வி. தெட்சணாமூர்த்தி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. தெட்சணாமூர்த்தி
Thetchanamoorthy.jpg
தவில் இசைவித்தகர்
பிறப்பு ஆகத்து 26, 1933
இணுவில்,யாழ்ப்பாணம்,இலங்கை
இறப்பு மே 13, 1975(1975-05-13) (அகவை 41)
இலங்கை
பணி தவில் இசைக்கலைஞர்
துணை மனோன்மணி

வி. தெட்சணாமூர்த்தி (ஆகஸ்ட் 26, 1933மே 13, 1975) ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது முன்னோர்கள் தமிழ்நாடு மன்னார்குடியில் திருப்பளிச்சம்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.[1] இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது.

இசை வாழ்வு

இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்றபோது, ஒரு சிறுவன் வாசிக்கிறான் என்று சொன்னார்கள். காவேரிக் கரையில் நாம் பார்க்காத கலைஞர்களா என்று சற்று இளக்காரமாய்த்தான் நினைத்தோம். அந்தச் சிறுவன் வாசித்துக் கேட்டதும் புல்லரித்துப் போனோம்" என்று மெச்சியுள்ளார்.[2]

இந்தியப் பெருங் கலைஞரான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார்.[3] தொடர்ந்து இந்திய நாதசுவர மேதைகளாகிய காருக்குறிச்சி அருணாசலம், சேக் சின்ன மௌலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை விழாக்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈழத்திலும் பி. எஸ். ஆறுமுகம்பிள்ளை, என். கே. பத்மநாதன், கே. எம். பஞ்சாபிகேசன், திருநாவுக்கரசு ஆகியோருக்கும் தவில் வாசித்தார். தெட்சணாமூர்த்தி தவில் வாத்தியத்தில் முதன் முறையாக பதினொரு எண்ணிக்கை கொண்ட கதி ஒன்றை அமைத்து அதற்கு உத்தரகதி எனப் பெயர் வைத்தார்.[1]

கிருட்டிண கான சபையில் இவர் வாசிப்பைக் கேட்ட பாலக்காடு மணி அய்யர், இவரை உலகின் 'எட்டாவது அதிசயம்' என்று சொன்னார்.[2] ஒரு அட்சரத்தில் மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது மாத்திரைகள் வரும் நடைகளே நடைமுறையில் இருக்க, ஒரு அட்சரத்தில் 11, 13 மாத்திரைகள் வரும் வகையில் நடை அமர்த்தி, முதன்முதலில் வாசித்தவர் தெட்சிணாமூர்த்தி பிள்ளை தான். எவ்வளவு நேரம், எவ்வளவு வேகமாக வாசித்தபோதும் ஒவ்வொரு சொல்லும் அதற்கு உரிய கனமுடன், தெள்ளத் தெளிவாய் வாசிக்கும் திறன், அவரின் தனிச் சிறப்பு.

திருமண வாழ்வு

இணுவிலிலே வாழ்ந்த தந்தையார் காலமாக தனது மூத்த தமக்கையார் கணேசு இராஜேஸ்வரி வாழ்ந்த அளவெட்டியிலே சென்று குடியேறினார் தட்சிணாமூர்த்தி. இவரது திருமணம் 1957ஆம் ஆண்டு நடைபெற்றது. அளவெட்டி தவிற்கலைஞர் செல்லத்துரைப்பிள்ளையின் மகளான மனோன்மணியைத் திருமணம் புரிந்து கலாதேவி, உதயசங்கர், ரவிசங்கர், உதயசெல்வி, ஞானசங்கர் என ஐந்து பிள்ளைகளைப் பெற்றார். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர் (17 மார்ச் 1969 — 21 மே 2016).

பெற்ற விருதுகள்

தெட்சணாமூர்த்திக்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" விருது கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் 1968 இல் வழங்கப்பட்டது. வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970களில் இலங்கை வந்து 13. மே 1978 இல் காலமானார்.

ஆவணப் படம்

யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி பற்றிய ஆவணத் திரைப்படம் 2015 ஏப்ரலில் வெளியானது.[4] இதனை சித்தார்த்த புரொடக்சன்சு சார்பில் அம்சன் குமார் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் தேசிய விருது (வெள்ளித் தாமரை (ரஜத் கமல்) விருதுடன் 50,000 இந்திய உரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 தஞ்சாவூர் பி. எம். சுந்தரம். மங்கள இசை மன்னர்கள். மெய்யப்பன் தமிழைவகம், சென்னை. https://www.youtube.com/watch?v=w6zNvrrRRUs. 
  2. 2.0 2.1 மறக்கப்பட்ட மாமேதைகள், தினமலர், திசம்பர் ௨௩, ௨௦௧௪
  3. Centenary celebration, தி இந்து, நவம்பர் 11, 2010
  4. சாருகேசி (22 அக்டோபர் 2015). "Thavil beats from Jaffna". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/music/thavil-beats-from-jaffna/article7792535.ece. பார்த்த நாள்: 31 மார்ச் 2016. 
  5. "63rd NATIONAL FILM AWARDS FOR 201 5". http://dff.nic.in/writereaddata/Winners_of_63rd_NFA_2015.pdf. பார்த்த நாள்: 29 மார்ச் 2016. 
  6. "Bachchan, Kangana win big at Bollywood heavy National Awards". பிசினெசு ஸ்டான்டர்டு. 28 மார்ச் 2016. http://www.business-standard.com/article/pti-stories/bachchan-kangana-win-big-at-bollywood-heavy-national-awards-116032800333_1.html. பார்த்த நாள்: 29 மார்ச் 2016. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வி._தெட்சணாமூர்த்தி&oldid=8400" இருந்து மீள்விக்கப்பட்டது