கா. நமச்சிவாயம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கா. நமச்சிவாயம்
கா. நமச்சிவாயம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கா. ரா. நமச்சிவாய முதலியார்
பிறந்ததிகதி (1876-02-20)20 பெப்ரவரி 1876
பிறந்தஇடம் காவேரிப்பாக்கம், வட ஆற்காடு மாவட்டம் (இன்றைய இராணிப்பேட்டை மாவட்டம்), தமிழ்நாடு
இறப்பு மார்ச்சு 13, 1936(1936-03-13) (அகவை 60)
பணி பேராசிரியர்
அறியப்படுவது தமிழறிஞர்
பெற்றோர் இராமசாமி முதலியார்
அகிலாண்டவல்லி
பிள்ளைகள் தணிகைவேல், தணிகைமணி[1]

பண்டிதர் கா. ரா. நமச்சிவாய முதலியார் (Pandit C. R. Namasivaya Mudaliar[2], 20 பெப்ரவரி 1876[3] – 13 மார்ச்சு 1936) தமிழகத்தின் சிறந்த புலவராகவும், தமிழறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் விளங்கியவர்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில்[2] ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார்.[4]

தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார்.[4]

நமச்சிவாயர் திருத்தணிகை முருகன் பக்தர். மாதந்தோறும் கிருத்திகையன்று திருத்தணிகை சென்று தணிகைவேலனை வழிபடும் வழக்கம் கொண்டவர்.[1]

நமச்சிவாயரின் மூத்த மகன் தணிகைவேல் சென்னை மாநிலக் கல்லூரியில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலுவின் வகுப்புத் தோழர். ஒரே வகுப்பில் படித்தவர்.[1]

தமிழாசிரியராகப் பணி

தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார்.[4]

பின்னர், ராயபுரத்தில் இருந்த "நார்த்விக்' மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்' கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.[4]

1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் இராணி மேரிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.[2] 1917 இல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க் குழுவில் தலைமைத் தேர்வாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பண்டிதர் ஈ. வி. அனந்தராம ஐயர் இறந்ததை அடுத்து அவரது இடத்திற்கு நமச்சிவாய முதலியார் நியமிக்கப்பட்டு,[2] 1920 முதல் 1934 வரை பணியாற்றினார்.[5] உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர்.[4]

சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன்,நீதிபதி அழகிரிசாமி,முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் எஸ்.ராமசாமி ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.[1]

அரசுப் பணி

1917-ஆம் ஆண்டில் அப்போதிருந்த தமிழ்க் கழகத்தின், தலைமைத் தேர்வாளராக நமச்சிவாயரை அன்றைய ஆங்கிலேய அரசு நியமித்தது. 1918-ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வி அரசாங்க சங்கத்தில் உறுப்பினர் பதவியை ஏற்றார். 1920-இல் இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934 வரை இப்பதவியில் தொடர்ந்தார்.[4]

இவரது காலத்தில், ‘தமிழ் வித்துவான்’ தேர்வை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அதற்கு முன், வடமொழி பயில்வோருக்கு மட்டுமே பல்கலைக்கழகத் தேர்வு இருந்து வந்தது.[5] மேலும், பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமனம் பெறவும், ஊதிய உயர்வு வழங்கிடவும் இவர் பாடுபட்டார்.[5] மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை விரும்பி கற்கும் வகையில் ‘தமிழ்ச் சிற்றிலக்கணம்’ எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.[5] ‘தமிழ்ப் புலவர் சங்கம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.[5]

தை முதல் நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தார். திருவள்ளுவருக்கு முன் - திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும், மறைமலை அடிகளாரும் இருந்தனர். நமச்சிவாயரது தமிழ்ப்பணி அனைத்துக்கும் பனகல் அரசர், தமிழவேள் சர் பி.டி.இராஜன், டாக்டர் ஏ.எல்.முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.[4]

நூல்கள் இயற்றல்

தமிழ் பாடநூல்கள்

1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன.[4]

அச்சமயம் பள்ளிப்பாட நூல்கள் அரசுடமை ஆகவில்லை. நமச்சிவாயரின் நூல்களைப் பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதிப் பிழைத்து வந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார்.ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது.[4]

மேலும் அந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து நமச்சிவாயரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற நமச்சிவாயருக்கு ஆணை வழங்கியது.[1]

நாடக நூல்கள்

பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின.[4]

உரைகள்

சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். "நன்னூல் காண்டிகை' என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார். "தமிழ்க்கடல்' என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார்.[4]

இதழாசிரியர்

"நல்லாசிரியன்' என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். "ஜனவிநோதினி' என்ற மாத இதழில் சிறந்த கட்டுரைகளையும் எழுதிவந்தார் நமச்சிவாயர்.[4]

நினைவுகள்

இவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் இயங்கும் ஏ.ஆர்.சி.மகளிர் பள்ளியில் நக்கீரர் கழகம் - திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியின் காப்பாளர், சிறுவை மோகனசுந்தரம் என்ற அருந்தொண்டர், ஆண்டுதோறும் பல தமிழ் அறிஞர்களை ஒன்றுதிரட்டி, "நமச்சிவாய நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியை 1988 வரை நடத்தி பேராசிரியருக்குப் பெருமை சேர்த்தார் என்பதும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இவர் பெயரால் அமைந்த "நமச்சிவாயபுரம்" என்றும் குடியிருப்புப் பகுதியும் இவரது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கின்றன.[4]

இயற்றிய நூல்கள் சில

  • கீசகன் - நாடகம்
  • பிருதிவிராஜன் - நாடகம்
  • தேசிங்குராஜன்
  • ஜனகன்

உரையெழுதிப் பதிப்பித்த நூல்கள்

  • ஆத்திச்சூடி
  • வாக்குண்டாம்
  • நல்வழி
  • தொல்காப்பியம் பொருளதிகாரம்
  • இளம்பூரணம்
  • தணிகைப் புராணம்
  • தஞ்சைவாணன் கோவை
  • இறையனார் களவியல்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பக்கம் 185-198
  2. 2.0 2.1 2.2 2.3 நுண் பொருள் மலர். 16-03-1937. https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZtekutd&tag=%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D#book1/. பார்த்த நாள்: 22-02-2020. 
  3. அருணகிரிநாதர், எஸ். எஸ். (ஏப்ரல் 1936). "உயர்திருவாளர் கா. நமச்சிவாய முதலியார் வாழ்க்கை வரலாறு". குமார விகடன் 3 (12): 729-735. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 வள்ளல் கா.நமச்சிவாயர்[தொடர்பிழந்த இணைப்பு], பேரா. ஆ. திருஆரூரன், தினமணி, அக்டோபர் 4, 2009
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 தயாளன், பி (29 டிசம்பர் 2014). "பைந்தமிழ் ஆசான்’ நமச்சிவாய முதலியார்". கீற்று.காம் இம் மூலத்தில் இருந்து 2015-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150412111802/http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/27594-2014-12-29-02-06-06. 
"https://tamilar.wiki/index.php?title=கா._நமச்சிவாயம்&oldid=27697" இருந்து மீள்விக்கப்பட்டது