முடியாதவராக விரும்பியோ விரும்பாமலோ மதம் மாறியுள்ளனர். கி.பி. 1788 இல் நாகம்மாள் வழிபாட்டை சிறிய அளவில் மீள ஆரம்பித்து வைத்தவர் என நம்பப்படும் திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரின் மகன் திரு.கதிரித்தம்பி, கிறீஸ்தவராக மதம் மாறித் தனது பெயரையும் ‘பிரான்சீஸ்க்கு கதிரித்தம்பி’ என்று மாற்றிக்கொண்டார். இவரது விசுவாசத்தை மெச்சி, ஒல்லாந்த அரசினர் இவருக்கு ‘நொத்தாரிஸ்’ உத்தியோகமும், கிராம வரி அறவிடும் அதிகாரமும் கொடுத்தனர். இவர் நயினாதீவில் மேரி மாதா கோவில் ஒன்றையும் அமைத்தாரென்றும், அக்கோவிலுக்கு வேண்டிய மணியையும், உதவியாள் ஒருவரையும் ஒல்லாந்த அதிகாரிகள் வழங்கியதாகவும் ஐதீகம். இவர் நொத்தாரிசாக பணியாற்றியபோது, ‘பிரான்சீக்கு கதிரித்தம்பி’ என்று தனது ஒப்பத்தை இட்ட காணி உறுதிகள் யாழ்ப்பாணம் காணிக் கந்தோரில் உள்ளன என்று திரு.க.சண்முகநாதபிள்ளை தனது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் திரு.சண்முகநாதபிள்ளை "பிரான்சீஸ்கு என்பது அவருடைய பெயர் அல்ல, அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்” என்று கூறியிருப்பது விந்தையாகவுள்ளது. திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரையும் அவரது மகன் திரு.கதிரித்தம்பியையும் மேல் உயர்த்திக் காட்டும் ஆர்வக் கோளாறினால் அன்பர் திரு.சண்முகநாதபிள்ளை தனது நூலின் 41, 42, 43 ஆம் பக்கங்களில் குறித்துள்ள பின்வரும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டுமேயானால், திரு.இராமலிங்கர் இராமச்சந்திரர் 165 ஆண்டுகளுக்கு மேல் (குறைந்தபட்சமாக கி.பி.1624 தொடக்கம் கி.பி. 1788 வரை) உயிர் வாழ்ந்த ஒருவராயிருந்திருக்க வேண்டும்:

“கி.பி.1620க்கும் 1624க்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னர் கூறிய வீராசாமிச் செட்டியாரினால் கட்டப்பட்ட கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொருட்கள் சூறையாடப்பட்டன. கி.பி.1645ல் நயினாதீவிலுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்குத் தோம்பேடுகள் எழுதப்பட்டன. இக்காலத்தில் பட்டர் மரபில் தோன்றிய இராமலிங்கர் இராமச்சந்திரரே ஏக எஜமானாகப் பணியாற்றினார்.”

“போர்த்துக்கேயர் அழித்த கோயிலை இவருடைய (திரு.கதிரித்தம்பியுடைய) தந்தையார் இராமலிங்கர் இராமச்சந்திரரே சிறிய அளவில் கட்டுவித்தார். இவரே போர்த்துக்கேயர் கோவிலை இடித்தபோது அம்பாளை வல்லிக்காடு மேற்கு ஆலம்பொந்தில் ஒளித்துவைத்து சலியன் ஐயரைக் காவலுமாக வைத்தார். புதிய ஆலயம் கட்டும்வரை அம்பாளுக்கான பூசைகள் அனைத்தையும் நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் செய்வித்தார். கட்டுவித்த காலம் கி.பி.1788 ஆகும்.”

மேலும், நாகம்மாள் கோவிலை அழிக்கவந்த ஒல்லாந்தர் “இது மாதா கோவில்” என்று திரு.கதிரித்தம்பி எடுத்துக் கூறியதும் அவரது வாக்கை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, (கோவிலுக்குள்ளேபோய் அங்கு வழிபடு பொருளாக எந்தக் கடவுள் இருக்கிறார் என்பதைக் கூட பார்த்து உறுதிசெய்துகொள்ளாமல்) திரும்பிப்போய்விட்டார்கள் என்று திரு.சண்முகநாதபிள்ளை கூறுவதை நம்புவதற்குச் சங்கடமாக உள்ளது.

ஆகவே, திரு.இராமச்சந்திரர் கதிரித்தம்பி ஒல்லாந்தர் காலத்தில் நொத்தாரிஸ், மற்றும் கிராம வரிவசூலிப்பவர் ஆகிய பதவிகளைப் பெறுவதற்காக கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்று இருக்கலாமென்றும், ஒரு மேரிமாதா கோவிலையும்கூட அவர் நிறுவி நிருவகித்து இருக்கலாமெனவும் கருதுவதற்கு ஆதாரங்களுண்டு. ஒல்லாந்தர் தமது சமயத்தை யாழ்ப்பாண இராச்சியத்தில் வசித்த சாதாரண பொது சனங்கள் மத்தியிலேகூட வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள் என்று முதலியார் திரு.செ.இராசநாயகம் கூறுகிறார். “தொடக்கத்தில் சமய விருத்தியைப்பற்றிக் கடுமையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலம் செல்லச் செல்ல அதன் விருத்தியில் நாட்டம் வைத்தவராய் சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்றாக நீக்கி கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போகவேண்டுமென்றும், பிள்ளைகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்குப் போய் கிறீஸ்தவ சமய பாடங்கள் கற்க வேண்டுமென்றும் கட்டளை இட்டனர்” என்பது முதலியார் கூற்று. சாதாரண பொது சனங்களையே இவ்விதம் நெருக்கிக் கிறீஸ்தவராகத் தூண்டிய ஒல்லாந்தர், நொத்தாரிஸ் மற்றும் கிராம வரி வசூலிப்பவர் பதவிகளை ஒரு சைவ சமயத்தவருக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதன்று. நயினாதீவில் ஒரு கிறீஸ்தவ வழிபாட்டுத் தலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆங்கில மொழிக் கல்வியையும் கிறீஸ்தவ சமயப் பிரசாரகர்களே முதன்முதலில் நயினாதீவில் தொடக்கிவைத்தனர்.

தீவுப்பகுதி மக்களின் குடியமர்வு

அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள். அதிகமான திருமணத் தொடர்புகள் பக்கத்தேயுள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணிசமான தொகையினரான புங்குடுதீவு மக்கள் நயினாதீவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புங்குடுதீவில் வசித்த மாதுங்கர் என்பவரின் மகன் சரவணமுத்து நயினாதீவில் உடையாராக நியமிக்கப்பட்டார். இவர் நயினாதீவில் திருமணம்செய்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியதன் பின்பு அவரது உறவினர் பலரும் நயினாதீவில் திருமணஞ்செய்து அங்கு சென்று குடியேறி வாழத் தலைப்பட்டனர். இவ்வாறே நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர். நயினை நாகம்மாள் தேவியின்மீது தீவுப்பகுதி மக்கள் கொண்ட பற்றும், பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம்.

நயினாதீவில் பௌத்தம்

படிமம்:NainathivuNahaVihara.JPG
நயினாதீவு நாக விகாரை

1939 இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார். மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர் கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.

கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து, நாகதீபத்தில் - அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் - வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில், நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம். மாமன்னர் முதலாம் இராஜஇராஜ சோழ தேவரும், அவரது புதல்வர் முதலாம் இராசேந்திர சோழ தேவரும் தமது நண்பரான சிறீவிசயத்து அரசரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில்கூட மாபெரும் புத்தர் கோவில் ஒன்றை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. சில நூற்றாண்டுக்கு முன்னர் பெருமளவுக்கு பௌத்தராக வாழ்ந்தோரின் சந்ததியாரே இன்றுள்ள தமிழர்கள் ஆவர்.

ஆகவே, 1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரமும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின், அந்தத் தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை.

வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் முதலில் நாகவழிபாட்டுடன் சங்கமித்த பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பௌத்தர்கள் ஆகினர். பின், கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சைவம் தழைக்க அவர்களும் சைவசமயத்தைச் சார்ந்தனர். ஆயினும், எக்காலத்தும் நாகவழிபாட்டை மறந்தாரல்லர். நயினாதீவிலுள்ள நாகம்மாள் கோவில் கருவறைக்குள் இன்றும் நிலைத்திருக்கும் ஐந்தலை நாகத்தின் தொன்மை வாய்ந்த சிலா வடிவம் இதனை நிருபிப்பதாக உள்ளது. தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே. பௌத்த சமய வழிபாடோ, இந்து சமய வழிபாடோ அல்ல.

பேரினவாத நெருக்கடி

பிரித்தானியர் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, தமிழ் ஈழத்தின் ஏனைய சிற்றூர்களை விடவும் அதிக அளவில் சிங்களப் பேரினவாதப்பிடி நயினாதீவை இறுக்கத்தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தமிழர்களின் சாத்வீகமான போராட்டத்தை அடக்க இனக்கலவரத்தை ஏவிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த இனக்கலவரத்தின் காரணமாக தமிழ் இனத்திற்கு நேர்ந்த உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் எழுதப்புறப்பட்டால் முடிவின்றி நீளும். கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும், உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும், பலர் கொல்லப்பட்டதாலும் தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களவர் எவருமே கொல்லப்படவில்லை. இந்த வேளையில், நயினாதீவில் இருந்த புத்தபிக்கு 1958.05.29இல் காரைநகர் கடற்படைமுகாமில் சென்று தஞ்சமடைந்ததன்பின்பு, நயினாதீவிலுள்ள பௌத்த விகாரை 1958 யூன் மாத முற்பகுதியில் தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூன் 10 ஆம் நாள் பகல் ஒரு மணி அளவில் பொலிசாரும் கடற்படையினரும் நயினாதீவுக்கு வந்திறங்கி, ஏழு ஊரவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றதுடன் பல வீடுகளையும், கடைகளையும் எரித்து அழித்தனர். அத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலையும் அவர்கள் எரித்துச் சேதப்படுத்தினர். கோவிலைச் சூழவிருந்த மடங்கள் யாவும் எரித்து முற்றாக அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஏழுபேரும் காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மாலை சுமார் 7.30 மணிவரை அங்கு வைத்து பொலிசாராலும், கடற்படையினராலும் அடித்து நொருக்கப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் அங்கும் பொலிசாராலும், கடற்படையினராலும் நடுச்சாமம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.

மறுநாள் - அதாவது 11. சூன் 1958 அன்று - காலை இந்த ஏழுபேரும் கடற்படைப் படகு ஒன்றில் மீண்டும் நயினாதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் படகில் பொலிசாரும், கடற்படையினரும், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, துணை ஆய்வாளர் சிட்னி ஐவர் பளிப்பான Sub-Inspector Sydney Ivor Palipane) என்பவரும் சென்றனர். நயினாதீவில் அன்றைய தினம் மேலும் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவுப் பால முகப்பில் ‘சிங்களவரே திரும்பிப் போங்கள்’ (Sinhalese Go Back) என்று ஆங்கிலத்தில் தார் கொண்டு எழுதப்பட்டு இருந்த வாசகங்களை நாக்கால் நக்கும்படி படையினர் சில கைது செய்யப்பட்ட ஊர்மக்களைப் பலவந்தப்படுத்தி செய்வித்தார்கள். அன்று மாலை சுமார் 6.30 மணிவரை நயினாதீவில் படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மாலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து புறப்பட்ட படகு காரைநகர் கடற்படை முகாமுக்கு சென்றடைந்ததும் கைது செய்யப்பட்ட நயினை மக்கள் அனைவரும் வேறு ஒரு படகுக்குள் மாற்றப்பட்டு அதனுள் வைத்துத் தாக்கப்பட்டனர். இரவு 9.15 மணி அளவில் கைது செய்யப்பட்டோர் யாவரும் ஊர்காவற்றுறை பொலிசு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இரவு முழுவதும் அடித்தும், வேறு அநாகரிகமான விதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மறுநாள் 12. சூன் 1958 பகல் 12.00 மணிவரை இவர்கள் பொலிசு நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட பின்பு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் திரு.பி.ஜி.எஸ்.டேவிட் முன்னிலையில் அன்றைய நாள் முன்னிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒரு வாரத்தின் பின்பு, விளக்க மறியலில் இருந்தவர்களில் மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனையோரில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 3. சூலை 1958 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒருவருக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் பொலிசாரால் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்படவில்லை. தம்மை அடித்துக் கொடுமைப்படுத்தியோரை அடையாளம் காட்ட முடியுமென்று தாக்கப்பட்டவர்கள் கூறியும் அரசாங்கம் அவர்களைத் தாக்கிய பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விதமாக அப்பாவி நயினை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையும், அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமையும் பிற்காலத்தில் புத்த விகாரை நிருவாகத்தின் எந்தச் செயலையும் கண்மூடிப்பார்த்திருக்கும் போக்கை நயினாதீவில் வளர்த்துவிட்டன எனலாம்.

பிக்குவும் தனது தேவைகளுக்கு உதவுவதற்கும், தனக்கு ஊரவர்பற்றி தகவல் தருவதற்கும் நயினாதீவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1979 மே மாதத்தில் இந்த புத்தபிக்கு புத்த விகாரைக்கு வழிபாட்டுக்காக வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்கான மடம் அமைப்பதற்கென அரசிடமிருந்து தான் பெற்ற அரச காணிக்குள் கடைகளைக் கட்டி வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்த முற்பட்டபோது இந்தக் கட்டுரையாளர் அதனை எதிர்த்து துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு, பொதுசன அபிப்பிராயத்தை பிக்குவின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக திரட்ட முயன்றவேளை, 18. மே 1979 இல் பிக்குவின் தூண்டுதலின் பேரில் கொழும்பில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும் நீதிமன்றில் பொலிசாரால் குற்றச்சாட்டுப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாததால் பின்பு விடுதலை செய்யப்பட்டார். புத்தபிக்கு அமைத்த கடைகளுள் ஒன்று மேலே குறிப்பிடப்பட்ட குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது. பிக்குவின் பணத்தை ஊருக்குள் வட்டிக்குக் கொடுப்பதையும் இவர்களே கவனித்து வட்டியிலும் பங்கு பெற்றுக்கொண்டனர். ஐம்பது ஆண்டுகளாக தானும் தனக்கு முன் தனது குடும்பமும் நயினாதீவிலுள்ள பிக்குவுக்கு உணவு வழங்கி வருவதாக இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்ததாக 2001 யூன் மாதத்தில் வெளிவந்த The Sri Lanka Reporter என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பேரினவாதிகளின் மற்றொரு படைத் தாக்குதல் நயினாதீவின் மீது 3. மார்ச் 1986 அன்று நிகழ்ந்தது. இது தொடர்பாக 5. மார்ச் 1986 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை பின்வருமாறு விவரிக்கின்றது:

“ஆலயத்தின் பெரிய கதவு 65 வீதம் எரிந்திருக்கக் காணப்பட்டது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், பட்டாடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.” “நயினை அம்மன் கண்ணீர் விடுகிறாள்! ஆலயத்தின் நட்டம் 20 இலட்சம்!” “நால்வர் பலி!(உண்மையில் ஐவர் அன்று கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு சடலம், இச்செய்தி வெளியான பின்பு கண்டு எடுக்கப்பட்டது.) வீடுகள் தீக்கிரை!”, “நாகபூசணி அம்மனின் இரண்டு தேர்கள், மஞ்சம் தீக்கிரையாகின!”, “நகைகளைக் கொள்ளையடித்த பின்பு வீட்டுக்காரரைச் சுட்டுக்கொன்றனர்”, “படகுகள் எரிப்பு!, போக்குவரத்து பாதிப்பு!”

அனைத்துலக மன்னிப்புச் சபையின் (Amnesty International) வெளியீடான “Sri Lanka: Disappearances” (D இணைப்பு – பக்கம் 24) என்ற பிரசுரத்தில் அன்று கடற்படையினர் நயினாதீவில் நடத்திய தாக்குதல் குறித்து முழு விவரங்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர், 1990 யூலையில் ஒரு நயினைவாசி படையினரால் கைக்குண்டு வீசிக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார்.

இங்குள்ள கடற்படை முகாம் 24. சூலை 1983 அன்று நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, தற்போது நடுத்தர வயதிலும் இளைஞர்களாகவும் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்தோர் வாழ்நாள் முற்றிலும் உளத் தாக்கங்களுக்குட்பட்டு வாழ்கின்ற நிலை உள்ளது. அத்துடன், பல தனியார் வீடுகள், காணிகள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் அலுவலகம், வழித்துணை வைரவ சுவாமி கோயில், பொது வீதிகள் முதலியன கடற்படையினரால் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.

1993ம் ஆண்டு தமிழர்களின் உரிமைப்போர் நடைபெற்ற வரலாற்றுக் காலப்பகுதியிலே பௌத்த துறவிக்கு உதவி வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போயில் நிர்வாக சபையிலும் இடம்பெற்று ஆலய பரிபாலனம் செய்து கொண்டிருந்தனர். எல்லா ஆலயங்களும் தமது திருப்பணி பணத்தில் சிறுபகுதியை தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு வழங்கிய போதும் நிதிப்பொறுப்பாளராயிருந்த குறிப்பிட்ட நபர் தமிழர்களுக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை. பண்ணைப்பாலம் உடைக்கப்பட்டு போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த போது நயினாதீவு உணவுத்தேவைக்களுக்காக மிகுந்த நெருக்கடியை எதிர்நோக்கியது குறிப்பிட்ட நபர் குடும்பத்திற்கு இராணுவத்தினர் உணவு ஏற்பாடுகளை அளித்து வந்தனர். ஆசிரியரான அவருக்கு அதிபர் வேலையும் பின்னர் அரசாங்கத்தின் சமாதான நீதவான் பதவியும் கிடைத்தது. மக்கள் சிலர் கடல் வழியாக திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர்.

2011ம் ஆண்டு இங்குள்ள வென். நவன்டாகல பெத்த கித்தி திஸ்ஸ நாயக்க தேரோ என்ற பௌத்த துறவி ஒரு அதி நவீன படகை வாங்கி சேவையில் ஈடுபடுத்தினார். இதில் ஒரு தடவை பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஏனைய படகுகளில் ஆறு தடவை ஏற்ற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையும் சமமானது. இதனால் உள்ழூர் படகு சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த படகு சேவையாளர்கள் துறவியின் படகின் இயந்திரத்திற்குள் இரவோடிரவாக மண்ணை கொட்டி இயந்திரத்தை பழுதடைய வைத்தனர்.

வழிபாட்டுத் தலங்கள்

அவை வருமாறு:[4][5][6]

  • நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்
  • நயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலயம்
  • நயினாதீவு காட்டுக் கந்தசுவாமி கோயில்
  • இரட்டங்காலி முருகன் ஆலயம்
  • வேள்விநாயன் கோயில்
  • நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம்
  • நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • நயினாதீவு பிரண்டையம்பதி ஶ்ரீ காளி அம்மன் ஆலயம்
  • முத்துக்குமாரசாமி கோவில் (சுவாமிகளின் சமாதி ஆலயம்)
  • நயினாதீவு வல்லிக்காடு ஸ்ரீ ஆலடி அம்மன் ஆலயம்
  • ஐயனார் கோயில்
  • நயினாதீவு மலையடி ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலயம்
  • நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்
  • நயினாதீவு விநாயகர் வீதி சிவஞான வைரவர் கோவில்
  • நயினாதீவு படகுத்துறை ஆலடி அருள்ஞான வைரவர் ஆலயம்
  • நாகதீப ராஜ மகா விகாரை
  • நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயம்
  • நயினாதீவு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல்

பாடசாலைகள்

  • நயினாதீவு மகாவித்தியாலயம்
  • நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயம் (முன்னைய பெயர்: தில்லையம்பல வித்தியாலயம்)
  • நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட மகா வித்தியாலயம்

துணை நூல்கள்

  • தேர்த் திருப்பணிச் சபை மலர்(1957)- முதலியார் குல.சபாநாதன்
  • யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928)- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
  • நயினாதீவு நாகம்மாள்(2003)- நாகேசு சிவராச சிங்கம்
  • குடமுழுக்குவிழா மலர்(2005)- கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில்
  • யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம்
  • Sketches of Ceylon History (1906)- Sir Pon Arunachalam
  • Ancient Jaffna (1926)- Mudaliyar C. Rasanayagam
  • ஈழநாடு, யாழ்ப்பாணம் - 5. மார்ச் 1986 அன்று வெளியான இதழ்
  • Sri Lanka: Disappearances- Amnesty International Publication-AI Index: ASA37/08/86- ISBN 0 86210 1085
  • நயினை நாகபூசணி – ஆலய வரலாறும் அருட் பாமாலையும்(1981)- நா.க.சண்முகநாதபிள்ளை, B. Sc.
  • நயினார்தீவின் வரலாறு: (2006) நாகேசு சிவராச சிங்கம்
  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Nainativu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=நயினாதீவு&oldid=39791" இருந்து மீள்விக்கப்பட்டது