சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை

சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கபிலதேவ நாயனார் என்பவரால் பாடப்பட்டது. [1]இதில் 37 பாடல்கள் உள்ளன. [2]

இந்த நூலில் பல தலப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகைமங்கை, ஆரூர், ஐயாறு, ஒற்றியூர், கயிலை, கோவலூர், சத்திமுற்றம், தில்லை, பழனம், பாண்டிக்கொடுமுடி, மறைக்காடு, முதுகுன்று(தற்போதைய விருத்தாச்சலம்), வலஞ்சுழி, வாய்மூர், வெண்காடு என்பன அவை. இந்நூலின் பாடல்களில் சில அகத்துறைப் பாடல்கள்ளாக உள்ளன.

நின்போல் அமரர்கள் நீள்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளம் தழைப்பன, பாங்கறியா
என்,போ லிகள்பறித் திட்ட இலையும் முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளும் ஐயன் ஐ யாறென் அடித்தளமே.

இது திருவையாறு பற்றிய கட்டளைக் கலித்துறை.

அடியோமைத் தாங்கியோ ஆடை உடுத்தோ
குடியோம்ப மாநிதியம் கொண்டோ – பொடியாடு
நெற்றியூர் வாளரவ நீள்சடையாய் நின்னூரை
ஒற்றியூர் ஆக்கிற் றுரை.

இது திருவெற்றியூர் மேல் பாடப்பட்ட வெண்பா. இந்தப் பாடல் ஒற்றியூரைச் சிவபெருமான் ஒற்றிக்கு வைத்தானோ என வினவும் நயத்தோடு பாடப்பட்டுள்ளது. அடியவர்களைத் தாங்கவோ, கோவண ஆடை உடுப்பதற்காகவோ, குடிமக்களைக் காப்பாற்ற நிதி வேண்டியோ ஒற்றிக்கு வைத்தான் எனப் பாடல் கேட்கிறது.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. இதன் முதல்-பாடலும், இறுதிப்பாடலும் மண்டலித்து முடியாததால் இதில் மண்டலித்து முடியும் வகையில் 40 பாடல்கள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.