பி. எச். அப்துல் ஹமீட்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. எச். அப்துல் ஹமீட்
பி. எச். அப்துல் ஹமீட்
இயற்பெயர்/
அறியும் பெயர்
பி. எச். அப்துல் ஹமீட்
B. H. Abdul Hameed
பிறப்புபெயர் அப்துல் ஹமீது
பிறந்தஇடம் தெமட்டகொடை, கொழும்பு
தேசியம் இலங்கை
கல்வி தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயம்
அறியப்படுவது கலைப்பணி வானொலி ஒலிபரப்பாளர்
பெற்றோர்
  • ஹசன் (தந்தை)
  • ஹாசியா உம்மா (தாய்)
இணையதளம் பி. எச். அப்துல் ஹமீட்

பி. எச். அப்துல் ஹமீட் (B. H. Abdul Hameed) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட, பன்னாட்டுப் புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் அறிவிப்பாளரும், வானொலி, மேடை நாடக, மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்டகாலமாக அறிவிப்பாளராக பணியாற்றியவர். அமீட் தமிழர் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளுக்கும், இந்தியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல் ஹமீது கொழும்பு நகரில், தெமட்டகொடை என்ற புறநகர்ப் பகுதியில், ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு, நான்காவது மகனாகப் பிறந்தவர் ஆவார். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும் போதே, தந்தையார் காலமாகி விட்டார். தாயார் கடையப்பம் தயாரித்து தர, அதை இவர் சுமந்து விற்று வருவார்[1].

ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். அங்கு இவர் ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம், ஆகியோரிடம் தமிழ் கற்றார். பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1960 ஆம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார்[1].

வானொலியில்

சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில், இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமான நாடகம், மற்றும் உரைச்சித்திரம், தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக இவர் நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர்[1]. செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார்.

இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே, ஏராளமான நிகழ்ச்சிகளை, வர்த்தகசேவையிலும், தேசியசேவையிலும், தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.

இவர் தயாரித்த வானொலி நாடகங்கள்

"பாட்டுக்கு பாட்டு" முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை, வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள், கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பை பெறுகின்றன.

தொலைக்காட்சியில்

இந்திய தொலைக்காட்சி நிலையங்கள், இவர் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

திரைப்படங்களில்

இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர், தென்னிந்திய சினிமாவிலும் நடித்துள்ளார். கே. எஸ். ரவிகுமாரின் "தெனாலி", மணிரத்தினத்தின் " கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.

பாடலாசிரியர்

இலங்கையிலும், இந்தியாவிலும் பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.

வெள்ளிவிழாக் கலைஞர்

1990 ஆம் ஆண்டு தனது கலையுலக நண்பர்களான எஸ். ராம்தாஸ், எஸ். செல்வசேகரன், ரி. ராஜகோபால், கே. எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் வெள்ளிவிழாவைக் கொண்டாடினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._எச்._அப்துல்_ஹமீட்&oldid=16657" இருந்து மீள்விக்கப்பட்டது