சி. சு. செல்லப்பா

சி.சு.செல்லப்பா (C. S. Chellappa, செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

சி. சு. செல்லப்பா
சி. சு. செல்லப்பா
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. சு. செல்லப்பா
பிறப்புபெயர் சின்னமனூர் சுப்பிரமணியம் செல்லப்பா
பிறந்ததிகதி (1912-09-29)செப்டம்பர் 29, 1912
பிறந்தஇடம் சின்னமனூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு திசம்பர் 18, 1998(1998-12-18) (அகவை 86)
பணி இதழாளர்
எழுத்தாளர்
கவிஞர்
நாடக ஆசிரியர்
திறனாய்வாளர்
தேசியம் இந்தியா
குடியுரிமை இந்தியர்
கல்வி இளங்கலை
கல்வி நிலையம் மதுரைக் கல்லூரி
வகை திறனாய்வு
கருப்பொருள் தமிழ் இலக்கியம்
குறிப்பிடத்தக்க விருதுகள் விளக்கு
சாகித்யா அகாதெமி
துணைவர் மீனாட்சி

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார்.

மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

"சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது.

1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

விமர்சக எழுத்தாளராக

சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

தாக்கங்கள்

காந்தி, வ. ராமசாமி

பின்பற்றுவோர்

பிரமிள்

வெளியிட்ட நூல்கள்

சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

சிறுகதைத் தொகுதிகள்

  1. சரசாவின் பொம்மை
  2. மணல் வீடு
  3. அறுபது
  4. சத்தியாகிரகி
  5. வெள்ளை
  6. நீர்க்குமிழி
  7. பழக்க வாசனை
  8. கைதியின் கர்வம்
  9. செய்த கணக்கு
  10. பந்தயம்
  11. ஒரு பழம்
  12. எல்லாம் தெரியும்
  13. குறித்த நேரத்தில்
  14. சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள்

குறும் புதினம்

  1. வாடி வாசல்

புதினம்

  1. ஜீவனாம்சம்
  2. சுதந்திர தாகம்

நாடகம்

  1. முறைப்பெண்

கவிதைத் தொகுதி

  1. மாற்று இதயம்

குறுங்காப்பியம்

  1. இன்று நீ இருந்தால்

2000வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல் எழுத்து ஏட்டின் 114ஆவது இதழில் வெளிவந்தது.

திறனாய்வு

  1. ந. பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து
  2. பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி
  3. எனது சிறுகதைகள்
  4. இலக்கியத் திறனாய்வு
  5. மணிக்கொடி எழுத்தாளர்கள்
  6. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

மறைவு

சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார்.

விருதுகள்

இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது[1][2][3].

மேற்கோள்கள்

  1. "Sahitya Akademi Award for Tamil writers" இம் மூலத்தில் இருந்து 2010-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100124032426/http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil. 
  2. இராமகிருஷ்ணன், எஸ். "சி.சு.செல்லப்பா". உயிர்மை இம் மூலத்தில் இருந்து 2011-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111006205453/http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=29. பார்த்த நாள்: 4 பெப்ரவரி 2010. 
  3. "Little known Tamil scholars 4 - C. S. Chellappa". திண்ணை. 03 மே 2009. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20903051&format=print. பார்த்த நாள்: 4 பெப்ரவரி 2010. 

வெளி இணைப்பு

"https://tamilar.wiki/index.php?title=சி._சு._செல்லப்பா&oldid=4123" இருந்து மீள்விக்கப்பட்டது