காரைக்கால் அம்மையார் (1973 திரைப்படம்)

காரைக்கால் அம்மையார் (Karaikkal Ammaiyar) 1973 ஆம் ஆண்டு ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில்[1], காரைக்கால் அம்மையாராக கே. பி. சுந்தராம்பாள் (முதிர் வயது) மற்றும் புனிதவதியாக லட்சுமி (இளவயது) நடிப்பில், குன்னக்குடி வைத்தியநாதன் இசையில், ஈ. வி. ஆர். பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படம். 63 நாயன்மார்களில் இடம்பெற்றுள்ள 3 பெண் துறவிகளில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தமிழ் இலக்கியத்தில் தான் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர்.[2][3][4] இது அவருடைய வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் திரைப்படம் ஆகும். சோழர்கள் காலத்தில், காரைக்கால் ஊரில் பிறந்தவர். இவர் இறைவன் சிவன் மீது மிகுந்த பக்தி உடையவர். இவர் புனிதவதி என்ற பெயரில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது[5].

காரைக்கால் அம்மையார்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஇந்திரா ராஜன்
கதைஏ. பி. நாகராஜன்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புலட்சுமி
கே. பி. சுந்தராம்பாள்
ஆர். முத்துராமன்
சிவகுமார்
ஸ்ரீவித்யா
மனோரமா
வி. எஸ். ராகவன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
சுருளிராஜன்
ஒளிப்பதிவுஆர். சுப்பா ராவ்
படத்தொகுப்புடி. விஜயரங்கம்
கலையகம்ஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்
விநியோகம்ஈவீயார் பிலிம்ஸ் /ஈ. வி. ஆர். பிலிம்ஸ்
வெளியீடு25 அக்டோபர் 1973
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

புனிதவதி (லட்சுமி) சிறுவயதிலிருந்தே இறைவன் சிவனின் மீது மிகுந்த பக்தியோடு இருக்கிறாள். சிறு வயதிலேயே மணலில் சிவலிங்கத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறாள். அவளது தந்தை தனதத்தன் (வி. எஸ். ராகவன்) ஒரு வியாபாரி. புனிதவதி சிறு வயதிலேயே நமசிவாய எனும் இறைவனின் திருமந்திரத்தை தினமும் பக்தியுடன் உச்சரிக்கிறாள். அந்த ஊருக்கு வரும் சிவபக்தர்களை அன்புடன் உபசரிக்கிறாள்.

சில ஆண்டுகள் கழித்து அவளுக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வியாபாரியின் மகன் பரமநாதன் (முத்துராமன்) என்பவருக்கும் திருமணம் நடக்கிறது. பரந்தாமன் ஒருநாள் தனக்குக் கிடைத்த இரண்டு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்துவிடுகிறான். அப்போது தன் வீட்டுக்கு வரும் சிவனடியாருக்கு மதிய உணவளிக்கும் புனிதவதி பரந்தாமன் கொடுத்தனுப்பிய ஒரு மாம்பழத்தையும் அவருக்குத் தருகிறாள். சிவனடியார் சென்றபின் மதிய உணவருந்த வீட்டுக்கு வரும் பரந்தாமனுக்கு மற்றொரு மாங்கனியை உண்ணத் தருகிறாள். மாங்கனி சுவையாக இருக்கவே இன்னொரு மாங்கனியையும் கொண்டுவரும்படி கூறுகிறான். இன்னொரு மாங்கனி இல்லாததால் செய்வதறியாது திகைக்கும் புனிதவதி, இறைவன் சிவனிடம் இன்னொரு மாங்கனி வேண்டிய உடனே இறைவன் அருளால் அவள் கைகளில் மாங்கனி கிடைக்கிறது. அதை தன் கணவனுக்குக் கொடுக்கிறாள். முதலில் உண்ட மாங்கனியை விட சிறந்த சுவையுடன் இருக்கவே இந்த மாங்கனி அவளுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்கிறான். நடந்தவற்றைக் கூறுகிறாள் புனிதவதி. அதை நம்ப மறுக்கும் பரந்தாமன் மீண்டும் இன்னொரு மாங்கனியை அவள் இறைவனிடம் கேட்டுப் பெற்றுக்காட்டுமாறு கூறுகிறான். அவள் இறைவனிடம் வேண்ட இன்னொரு மாங்கனி கிடைக்கிறது. அதை அவனிடம் கொடுக்க அவன் தொட்டதும் அம்மாங்கனி மறைந்துவிடுகிறது. புனிதவதியின் தெய்வீக சக்தியை உணர்ந்து, தான் அவளுக்கு ஏற்றவனல்லன் என்றெண்ணி அவளை நீங்கி மதுரைக்குச் சென்று பாக்கியவதி (குமாரி பத்மினி) என்ற பெண்ணை மணந்து வாழ்கிறான். அவனுக்குப் பிறக்கும் பெண் குழந்தைக்கு புனிதவதி (பேபி சுமதி) என்று பெயர் சூட்டுகிறான்.

பரந்தாமனைத் தேடி மதுரை வரும் புனிதவதியைத் தெய்வப்பிறவியாக எண்ணி அவள் காலில்விழுந்து வணங்குகிறான். கணவன் தன்னை தெய்வப்பிறவியாக எண்ணி வணங்குவதால் இல்லற வாழ்வை விடுத்து சிவ பக்தையாக மாற எண்ணும் புனிதவதி, இறைவனிடம் தன் அழகிய உருவம் நீங்கி சிவபூதகண வடிவம் வேண்டுகிறாள். இறைவன் அவள் கேட்டவாறே அருள் செய்கிறான். அதன்பின் புனிதவதியை அனைவரும் "அம்மையார்" (கே. பி. சுந்தராம்பாள்) என்றே அழைக்கிறார்கள்.

இறைவன் சிவனைக் காணக் கைலாயம் செல்லும் அம்மையார் இறைவன் வீற்றிருக்கும் இடத்தில் தான் கால்களால் நடப்பது தகாது என்றெண்ணி தலையால் நடந்து ஏறுகிறாள். அதைக் காணும் இறைவி பார்வதி (ஸ்ரீவித்யா) அம்மையாரைப் பற்றி சிவனிடம் (சிவகுமார்) கேட்கிறாள். சிவன் நம் அனைவரையும் காக்கும் 'அம்மை' இவள் என்று கூறுகிறார். சிவனைத் தரிசிக்கும் அம்மையாரிடம் அவரது விருப்பம் யாதெனக் கேட்கிறார் சிவன். அம்மையார் "எப்போதும் இறைவனை நினைத்து வாழும் வாழ்க்கை வேண்டும். எனக்கு மறுபிறப்பு வேண்டாம். ஒருவேளை மறுபிறப்பு உண்டென்றால் அப்பிறவியிலும் சிவபக்தையாக சிவனின் காலடியில் இருக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டுகிறாள். அவருக்குத் தன் ருத்ர தாண்டவத்தைக் காட்டி அருளும் இறைவன் சிவன் திருவாலங்காடு சென்று தன்னைச் சரணடையுமாறு கூறுகிறார். திருவாலங்காடு வந்தடையும் அம்மையார் அங்கு தங்கி "திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்[6]" என்னும் பதிகத்தை இயற்றி அருள்கிறார்.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்.[7] பாடலாசிரியர்கள் கண்ணதாசன் மற்றும் கே. டி. சந்தானம்.[8]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 உலகமெங்கும் பி. சுசிலா 4:10
2 நாயகன் வடிவை பி. சுசிலா 3:05
3 அன்பே சிவம் என்று எஸ். வரலக்ஷ்மி 4:01
4 இறைவா உன் புகழ் கே. பி. சுந்தராம்பாள் 2:51
5 வாடுவதா ஓர் பொழுதும் கே. பி. சுந்தராம்பாள் 1:00
6 பாடுகிறேன் உன்னை கே. பி. சுந்தராம்பாள் 3:33
7 பிறவாத வரம் வேண்டும் கே. பி. சுந்தராம்பாள் 2:45
8 தக தக தகவென ஆடவா கே. பி. சுந்தராம்பாள் 6:53

மேற்கோள்கள்

  1. "காரைக்கால் அம்மையார்".
  2. "Karaikkal Ammaiyar (1943)" (in en). The Hindu. 2013-12-21 இம் மூலத்தில் இருந்து 10 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180610191730/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/karaikkal-ammaiyar-1943/article5486857.ece. 
  3. சிவா (2024-03-06). "இவன வச்சி என்ன பண்ணுவ?!.. கலாய்த்த நடிகை!.. வெறியேத்தி வேலை பார்த்த சிவக்குமார்!." CineReporters. Archived from the original on 20 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-20.
  4. "80 வருடங்களுக்கு முன் திரைக்கு வந்த காரைக்கால் அம்மையாரின் கதை". News18. 2023-09-25. Archived from the original on 20 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-03-20.
  5. "காரைக்கால் அம்மையார்".
  6. "திருவாலங்காட்டு திருப்பதிகம்". Archived from the original on 2015-11-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06.
  7. "Karaikkaal Ammaiyaar". Hungama. Archived from the original on 8 April 2024. பார்க்கப்பட்ட நாள் 8 April 2024.
  8. "பாடல்கள்".

வெளி இணைப்புகள்