ஓ. ஏ. இராமையா

ஓ. ஏ. இராமையா (சூலை 24, 1938 - மே 18, 2013) இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதியும், பொதுவுடமைவாதியும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கை மலையகம் தலவாக்கலை பூண்டுலோயா டன்சீனன் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இளம் வயது முதலே சமூக பிரச்சினைக‌ளில் அக்கறை கொண்டிருந்த இராமையா 1950களின் இறுதியில் சனநாயகத் தொழிலாளர் காங்கிரசில் தமது 19 ஆவது வயதில் தொழிற்சங்கப் பணியை ஆரம்பித்தார். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்போது, அரசியல், தொழிற்சங்கக் கற்கை நெறிகளை கிழக்கு செருமனியில் தொடர்ந்தார்.[1]

1964 இல் சீன-உருசிய முரண்பாட்டின் காரணமாக என். சண்முகதாசன் தலைமையில் செங்கொடிச் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதில் முக்கிய பதவியை வகித்தார். 1971 இல் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, என். சண்முகதாசனுடன் இவரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

சிறையிலிருந்து திரும்பிய பின், 1983 முதல் செங்கொடிச் சங்கத்தின் தலைவராக ரொசாரியோ பெர்னாண்டோவும், பொதுச் செயலாளராக ஓ.ஏ. இராமையாவும் செயற்பட்டார்கள். 1984 இல் செங்கொடிச் சங்கம் மீண்டும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இராமையா சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம், கம்யூனிஸ்ட் கட்சியின் சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் தலைவராகவும் இறுதிவரை பதவி வகித்துள்ளார்.[1]

இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து இந்த அமைப்பின் மூலம் போராட்டங்களை நடத்தினார்.[2]

செருமனி, உருசியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, ஒங்கொங், வங்காளதேசம் முதலான பல நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.[1]

மறைவு

இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஓ. ஏ. இராமையா அட்டனில் 2013 மே 18 சனிக்கிழமை காலமானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஓ._ஏ._இராமையா&oldid=24130" இருந்து மீள்விக்கப்பட்டது