வெங்கடராமன் இராகவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெங்கடராமன் இராகவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வெங்கடராமன் இராகவன்
பிறந்ததிகதி 1908
இறப்பு 1979
அறியப்படுவது சமசுகிருத அறிஞர்
இசையமைப்பாளர்
குறிப்பிடத்தக்க விருதுகள் பத்ம பூசண், சாகித்ய அகாடமி

வெங்கடராமன் இராகவன் (Venkataraman Raghavan)(1908-1979) என்பவர் சமசுகிருத அறிஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் பத்ம பூசண் மற்றும் சமசுகிருதத்திற்கான சாகித்ய அகாடமி விருது உட்படப் பல விருதுகளைப் பெற்றவர். மேலும் 120 புத்தகங்கள் மற்றும் 1200 கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1]

கல்வி மற்றும் வாழ்க்கை

இராகவன் தென்னிந்தியாவின் (தமிழ்நாடு) ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் 1908 ஆகத்து 22-ல் பிறந்தார். 1930-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் 3 கல்லூரி பரிசுகள் மற்றும் 5 பல்கலைக்கழக பதக்கங்களுடன் பட்டம் பெற்றார். இவர் சமசுகிருத மொழி மற்றும் இலக்கியத்தில் ஒப்பீட்டு மொழியியல் மற்றும் இந்தியத் தத்துவத்தின் நான்கு பிரிவுகளில் மகாமஹோபாத்யாயா பேராசிரியர் எஸ். குப்புசுவாமி சாசுதிரியின் கீழ் தனது முதுகலைப் பட்டத்தினைப் பெற்றார். அலங்காரம் மற்றும் நாட்டிய சாஸ்திரங்கள் மற்றும் சமசுகிருத அழகியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற இவர் 1934-1935 முனைவர் பட்டம் பெற்றார். இவரின் ஆய்வு வழிகாட்டியாக எஸ். லெவி, எப். டபுள்யூ தாமஸ் மற்றும் ஏ. பீ. கீத் செயல்பட்டனர். சமசுகிருதத்தைப் பாரம்பரியமாகப் படித்துப் பேசுவதிலும் எழுதுவதிலும் பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றார். தஞ்சை சரசுவதிமகால் நூலக (கையெழுத்துப் பிரதி நூலகம்) குறுகிய கால பணிக்குப்பின் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் துறையில் சேர்ந்தார். இங்கு இவர் ஒரு ஆராய்ச்சி அறிஞராக இருந்து, பேராசிரியராக உயர்ந்து 1968 வரை சமசுகிருதத் துறையின் தலைவராக இருந்தார்.

சமசுகிருதம்

இவர் சமசுகிருதத்தில் இசை மற்றும் அழகியல் பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார்.[2]

1963ஆம் ஆண்டில், இவர் போஜாவின் ஷ்ங்கார-பிரகாஷாவைத் திருத்தி மொழிபெயர்த்தார். இது 36 அத்தியாயங்களில் கவிதை மற்றும் நாடகம் இரண்டையும் கையாளும் ஒரு கட்டுரையாகும்.[3] மேலும் இது சமசுகிருத மொழிக் கவிதைகளில் அறியப்பட்ட மிகப்பெரிய படைப்பாகும். இந்தப் பணிக்காகவும் இவரது வர்ணனைக்காகவும் 1966ஆம் ஆண்டு சமசுகிருதத்திற்கான சாகித்ய அகாதமியின் விருதைப் பெற்றார். 1969-ல் மதிப்புமிக்க ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கப்பட்டது.[4] 1998-ல் ஹார்வர்ட் ஓரியண்டல் தொடரின் தொகுதி 53 ஆக வெளியிட இந்த நிதியுதவி வழிவகுத்தது.

இவர் சமசுகிருதத்தில் இரவீந்திரநாத் தாகூரின் முதல் நாடகமான வால்மீகி பிரதிபாவினை மொழிபெயர்த்தார். இது வால்மீகியை ஒரு கொள்ளைக்காரனிலிருந்து கவிஞராக மாற்றுவதைக் குறிக்கின்றது.[5]

மயூராஜாவின் உடத்த ராகவம் என்ற பழங்கால சமசுகிருத நாடகத்தைக் கண்டுபிடித்துத் திருத்தினார்.[1]

இவர் 1958-ல் சம்ஸ்கிருத ரங்கா என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு சமசுகிருத நாடகங்களைக் கையாள்கிறது. மேலும் இராகவன் சமசுகிருத நாடகங்களை இயற்றத் தொடங்கினார்.[5]

இவரின் முதன்மை நூல்களின் அமைப்பு, கட்டுரைகள் மற்றும் வர்ணனைகள் மூலம் நன்கு அறியப்பட்டார்.[1]

இராகவனின் உத்தியோக பூர்வ வாழ்க்கையின் முக்கிய திட்டமான தி நியூ கேடலோகசு கேடலோகோரம் (என்சிசி)-ல் பணியாற்றினார். 1953-54-ல் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து, பன்னாட்டு மாநாடுகளில் கலந்துகொள்வதுடன், பட்டியலிடப்படாத 20,000 கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஐரோப்பாவில் சமசுகிருதம் மற்றும் இந்தோலாஜிக்கல் ஆய்வுகள் பற்றிய ஒரு கணக்கெடுப்பைத் தயாரித்தனர். 1958 மற்றும் 1974 சோவியத் ஒன்றியத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றார். இப்பயணத்தில் விரிவுரைகள், மாநாடுகள், கையெழுத்துப் பிரதிகள் சேகரிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார். கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, மொரிசியசு, கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்குச் சென்று கையெழுத்துப் பிரதிகள் ஆய்வுக்காகவும் சென்றார். இரண்டு முறை நேபாளத்திற்கும் சென்றுள்ளார்.

இசை

இசையமைப்பாளராக, கர்நாடக இசையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார் இராகவன். 1944 முதல் இவர் இறக்கும் வரை சென்னை மியூசிக் அகாதெமியின் செயலாளராக இருந்தார். "முனைவர் வி. இராகவன் ஆராய்ச்சி மையம்" என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் ஜகத்குரு சிறீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் மீது "சந்திரசேகரம் ஆஷ்ரயே" என்ற பாடலையும் இயற்றியுள்ளார். இதனைப் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் திருமதி. ம. ச. சுப்புலட்சுமி பாடினார்.

பெருமை

இவரது பிறந்த நூற்றாண்டு விழா ஆகத்து 2008-ல் கொண்டாடப்பட்டது.[1] இவரது 60வது பிறந்தநாளில் அப்போதைய குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் வி.வி.கிரி உள்ளிட்டோர் அளித்த அஞ்சலிகளைத் தொகுத்து ஸ்மிருதி குசுமாஞ்சலி என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வெங்கடராமன்_இராகவன்&oldid=7579" இருந்து மீள்விக்கப்பட்டது