கே. கணேஷ்
கே. கணேஷ் | |
---|---|
பிறப்பு | 02-03-1920 |
மறைவு | 05-06-2004 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கல்வி | கண்டி புனித, |
அந்தோனியார் கல்லூரி | |
கே. கணேஷ் (2 மார்ச் 1920 – 5 சூன் 2004) இலங்கையின் மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த கணேஷ் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார்.
எழுத்தாளராக
நவசக்தி, லோகசக்தி ஆகிபோன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார்.
கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார்.
1946 இல் 'பாரதி' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார்.
மொழிபெயர்ப்புத் துறையில்
மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
மொழிபெயர்ப்பு நூல்கள்
- தீண்டத்தகாதவன் (முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் Untouchables (1947)
- குங்குமப்பூ (1956, கே. ஏ. அப்பாசின் புதினம்)
- அஜந்தா (கே. ஏ. அப்பாசின் புதினம்)
- ஹோசிமின் கவிதைகள் (1964)
- லூசுன் சிறுகதைகள
- உக்ரேனிய அறிஞர் இ்வன்ஃபிராங்கோ கவிதைகள் (1994)
- பாரதி பக்தன் பார்பரா கவிதைகள் (1989)
விருதுகள்
- இலக்கியச் செம்மல் (1991), தேசிய விருது
- கலாபூஷணம் (1995), தேசிய விருது
- விபவியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகள் இரு முறை.
- கனடாவின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது.
மறைவு
கே. கணேஷ் 2004 ஆம் ஆண்டில் தனது 86வது வயதில் மலையகத்தின் தலாத்து ஓயா என்ற ஊரில் காலமானார்.