டபிள்யூ. ஜி. ரொக்வூட்
வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் (William Gabriel Rockwood, 13 மார்ச் 1843 - 29 மார்ச் 1909) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மருத்துவரும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.
டபிள்யூ. ஜி. ரொக்வூட் W. G. Rockwood ச.உ. | |
---|---|
அதிகாரபூர்வமற்ற உறுப்பினர் (தமிழ்) இலங்கை சட்டவாக்கப் பேரவை | |
பதவியில் 14 மார்ச் 1898 – 1906 | |
முன்னவர் | பொன்னம்பலம் குமாரசுவாமி |
பின்வந்தவர் | அம்பலவாணர் கனகசபை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 மார்ச்சு 1843 |
இறப்பு | 29 மார்ச்சு 1909 | (அகவை 66)
படித்த கல்வி நிறுவனங்கள் | மாநிலக் கல்லூரி, சென்னை மதராசு மருத்துவக் கல்லூரி |
தொழில் | மருத்துவர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
ஆரம்ப வாழ்க்கை
ரொக்வூட் 1843 மார்ச் 13 இல் இலங்கையின் வடக்கே அளவெட்டியில் சின்னத்தம்பி எலிசா ரொக்வூட் என்பவருக்குப் பிறந்தார்.[1][2][3] தந்தையார் வட்டுக்கோட்டை குருமடத்தில் பயின்று கிறித்தவராக மதம் மாறியவர். காங்கேசன்துறையிலும், பருத்தித்துறையிலும் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவர்.[4] யாழ்ப்பாணம் வேம்படி ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற வில்லியம் ரொக்வூட் சென்னை சென்று அங்குள்ள மாநிலக் கல்லூரியில் படித்து மெட்ரிக்குலேசன் தேர்வு பெற்றார்.[1][2] பின்னர் 1861 இல் மதராசு மருத்துவக் கல்லூரியில் புலமைப்பரிசில் பெற்று 1866 சூன் மாதத்தில் மருத்துவர் மற்றும் அறுவை மருத்துவராக முதல் வகுப்பில் தேறினார்.[1][2][5]
ரொக்வூட் 1871 இல் யாழ்ப்பாணம் மூளாயைச் சேர்ந்த சின்னமுதலியார் கதிரவேலுவின் மகள் முத்தம்மாவைத் திருமணம் புரிந்தார்.[1][2] இவர்களுக்கு மருத்துவர் டேவிட் ரொக்வூட் உட்பட நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர்.[4]
பணி
சென்னையில் இருந்து திரும்பி இரண்டு மாதங்களில் அரசு மருத்துவ சேவையில் சேர்ந்து புத்தளத்தில் மருத்துவராக 1875 வரை சேவையாற்றினார்.[1][2] 1866/67,[2] 1875[1] காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி பரவிய போது அதைத் தடுப்பதில் பெரும் பங்காற்றினார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[2][5] பின்னர் அம்பாந்தோட்டை, கம்பளை ஆகிய இடங்களில் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றினார்.[2] 1878 இல், கொழும்பு பொது மருத்துவமனைக்கு அறுவை-மருத்துவத் தலைமை அதிகாரியாக 1878 முதல் 1883 வரை பணியாற்றினார்.[1][2][5] இலங்கை மருத்துவக் கல்லூரியில் அறுவை மருத்துவம், மற்றும் பேற்றுத் துணைவியியல் ஆகிய துறைகளில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.[1][2][5] 1884 இங்கிலாந்து சென்று அங்கு படித்து MRCS, MRCP பட்டங்களையும் பெற்றார்.[2][5] அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் 1898 இல் கொழும்பு மருத்துவமனையில் அறுவை-மருத்துவ அறிவுரைஞராகப் பணியாற்றினார்.[2][5] ரொக்வூட் பிரித்தானிய மருத்துவக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குத் தலைவராகவும் இருந்து செயல்பட்டார்.[1][2][5]
அரசியலில்
1898 மார்ச் 14 இல்[3] ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினராக பி. குமாரசாமிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.[1][2][6][7] 1903 இல் மீண்டும் நியமிக்கப்பட்டார்.[2][8] இலங்கையில் வடக்கிற்கும், சிலாபத்திற்கும் தொடருந்துப் பாதைகள் அமைப்பதில் இவர் பெரும் ஆதரவு அளித்திருந்தார்.[1] 1906 சனவரியில் சுகவீனம் காரணமாக[3] சட்டவாக்கப் பேரவையில் இருந்து இவர் இளைப்பாறினார்.[2][4]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 165-166. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 Wright, Arnold, தொகுப்பாசிரியர் (1907). Twentieth Century Impressions of Ceylon. Lloyd's Great Britain Publishing Company. பக். 555-557. http://www.noolaham.org/wiki/index.php/Twentieth_Century_Impressions_of_Ceylon.
- ↑ 3.0 3.1 3.2 Martyn, John H. (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. பக். 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-1670-7. http://www.noolaham.org/wiki/index.php?title=Notes_on_Jaffna_-_Chronological%2C_Historical%2C_Biographical.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Dr. W. G. Rockwood". Jaffna College Miscellany (தெல்லிப்பழை: American Ceylon Mission) XIX (3): 1-4. July 1909. http://findit.library.yale.edu/catalog/digcoll:202584.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Obituaries". British Medical Journal 1 (2521): 1034. 24 ஏப்ரல் 1909. http://www.bmj.com/content/1/2521/1034.2.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (26981): 3858. 24 சூன் 1898. https://www.thegazette.co.uk/London/issue/26981/page/3858.
- ↑ டி சில்வா, கே. எம். (1981). A History of Sri Lanka. கலிபோர்னியா பல்கலைக்கழகம். பக். 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520043206. http://books.google.com/books?id=dByI_qil26YC.
- ↑ "The London Gazette". லண்டன் கசெட் (27578): 4589. 21 சூலை 1903. https://www.thegazette.co.uk/London/issue/27578/page/4589.