கவிதா கிருஷ்ணமூர்த்தி
கவிதா கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
கவிதா கிருஷ்ணமூர்த்தி 2012 | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கவிதா கிருஷ்ணமூர்த்தி |
பிறப்பு | சனவரி 25, 1958 |
பிறப்பிடம் | டெல்லி, இந்தியா |
இசை வடிவங்கள் | பாடகி, fusion, pop |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1980–நடப்பு |
கவிதா கிருஷ்ணமூர்த்தி (Kavita Krishnamurti) ஓர் இந்திய பாடகியாவார். இவர் நான்கு முறை பிலிம்பேர் சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றவர். இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்மசிறீ விருதினை’ வென்றவர்.[1][2][3]
திரையிசையோடு, பல்வேறு கலந்திணைப்பு பாடல்கள், பாப், பக்திப் பாடல்கள் என பலவிதமான பாடல்களைப் பாடுகிறார்.
பிறப்பு
கவிதா கிருஷ்ணமூர்த்தி, புது தில்லியில், ஜனவரி மாதம் 25 ஆம் தேதி, 1958 ஆம் ஆண்டில் பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘சாரதா கிருஷ்ணமூர்த்தி’. இவரது தந்தை, கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சகத்தில் பணிபுரிந்து வந்தார், இவரது தாயார் பாரம்பரிய இந்திய இசையின் மீதும் நடனத்தின் மீதும் பற்றுடைவராக இருந்தார்.
கல்வி
கவிதா கிருஷ்ணமூர்த்தி, முதலில் இந்துஸ்தானி இசையைக் கற்றார். பின் தனது அத்தையிடமிருந்து ‘ரபீந்திர சங்கீத்’ இசைமுறையைப் பயின்றார். தனது பதினோராவது வயது வரை, டெல்லியில் இருந்த அவர், மும்பையில் உள்ள [[புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ ஹானர்ஸ்) பெற்றார்.
இசை உலகிற்கு வருகை
பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஹேமந்த் குமாரின் இசையில் பெங்காலி பாடலை, லதா மங்கேஷ்கருடன் தனது ஒன்பது வயதில் பாடினார். தனது கல்லூரியில் நடந்த இசைப் போட்டிகளில் பங்கேற்ற ஒவர், ஹேமந்த் குமார் அவர்களின் மகளான ‘ரணு முகர்ஜி’ என்பவரை சந்தித்தார். அவர் மூலமாக ஹேமந்த் குமாரை மீண்டும் சந்தித்த இவர், மேடைக் கச்சேரிகளில் பாடகியாகப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். இவரது அத்தையின் தோழியும், நடிகையும், ஹேம மாலினி அவர்களின் அன்னையுமான ஜெயா சக்கரவர்த்தி, பிரபல இசையமைப்பாளர் லட்சுமிகாந்திடம் அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தொழில் வாழ்க்கை
1980ல் ‘மாங் பரோ சஜ்னா’ என்ற படத்தில் முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல், அப்படத்தில் இடம் பெறவில்லை. மீண்டும், ஐந்து ஆண்டுகள் கழித்து, ‘ப்யார் ஜுக்தா நஹி’ என்ற படத்தில் ‘தும்சே மில்கர் நா ஜானே க்யூன்’ என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் பெரும் வெற்றி பெற்றதால், அவருக்குத் தொடர்ந்து பாட வாய்ப்புகள் கிடைத்தன. ‘மிஸ்டர். இந்தியா’ (1987) படத்தில், அவர் பாடிய ‘ஹவா ஹவா’ மற்றும் ‘கர்தே ஹைன் ஹம் ப்யார் மிஸ்டர். இந்தியா சே’ பாடல்கள் அவரை மிகவும் பிரபலபடுத்தின. லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலாலுடன் இணைந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்த இவர், ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘யாரானா’, ‘அக்னி சாக்ஷி’, ‘பைரவி’, மற்றும் ‘காமோஷி’ போன்ற படங்களில் பல பாடல்களைப் பாடி 90களில் முன்னணி பின்னணிப் பாடகியாக விளங்கினார். பப்பி லஹரி, ஆனந்த்-மிலிந்த், ஏ. ஆர். ரகுமான், இஸ்மாயில் தர்பார், நதீம்- சிரவண் , ஜதின் லலித், விஜூ ஷா மற்றும் அனு மாலிக் எனக் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.
இல்லற வாழ்க்கை
கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்து, மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம் என்பவரை நவம்பர் மாதம் 11 ஆம் தேதி, 1999 ஆம் ஆண்டில் மணமுடித்தார். அவர்கள் இருவருக்கும் குழந்தைகள் ஏதும் இல்லை.
விருதுகள்
- 2000 – ‘பாலிவுட் விருது’
- 2005 – இந்தியாவின் நான்காவது உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ விருது’ வென்றார்.
- 2008 – ‘யேசுதாஸ் விருது’
- சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருதினை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற அவர், 1995ல், ‘பியார் குவா சுப்கே சே’ என்ற பாடலுக்காகவும், 1996ல், ‘மேரா பியா கர் ஆயா’ என்ற பாடலுக்காகவும், 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
- ஸ்டார் ஸ்கிரீன் விருதுகளை 1997ல், ‘ஆஜ் மெய்ன் ஊபர்’ என்ற பாடலுக்காகவும், 2000 ஆம் ஆண்டில் ‘ஹம் தில் தே சுகே சனம்’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
- ஜீ சினி விருதுகளை 2000 ஆம் ஆண்டில், ‘நிம்பூடா’ என்ற பாடலுக்காகவும், 2003ல், ‘டோலா ரெ டோலா’ என்ற பாடலுக்காகவும் கிடைத்தது.
வெளி இணைப்புகள்
http://www.itstamil.com/kavita-krishnamurthy.html பரணிடப்பட்டது 2015-03-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ "Kavita Krishnamurti's new music series - The Hindu" https://www.thehindu.com/entertainment/music/kavita-krishnamurtis-new-music-series/article36379306.ece/amp/ பரணிடப்பட்டது 31 சனவரி 2022 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Mathur, Abhimanyu (19 November 2015). "Kavita Krishnamurthy: I have a long and deep connection with Delhi" இம் மூலத்தில் இருந்து 1 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200201132245/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Kavita-Krishnamurthy-I-have-a-long-and-deep-connection-with-Delhi/articleshow/49830637.cms.
- ↑ "लता संग 9 साल की उम्र में गाया गाना, ऐसे संवरा कविता कृष्णमूर्ति का करियर" (in hi). 25 January 2020 இம் மூலத்தில் இருந்து 14 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220114072034/https://www.aajtak.in/entertainment/story/kavita-krishnamurthy-bollywood-singer-birthday-special-unknown-facts-popular-songs-tmov-1017598-2020-01-25.