ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று ஒற்றை மேற்கோள்குறி ஆகும். இது இரட்டை மேற்கோள்குறியோடு சில ஒப்புமைகள் கொண்டுள்ளது.
ஒற்றை மேற்கோள்குறி (' ') இடும் இடங்கள்
ஒரு மேற்கோளுக்குள் இன்னொரு மேற்கோள் வரும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ தொடரையோ தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி பயன்படுகிறது.
ஒற்றை மேற்கோள்குறி இட வேண்டிய இடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் கீழே தரப்படுகின்றன:
- 1) ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- "திருக்குறள் தோன்றிய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்னும் கருத்தை ஏற்கும் திரு முத்துசாமி, அக்கருத்து 'உறுதியாக நிலைநாட்டப்படவில்லை' என்றும் கூறுவது புதிராகவே உள்ளது" என்று அந்த ஆய்வாளர் மொழிந்தார்.
- 2) ஒருவரின் எண்ணத்தை வெளிப்படுத்தும் கூற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- பூங்காவை அடைந்ததும், 'இங்கே இளைப்பாறலாம்' என்று முடிவுசெய்துவிட்டான் கண்ணன்.
- 3) எழுதுபவர் தம் நோக்கில் ஒரு சொல்லையோ தொடரையோ தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- காந்தியை 'மகாத்மா' என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
- 4) கட்டுரை முதலியவற்றில் சொல்லுக்கான வரையறை, கலைச்சொல்லைக் குறிக்கும் பகுதி, மொழிபெயர்க்கப்பட்ட பகுதி போன்றவற்றைக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டு:
- வள்ளுவர் 'வான் சிறப்பு' என்னும் அதிகாரத்தில் மழையின் பெருமையைப் போற்றுகிறார்.
- 5) சந்திப்பின்போது தெரிவிக்கும் சொற்கள், தலைப்பு, பழமொழி, இலக்கிய மேற்கோள் ஆகியவற்றைத் தனித்துக் காட்ட ஒற்றை மேற்கோள்குறி இடுவது முறை.
- எடுத்துக்காட்டுகள்:
- அவர் யாரைப் பார்த்தாலும் 'நலம் தானே!' என்று விசாரிக்காமல் உரையாடலைத் தொடங்கமாட்டார்.
- காதலின் மேன்மையைக் 'குயில் பாட்டு' என்னும் கவிதையில் பாரதியார் பாடியுள்ளார்.
- செல்வன் 'செய்வன திருந்தச் செய்' என்னும் கொள்கையில் மிகவும் பிடிப்புடையவன்.
- வள்ளுவர் 'இடுக்கண் வருங்கால் நகுக' (குறள் 621)என்று கூறியுள்ளார்.
சான்றுகள்
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.