அருங்கலச்செப்பு

அருங்கலச்செப்பு ஒரு தமிழ் நீதி நூல்.
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நூல் பெயர் தெரியாத சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது.
இதில் 180 குறள் வெண்பாக்கள் உள்ளன.
‘ரத்ன கரண்ட சிராவகாசாரம்’ என்னும் வடமொழி நூலின் மொழிபெயர்ப்பு இது என்று கருதப்படுகிறது. [1]
இந்நூல் சமண இல்லறத்தார் பின்பற்ற வேண்டிய கடமைகளைக் கூறுகிறது.

  • இந்த நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு.

நூலின் பாங்கு

  • 'அருங்கலச் செப்பு' என்னும் தனது நூலின் பெயரைத் தானை 3 இடங்களில் குறிப்பிடுகிறது.[2]
  • திருக்குறள் ஒன்றை அப்படியே எடுத்தாள்கிறது.[3]
  • சற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என அறத்தை இந்நூல் பகுத்துப் பார்க்கிறது. நல்லொழுக்கத்தை இல்லறம், துறவறம் எனப் பகுத்துக்கொண்டுள்ளதுந
  • கிறிஸ்துவுக்கு முன் இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய பஞ்சத்தின்போது தென்னாட்டுக்குப் பிழைக்க வந்த சமணர் மைசூர் சிரவண பெள்குளம் என்னுமிடத்தில் தங்கி, 'திரமிள சங்கம்' ஒன்றைத் தோற்றுவித்தனர். இவர்களின் பிரிவுகளில் ஒன்று 'நந்தி' கணம். இது 'அருங்கலான்வயம்' என்னும் பெயராலும் வழங்கப்பட்டது. இந்த மரபினரில் ஒருவர் இந்த நூலைச் செய்தவர் ஆகலாம்.
  • வடசொற்களை இந்நூல் பாகத-மொழி வடிவில் தமிழ்ப்படுத்தியுள்ளது.
இந்திரியம் - இந்தியம்
பிரமச்சாரி - பம்மன்
பிரமாதம் - பாமாதம்
மோகம் - மோவம்
விரதம் - வதம்
விஷ்ணு - விண்ணு

மேற்கோள்கள்

அடிக்குறிப்பு

  1. 'அருங்கலச் செப்பு' என்னும் தொடர் சிலப்பதிகாரம், ஊர்காண் காதை அடி 28, சீவக சிந்தாமணி 557 ஆகிய நூல்களில் பயின்று வந்துள்ளதை இந்த வடமொழி நூல் மொழிபெயர்த்துக்கொண்டது என்பது மு. அருணாசலம் கருத்து.
  2. அருங்கலச் செப்பினை ஆற்றத் தெளிந்தார்
    ஒருங்கடையும் மாண்பு திரு. (175)

    முத்தி நெறிகாட்டும் முன்அறியா தார்க்கெல்லாம்
    சித்தி அருங்கலச் செப்பு (179)

    தீரா வினைதீர்க்கும் சித்திபதம் உண்டாக்கும்
    பாராய் அருங்கலச் செப்பு (180)

  3. காமம் வெகுளி மயக்கம் இவைமான்றின்
    நாமம் கெடக்கெடும் நோய் (178)

"https://tamilar.wiki/index.php?title=அருங்கலச்செப்பு&oldid=17120" இருந்து மீள்விக்கப்பட்டது