எஸ். வரலட்சுமி
எஸ். வரலட்சுமி (13 ஆகத்து 1927 – 22 செப்டம்பர் 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் பாடகியும் ஆவார். இவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.
எஸ். வரலட்சுமி | |
---|---|
சௌதாமினி (1951) திரைப்படத்தில் எஸ். வரலட்சுமி | |
பிறப்பு | |
இறப்பு | செப்டம்பர் 22, 2009 சென்னை,இந்தியா | (அகவை 82)
குறிப்பிடத்தக்க படங்கள் | சத்தியபாமா |
வாழ்க்கை வரலாறு
வரலட்சுமி ஆந்திரப் பிரதேசம், ஜக்கம்பேட்டை என்ற ஊரில் பிறந்தார். பாலயோகினி (1937) என்ற தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடிப்பதற்காக அதன் இயக்குநர் குடவள்ளி ராமபிரம்மம் 9-அகவைச் சிறுமி வரலட்சுமியைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். இத்திரைப்படங்களின் தயாரிப்பாளர் கே. சுப்பிரமணியம் பின்னர் தனது சேவாசதனம் (1938) என்ற தமிழ்த் திரைப்படத்தில் ம. ச. சுப்புலட்சுமியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்தார்.[1] இத்திரைப்படத்தில் சுப்புலட்சுமியின் இளம் வயதுத் தோழியாக வரலட்சுமி நடித்தார். டி. ஆர். மகாலிங்கத்துடன் பரசுராமர் (திரைப்படம்)|பரசுராமர்]] (தமிழ், 1940) இளம் பெண்ணாக நடித்தார். டி. ஆர். சுந்தரம் இவரைத் தனது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (1947) திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைத்தார். இதில் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்திருந்தார். இது பெரும் வெற்றி பெற்று, பி. எஸ். கோவிந்தன், வரலட்சுமி ஒரு கவர்ச்சியான சோடியாக இத்திரைப்படம் அறிமுகம் செய்தது. பின்னர் சுந்தரத்தின் போஜன் (1948) படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1948 இல் இவரது நடிப்பில் வெளிவந்த பாலராஜு தெலுங்குத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. முன்னணி நடிகர்களான தியாகராஜ பாகவதர் (சியாமளா]]), சிவாஜி கணேசன் (வீரபாண்டிய கட்டபொம்மன்), ம. கோ. இராமச்சந்திரன் (சக்கரவர்த்தித் திருமகள், மாட்டுக்கார வேலன், நீதிக்கு தலைவணங்கு), ஜெமினி கணேசன் (பூவா தலையா, பணமா பாசமா), என். டி. ராமராவ் (சத்ய ஹரிச்சந்திரா), சித்தூர் வி. நாகையா (நாக பஞ்சமி), ரஞ்சன் (என் மகன்), மனோகர் (மாமியார்) போன்ற முன்னணி தமிழ், தெலுங்கு நடிகர்களுடன் நடித்தார். தான் நடித்த அனைத்துப் படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடி நடித்து வந்தார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ. எல். சீனிவாசனைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார்.
விருதுகள்
- கலைமாமணி விருது
- கலைவித்தகர்
- கவிஞர் கண்ணதாசன் விருது (2004)
- சிவாஜி கணேசன் நினைவுப்பரிசு (சிவாஜி குடும்பத்தினர் வழங்கியது) அக்டோபர் 2007
திரைப்படத் துறை பங்களிப்புகள்
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சுவப்னசுந்தரி (1950)
- எதிர்பாராதது (1954)
- சதி சக்குபாய் (1954)
- சக்கரவர்த்தி திருமகள் (1957)
- சதி சாவித்திரி (1957)
- மாங்கல்ய பலம் (1958)
- லவ குச (1963)
- சத்ய அரிச்சந்திரா (1965)
- பாமா விஜயம் (1967)
- ஆபூர்வ பிறவிகள் (1967)
- நத்தையில் முத்து (1973)
- குணா (1992)
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- கந்தன் கருணை
- ராஜராஜ சோழன்
- பூவா தலையா
- சவாலே சமாளி
- நினைத்ததை முடிப்பவன்
- நீதிக்குத் தலைவணங்கு
- மாட்டுக்கார வேலன்
- பணமா? பாசமா?
- அடுத்த வாரிசு
- மோஹன சுந்தரம்
குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடினார்.
நடித்த தெலுங்குத் திரைப்படங்கள்
- கனகதாரா
- கோடாரிகம்
- லாயர் சுகாசினி
- மாமாகாரம்
- சதி துளசி
- டிங்கு ரங்கு
- வய்யாரி பாமா
- பவ்ரு வாகனா
- பால பாரதம் (1972)
- பொம்ம பொருசா (1971)
- பிரேம் நகர் (1971)
- ஆதர்ச குடும்பம் (1969)
- ஸ்ரீ கிருஷ்ணார்ச்சுன யுத்தம் (1963)
- மகாமந்திரி திம்மரசு (1962)
- ஸ்ரீ வெங்கடேசுவர மகாத்மியம் (1960)
- வாலி சுக்ரீவா (1950)
- ஜீவிதம் (1949)
- பாலராஜூ (1948)
- சேவா சதன் (1938)
- பாலயோகினி (1936)
மறைவு
சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார்[2]. இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Melody-filled screen presence by Randor Guy in The Hindu, 2009
- ↑ "தினமணி செய்தி|பார்க்கப்பட்ட நாள் 23 செப் 2009" இம் மூலத்தில் இருந்து 2009-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090929163749/http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Cinema&artid=128942&SectionID=141&MainSectionID=141&SEO=&Title=.